இந்த வாரம், பல்வேறு பாக்களுக்கும் தமிழிசை என்று அழைக்கப்படும் கர்நாடக சங்கீதத்திற்கும் உள்ள உறவினை பற்றி பார்ப்போம்.
பல தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள செய்யுள்களுக்கு மேலே அதனுடைய பண்ணும், அதன் தாளமும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பண் என்பது இன்று நாம் கூறக்கூடிய ராகத்தினை குறிக்கும். தாளம் என்ற சொல் இன்றும் அதன் தன்மை மாறாமல் அதே பொருளையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. கலிப்பாவில் நாம் பார்த்த தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புகள், கர்நாடக சங்கீதத்தில் பல்லவி, அநு பல்லவி, சரணம், கல்பனாஸ்வரங்கள், சிட்டை ஸ்வரங்கள், ஜதி, கமகம் போன்ற பல உறுப்புகளின் மூலமாகும். பொதுவாக கர்நாடக சங்கீதத்தில், கானக்கிரமம் என்பது ஒரு பாடலில் வரவேண்டிய பல்வேறு உறுப்புகளையும் அதற்குரிய நியமங்களையும் குறித்து கூறுவது. அதையே யாப்பிலக்கணத்திலும் ஒவ்வொரு பாவிற்கும் இதுதான் விதி என்று விதிக்கப்பட்டு அந்த விதிக்குள்ளேயே அந்த செய்யுள் அமைவது இவை இரண்டிற்கும் பொதுவானதாக உள்ளது.
எந்த நிலத்தில் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை), எந்நேரத்தில் (வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்), எந்த காலத்தில் (கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம் முதுவேனிற் காலம்) எப்படிப்பட்ட ராகத்தில் எம்மாதிரியான தாளத்தில், எவ்வகையான யாழினை பயன்படுத்தி ஒரு பாடலை பாட வேண்டும் என்பதை யாப்பிலக்கணம் நமக்கு மிகவும் விரிவாகவே விளக்குகிறது. அதை கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசை இன்றளவும் அந்த விதியும் பாரம்பரியமும் மாறாமல் பின்பற்றி வருகின்றன. எடுத்துக்காட்டாக குறிஞ்சி நிலத்தின் சிறுபொழுது யாமம் என்று கூறக்கூடிய நடு இரவாகும். பொதுவாக இரவினில் அனைவரும் தூங்க செல்வதால் அதற்குரிய ராகங்களான நீலாம்பரி, நடபைரவி, அமிர்தவர்ஷினி போன்ற ராகங்களை பாடுவார்கள். இவைகளின் பழமையான தமிழ் பெயர்களை பார்த்தோம் என்றால், இவைகளுக்கு குறிஞ்சி நிலத்தின் சம்பந்தம் கண்டிப்பாக இருக்கும். வியாழக் குறிஞ்சி (செளராஷ்டிரம் ராகம்), மேகராகக் குறிஞ்சி (நீலாம்பரி), குறிஞ்சியாழ் (நடபைரவி), அந்தாளிக் குறிஞ்சி (சாமா ராகம்), கேதாளிக்குறிஞ்சி (கேதாரம் ராகம்), சாவகக் குறிஞ்சி (முக்திதாயினி), முதிர்ந்த குறிஞ்சி (சுத்த தன்யாசி - இன்றைய காலகட்டத்தில் விடியற்காலையில் பாடப்படுகிறது). இப்படி அறிவியல் பூர்வமாகவும் மிகவும் நுட்பமாகவும் உருவாக்கப்பட்ட யாப்பிலக்கண வகைகளை தான் கர்நாடக சங்கீதம் இன்று பயன்படுத்தி வருகிறது. தமிழிசை என்றும் இசைத்தமிழ் என்றும் பழம் தமிழரால் வழங்கப்பட்டு வந்த இசை வடிவத்தையே இன்று நாம் கர்நாடக சங்கீதம் என்று கூறுகிறோம்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக எந்த ஒரு தொடர்பும் அறுந்து போகாமல் அன்று உள்ளது போலவே இன்றும் நம்மிடையே யாப்பிலக்கணம் இசை தமிழும் உள்ளன. அவற்றை என்றும் மாறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாக உள்ளது. அடுத்த தலைமுறையினரும் தமிழிசையையும் யாப்பிலக்கணத்தையும் நன்றாக அறிந்து அவற்றின் மூலமாக பயன்பெற வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் முதல் அணி இலக்கணத்தை பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload