பயணம் செய்ய நீங்க ரெடியா?!
நம் நாட்டின் பொது போக்குவரத்தில் மக்கள் அதிகமாக விரும்புவது – ரயில் பயணம் மட்டுமே சிறப்புடன் விளங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு திசை, பகுதிகளை இணைக்கும் வகையில், புதிய ரயில் திட்டங்களை ஒவ்வொன்றாக மத்திய ரயில்வே அமைச்சகம் நிறைவேற்றி வருகின்றன. அவ்வகையில், தற்போது முக்கிய அம்சமாக – நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இருந்து வடஎல்லை பகுதியான காஷ்மீர்-ஸ்ரீநகர் மாநிலத்தின் பாரமுல்லாவை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய ரயில் சேவையை விரைவில் துவங்கவிருக்கிறது. இது, இந்திய ரயில்வே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
பன்னாட்டு சுற்றுலாத்தலமாக விளங்கும் தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரிக்கும், இங்கிருந்து வடஎல்லையில் உள்ள காஷ்மீர் மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், இந்தியாவில் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுடன் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் முழுமையான ரயில் போக்குவரத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், இந்திய ரயில்வேயின் 20 ஆண்டு கால கனவு திட்டமாக –முதல்கட்டமாக ₹41 ஆயிரம் கோடி மதிப்பில் ஜம்மு-உத்தம்பூர்-கத்ரா-ஸ்ரீநகர்-காசிகுண்ட் வழியாக, நாட்டின் கடைசி எல்லையான பாரமுல்லா வரையில், பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு இடையே – 250 கிமீ தூரத்துக்கு முதல் ரயில் இணைப்பு பாதை திட்டம் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 272 கிமீ. இவற்றில் 111 கிமீ சுரங்கப்பாதையாக உள்ளன. இதில், ஒரு சுரங்கப்பாதையின் நீளம் 12.77 கிமீ உள்ளது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின்மீது மிக உயரமான ரயில்பாலம் கட்டப்பட்டதுதான். இதன் நீளம் 1,315 மீட்டர். ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து 359 மீ உயரத்தில் இப்பாலம் அமைந்துள்ளது. இது, பாரீசில் உள்ள ஈபிஸ் டவர் உயரத்தைவிட பலமடங்கு அதிகம். இந்த ரயில்பாலத்தை கட்டி முடிக்க 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதற்காக ₹1,486 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இப்பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில் 1,086 அடி உயர கோபுரம் கட்டப்பட்டு உள்ளது. இது, 77 மாடி கட்டிடத்தின் உயரமாகும்! செனாப் நதியின்மீது புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலம் 40 கிலோ வெடிபொருட்களின் அதிர்வையும், ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளி வரை நில அதிர்வை தாங்கும் வகையில் உறுதியுடன் கட்டப்பட்டு உள்ளது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கை மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் செனாப் ரயில் பாலம் அமைந்துள்ளது. இதேபோல், ஜம்மு-ஸ்ரீநகர் ரயில் வழித்தடத்தில் இந்திய ரயில்வே அமைத்த முதல் கேபிள் பாலமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 1984-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தென்பகுதியான கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீரின் ஜம்முதாவி வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் எனும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு ஜம்முதாவி-உதம்பூர்-வைஷ்ணவிதேவி கத்ரா ரயில்பாதை தயாரானதும், இந்த ரயில் கத்ரா வரை நீட்டிக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது புதிய ரயில் திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, கன்னியாகுமரி-காஷ்மீரின் பாரமுல்லா வரை விரைவில் (மார்ச் மாதம்?!) ரயில் போக்குவரத்து துவங்கவிருக்கிறது என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தின் தென்கோடி முனையில் இருந்து வடக்கே நாட்டின் கடைசி எல்லை பகுதிக்கு ரயில் போக்குவரத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், தற்போது இயங்கும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் காஷ்மீரின் பாரமுல்லா வரை செல்லுமா என்பது சந்தேகம். ஏனெனில், ஜம்முதாவிக்கு பிறகு பயண சூழலே உறைபனியாக மாறுகிறது. அதே ரயிலை இயக்கலாமா அல்லது பல்வேறு சீதோஷ்ண நிலைகளை தாங்கும் ரயில்பெட்டிகளை கொண்டு வந்தேபாரத் ரயிலை போல் இயக்கலாமா என்பது ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வுகளில் தெரியவரும் என்கின்றனர்.
தற்போது கன்னியாகுமரி-ஜம்முதாவி இடையே இயங்கி வரும் ஹிம்சாகர் வாராந்திர (வண்டி எண்: 16317) எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம் சந்திப்பு, காயங்குளம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், குவாலியர், புதுடெல்லி, லூதியானா, பதான்கோட், சம்பா வழியாக மொத்தம் 3,714 கிமீ தூரத்தை கடந்து ஜம்முதாவியை அடைகிறது. அதே மார்க்கம் வழியாக மீண்டும் கன்னியாகுமரியை வந்தடைகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் புறப்பட்டு, திங்கள் இரவு 8.10 மணியளவில் ஜம்முதாவியை சென்றடைகிறது.
அதேபோல் மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16318) ஜம்முதாவியில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் புறப்பட்டு, வியாழன் இரவு 11.05 மணியளவில் கன்னியாகுமரியை வந்தடைகிறது. இந்த ரயிலில் மூன்றரை (அ) 4 நாட்கள் பயணம் செய்ய வேண்டும். இந்த ரயில்தான் பாரமுல்லா வரை நீட்டிக்கப்படலாம் என்று உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன. இந்த ரயிலில் சாதாரண படுக்கை வசதி ₹1,080, 2 டயர் ஏசி ₹3,970, 3 டயர் ஏசி ₹2,625 என கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ‘இம்மார்க்கத்தில் அதிநவீன மற்றும் பல்வேறு காலமாற்றங்களை தாங்கும் வகையில் வந்தேபாரத் ரயில் இயக்கப்படுமா?’ என்று இந்திய ரயில் பயணிகள் எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். விரைவில் நல்ல செய்தி வருமா?!
மாலாஸ்ரீ
Leave a comment
Upload