தொடர்கள்
கதை
சொர்க்கரதம் - சிறுகதை – பா.அய்யாசாமி

20250029210058238.jpg

சொர்க்கரதம் - சிறுகதை – பா.அய்யாசாமி

இந்த மாச கூட்டத்தை நம்ம வூட்லேயே வச்சுகிடுவோம் என்ற பஞ்சாயத்து தலைவரிடம், வேண்டாம்யா..அதான் ஆத்திலே தண்ணீ வந்திடுச்சு, ஆத்தாங்கரையிலே வச்சுகிடுவோம் என்ற ஊர் நாட்டாமையின் குரலை தட்டமுடியாமல் போனது வருத்தம்தான் பஞ்.தலைவருக்கு.

தன் வீடாக இருந்தால் நாம சொன்னது எடுபடும்,பொதுவான இடத்திலே கூடினால் கேள்வி மேலே கேள்வி கேட்டுடு வாங்களேனு ஒரு உதறல். ஊருக்கு நல்லது நிறைய செய்திருந்தாலும் மாதாந்திரக்கூட்டம் என்றாலே ஒருவித பதட்டம் வந்திடும் பஞ்.தலைவருக்கு.

பல சாதிங்க உள்ள இந்தக் கிராம பஞ்சாயத்து இன்றைக்கும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணமே, நல்லது எது கெட்டது எதுவெனப் பார்த்துப் பார்த்து அவர்களுக்குள் கூடிப்பேசி காரியங்களைச் செய்துக்கொள்வதுதான்.

பல வருடங்களுக்குப் பிறகு பூம்புகார் கடலைத்தேடி ஓடும் காவிரித்தண்ணீர், கரையில் நல்ல காற்றோட்டம், ஒரு பக்கம் தென்னந்தோப்பு, மறுபக்கம் வாழைத் தோப்பு, குளித்து கும்மாளம் போடும் சிறுவர்கள், புதுப் புனலில் வழிபடும் புதுமணத்தம்பதிகள் என அமைதியான சூழலில் தரைக்கம்பளம் விரித்து ஊரார் வந்தமர்ந்து தாம்பூலம் தரித்த வண்ணமிருந்தனர்.

"டேய் அவனை புடிங்கடே, சீவப் பாக்கெட்டை எடுத்துகிட்டு ஓடறான் பாரு, மண்டை கிறுக்கன் என்ற அதட்டலில் தூக்கிப்போட்டுவிட்டு ஓடினவன் சின்னதுரை, சின்னானு கூப்பிடுவாங்க. ஆயி அப்பனெல்லாம் இறந்துட்டாங்க, அவர்கள் இறந்ததற்குப் பதிலாக இவன் இறந்திருக்கலாம் என்று ஊரே பேசும், அவனுக்குச் சொந்தமாக வீடும், வீட்டோட ஒரு மனையும் பராமரிப்பின்றி இருக்கு. கையிலே எந்நேரமும் அருவாளோடத்தானிருப்பான். புத்தி சுவாதீனம் இல்லாதவன் என ஊரார் சொல்வார்கள், அதனாலதான் திருமணமே செய்துக்கல என்று. அவன் விவரம்யா! அதனாலேதான் திருமணமே செய்துக்கல என்று சொல்வோரும் உண்டு.
வேலை சொன்னால் செய்வான், கொடுத்ததை வாங்கிகிட்டு நினைத்ததைச் சாப்பிடுவான், அவன் கூட ஒன்றாகப் படித்தவன் இந்த ஊரிலேயே மாரியப்பன் ஒருவன்தான். கிராமத்தின் ஆரம்பத்தில் அவனின் வீடு, அவன் பேச்சிற்குத்தான் சின்னா கட்டுப்படுவான்.

இம்மாதக்கூட்டத்தின் நோக்கமே, இறப்புக் காலத்திலே பொணத்தை தூக்கிகிட்டு இரண்டு கிலோ மீட்டருக்கும் மேலே போக வேண்டியிருக்கு, தூக்கறதுக்கும் ஆட்கள் யாரும் முன்வர மாட்டேங்கிறாங்க, விவசாய வேலைகள் குறைந்து சனங்களுக்கும் உடலில் தெம்புமில்லாமல் போயிடுச்சு அதைபற்றி பேசத்தான் நாம் கூடியிருக்கோம் என்று பஞ்.செயலர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தூக்கிப்போறதுதான் முறை, எவனுக்கு முடியுதோ அவனுக தூக்கட்டும் என்றார் பெரியவர் ஒருவர்.

முறை கிறைனு சொல்லிட்டு நீர் போயிடுவீரு.. தூக்கறது யாரு? என்று எகிறினான் இளைஞன் ஒருவன்.

டவுன்லேதான் மோட்டார் வண்டி வந்திடுச்சுல்ல, அதைக் கூப்பிடுங்க.. என்றார் ஆசிரியர்.

அவன் கேட்கிற 2000, 3000 ரூவா நீ கொடுப்ப வாத்யாரே! சொச்சபேரு கதி ? கேட்டது ஒருவர்.

பஞ்சாயத்து செலவிலேயே ஒன்று வாங்கிப்புட்டா ? கேட்டது ஒரு இளைஞன்.

அதெல்லாம் நடக்காது. பஞ்சாயத்திலே இதற்கெல்லாம் பணம் கிடையாது, பராமரிக்கிறது சாத்யமுமில்லை என்றார் செயலர்.
இப்படி சொன்னால் எப்படி ? என்னதான் முடிவு அவுங்க அவுங்க கொல்லையிலே புதைச்சு, எரித்துக்கொள்ள வேண்டியதுதானா ? என்றார் ஒருவர்.

நீண்ட அமைதிக்குப்பிறகு, வண்டியை நான் லோன் போட்டு வாங்குறேன், ஓட்டுகிறேன் தூக்கிற கூலித்தொகையைப் பார்த்து எனக்கு கொடுங்க என்றான் மாரி. இது சரி என பட எல்லோரும் ஆமோதித்தனர்.

வேணாம்டா மாரி! இவங்களை நம்பாதே! "கோளாறு புடிச்சவனுங்க
என்று கத்தியபடி கூட்டத்திலிருந்து எழுந்து ஓடினான் சின்னதுரை.
யார்டா இவன் அபசகுனமா பேசிகிட்டு !? அடித்து விரட்டுங்கடா அவனை என்றனர் ஊரார்.

ஊரார் பேச்சை நம்பிய மாரிக்கு சொர்க்கரதம் என எழுதி வந்துசேர்ந்தது அமரர் ஊர்தியும்,புதிய பிரச்சினையும்.
வண்டி பளபளனு சுத்தமாகவும்,அழகாகவும்,இருந்தது. முதல் சவாரிக்காக மாரி வீட்டின் வாசலில் காத்திருந்தது.

சொல்லிவைத்த மாதிரி மாதம் இரண்டு நபர்களாவது போய்க் கொண்டிருந்தவர்கள், ஊருக்கு வண்டி வந்து ஒருமாதம் கடந்தது. ஊர்மக்களுக்கு ஆயுசு கெட்டியாயிடுச்சு போல.. வண்டி பயனுக்கு வராதது, மாரிக்கு சங்கடமும் வங்கியில் கடன் சுமையும் அதிகரிக்கத் தொடங்கியது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழிப்பிதுங்கி நின்றான் மாரி.
அடுத்த பிரச்சினையும் அவனைத்தேடி வந்தது. அவன் வீட்டில் வாகனம் நிற்பதும் அதைக்கண்டு போவதும் வருவதும் அபசகுனமாக இருக்கிறது என்று ஊர் மக்கள் புலம்பத்தொடங்கினர்.

இந்த மாதக் கூட்டத்தில் அதை எங்கே நிறுத்துவது என்ற பிரச்சினையைப் பற்றி பேசவேண்டும் என கூடினர்.
எவரும் ஊருக்குள் வாகனம் நிறுத்துவதையோ,மாரி வீட்டு வாசலில் நிற்பதையோ கூட ஒப்புக் கொள்ளவில்லை.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாடகைக்கு இடம் பிடித்து குடிசைப்போட்டு ஒரு வழியாக வண்டியை நிறுத்திவிட்டான் மாரி.

நான்தான் அப்போது சொன்னேனே மாரி! இவங்களை நம்பி இறங்காதே என்று" சின்னா மட்டுமே வருந்தி, "நல்ல மனசோட நீ சொன்னே மாரி! ஆனால் இவங்க உன்னை ஒதுக்கி வச்சுப் பார்க்கிறாங்க, இவங்கலெல்லாம் நல்லவர்களாம்! நான் "மண்டைகிறுக்கனாம்".ஒரு நாள் புரிந்துக்கொள்வார்கள் என சபித்தான்.

ஊரெல்லாம் கொரொனா வந்து, கிராமம் வரை ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்களால், தொற்றுப் பயத்தால் பிணங்களை எடுத்துப்போடக்கூட ஆளில்லாமல் போனதுவரை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மாரியப்பன் பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டான்.இன்று தனது நூறாவது பிணத்தைச் சுமக்க, சின்னா நினைவு இலவச சொர்க்கரதம் வீட்டிலிருந்துக் கிளம்பியது
கிராமத்தின் நடுவில் உள்ள தனது வீட்டையும், இடத்தையும் இச் சேவைக்காக மாரியப்பனுக்கே எழுதிக்கொடுத்து விட்டுப் போயிருந்தான் மண்டைக்கிறுக்கன்.