தொடர்கள்
கதை
புறா வீடு முனைவர் என் பத்ரி

20250101104722376.jpeg

கணேசனின் சின்ன பையன் ஜீவாதான் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். பின் சீட்டில் கணேசனும், அவருடைய மூத்த பையன் குமாரும் உட்கார்ந்துக் கொண்டு வந்தார்கள். மூவரிடமும் அமைதி நிலவியது. குமார் தான் கேட்டான், ’அப்பா, எங்கள எங்க கூட்டிட்டு போறீங்க?’ என்றான்.’இன்னும் பத்து நிமிஷத்துல போயிடலாம்.நேரவே பார்த்துடலாம்’ என்றார் கணேசன்.

ஒரு கிராமத்தில் உள்ளே நுழைந்த அந்த கார், ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது. பக்கத்து வீட்டில் இருந்த பத்மா பாட்டிதான் அந்த வீட்டு சாவியை கொண்டு வந்து கொடுத்தார். வீட்டு வாசலில் அன்று காலைக்கூட கோலம் போட்டிருந்தது.’நான் போகும் போது சொன்ன வார்த்தைப்படி, தினமும் காலையில எங்க வீட்டு வாசல்ல கோலம் போடுகிற உனக்கு ரொம்ப தேங்க்ஸ் மா’ என்று சொல்லிக் கொண்டே வீட்டின் கதவைத் திறந்தார் கணேசன்.பழைய உறவுகளின் பலத்தை அவருடைய பையன்கள் பார்த்து மலைத்து போனார்கள்.

திறந்தவுடன் வீட்டின் உள்ளே பல புறாக்கள் இங்கும்,அங்கும் பறந்தன. ‘புறாக்கள் வாழ இப்படி ஒரு வீடா?” என்று அண்ணனும் தம்பியும் வியந்து போனார்கள். வீட்டில் ஆங்காங்கே ஒட்டடை தொங்கிக் கொண்டிருந்தது.அவற்றையெல்லாம் ஒரு குச்சியால் தள்ளிக் கொண்டு கணேசன் முன்னே சென்றார். வீட்டையும்,அதன் பின்னால் இருந்த பெரிய தோட்டத்தையும் மூவரும் பார்த்தார்கள். கணேசனுக்கு தன் மனைவி புவனாவுடனும்,அவள் வளர்க்கும் புறாக்களுடனும் அந்த வீட்டில் வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.அவர்கள் போய் விட்டார்கள்.ஆனால், அவர்களின் புறாக்கள் அந்த வீட்டில் தொடர்ந்து அதே மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன. கணேசனின் கண்ணில் நீர் கசிந்தது. மனம் கனத்தது.

’இது யாருடைய வீடு? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?’ என்று கேட்டான் ஜீவா. பொறுமையாக சொன்னார்,’நீங்க இரண்டு பேரும் என்னுடைய சொத்துக்காக என் கண் முன்னையே இப்ப சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இதைத்தான் நானும் 40 வருடங்களுக்கு முன் நானும் செஞ்சேன். இந்த வீட்டிற்காக உங்க பெரியப்பாவோட சண்டை போட்டு, கோர்ட் வரைக்கும் போனேன். கேஸ்ல ஜெயிச்சி இந்த வீட்ட சொந்தமாக்கியும் கொண்டேன். ஆனா, இதே ஊர்ல எதிர் வீட்ல இருந்த உங்க பெரியப்பா வீட்டை காலி பண்ணிட்டு குளித்தலை போயிட்டாரு. எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமா போச்சு. தெரியாம தப்பு பண்ணிட்டேன். ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் ’கூடப் பிறந்த அண்ணனையே சொத்துக்காக இப்படி பண்ணிட்டியே ?’ ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.

’அதனுடைய விளைவாகத்தான் நானும் உங்க அம்மாவும் இந்த வீட்டை காலி பண்ணிட்டு திருச்சிக்கு போய் செட்டிலாயிட்டோம். பக்கத்து வீட்டு பத்மா கிட்ட வீட்டு சாவிய கொடுத்துட்டு கிளம்பிட்டோம்.அப்பறம் இந்த வீட்டுக்கு உங்களோடு இன்னைக்குதான் வரேன்’ன்னு சொல்லி முடித்தார் கணேசன்.

’அங்க டி. ஆர். ஓ.வா கடைசியா ஓய்வு பெற்றேன். இப்ப இருக்க வீடு ,நிலம் எல்லாம் அப்புறமா வாங்கியதுதான். இப்ப உங்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு இருக்கு. நிலமும் இருக்கு. எனக்கு பிறகு அது சுலபமா நீங்க பாதி பாதியா எடுத்துக்கலாம். இருந்தாலும் இப்ப நாம இருக்க வீட்டுக்காக நீங்க ரெண்டு பேரும் டெய்லி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. எனக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கு. கஷ்டப்பட்டு வாங்கும் சொத்துதான் நமக்கு வசதியையும், நிம்மதியையும் தரும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்துதான் இந்த வீட்டுக்கு உங்கள கூட்டிட்டு வந்தேன். நீங்க போட்டுக்குற சண்டையில இனிமே இந்த வீட்டையும் சேர்த்துக்கோங்க’ என்று சொல்லியவாறு வெளியே வந்தார் கணேசன்.வீட்டு சாவியை பத்மாவிடம் கொடுத்தார்.அவர்கள் இருவர் மனதிலும் ஏதோ ஒரு ஏக்கம் இருந்தது.

அவருடைய பையன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்பாவின் அனுபவம் அவர்களின் கண்களைத் திறந்தது.சொத்தை விட உறவுகள் முக்கியம் என்பதை புரிந்து கொண்டார்கள். அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

’எனக்கு என் தம்பிதான் வேணும். அவனுடைய உறவுதான் வேண்டும்’ என்று சொல்லியவாறு தம்பியை அணைத்துக் கொண்டான் குமார். ஜீவாவும், ‘அண்ணா, என்ன மன்னிச்சிடுங்க’ என்றான் தன் பங்குக்கு. திரும்பும் பொழுது அவர்கள் மனதில் கண்ட மாற்றத்தை உணர்ந்து மகிழ்ந்தார் கணேசன். இதைத்தானே அவர் எதிர்பார்த்தார்.மனதால் புறா வீட்டுக்கு நன்றியைச் சொன்னார் கணேசன்.