தொடர்கள்
கதை
சகலகலா பாட்டி! மாலா ஶ்ரீ

20250005142245996.jpeg

ஆந்திர எல்லையில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவள், சிவபாக்கியம் பாட்டி. ஆளை பார்த்தால், பாட்டி என்று சொல்லவே முடியாது. இளம்வயதிலேயே இவரது கணவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட, தனது மகன் கீர்த்திவாசன், மகள் செவ்வந்தி ஆகிய இருவரையும் படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்தி, இருவரும் திருமணம் செய்து வைத்தாள்.

பின்னர் மகன் அல்லது மகள் வீட்டில் நிரந்தரமாக தஞ்சமடையாமல், கிராமத்து வீட்டிலேயே சிவபாக்கியம் தங்கிவிட்டாள். மகனும் மகளும் திருமணமாகி குழந்தை குட்டிகள் பெற்றதும், பணி காரணமாக வெவ்வேறு ஊர்களில் அடைக்கலமாகி விட்டனர். இதில் குடும்பத்துடன் ஃபிளாட் வீட்டில் மகன் கீர்த்திவாசன் சென்னையில், மகள் செவ்வந்தியோ, புதுடெல்லியில் செட்டிலாகி விட்டனர். அதன்பின் பெற்ற தாய் சிவபாக்கியத்தை விஐபி விருந்தினராகவே மகனும் மகளும் எண்ணிக் கொண்டனர்.

மகன் கீர்த்திவாசனுக்கு ஷோபனா என்றொரு மகள், மகள் செவ்வந்திக்கு மகன் விக்னேஷ். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் படிப்பில், விளையாட்டில் சூட்டிகையாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இரண்டிலும் சோர்ந்து பின்தங்கி விட்டனர். இதை அத்திப்பூத்தாற் போல் சென்னையில் மகன் வீட்டுக்கு வந்த பாட்டி சிவபாக்கியம் கண்டறிந்தார். தனது பேரன், பேத்தியின் மந்தநிலையை மாற்ற உறுதியேற்றாள். அப்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து 3 மாத விடுமுறை விடப்பட்டு இருந்ததால், மகன் கீர்த்திவாசனும் மகள் செவ்வந்தியும் சிவபாக்கியத்துக்கு ‘ஓகே’ கூறினர். ஆனால், சிவபாக்கியத்தின் மருமகனும் மருமகளும் அரைகுறை மனதுடன் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கிராமத்து வீட்டில் தனிமையில் இருந்த சிவபாக்கியம் தொழில் நிமித்தமாக, படிப்பு மற்றும் தற்காப்பு கலைகளில் சகலகலா மாடர்ன் பாட்டியாக மாறியது, கிராமத்தினரை தவிர வேறு யாருக்குமே தெரியாது. கிராமத்து வீட்டுக்கு வந்திறங்கிய பேரன் விக்னேஷ், பேத்தி ஷோபனா ஆகிய இருவரும் பாட்டியின் அசாத்திய சுறுசுறுப்பை கண்டு அதிசயித்தனர்.

உள்ளூர் குழந்தைகள், பாட்டியின் வீட்டுக்கு படிக்க வந்த விக்னேஷ், ஷோபனாவை பல்லாங்குழி, பாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமத்து விளையாட்டுகளில் சேர்த்து கொண்டனர். அவர்களின் பாடங்களில் சந்தேகம் கேட்க துவங்கியதும் ஓரிரு நாட்களிலேயே பாட்டி சிவபாக்கியத்தின் பேரப் பிள்ளைகளுக்கு உற்சாகம் பீறிட்டு கிளம்பியது. ஒரு கட்டத்தில் தனது பேரப் பிள்ளைகளுக்கு விவசாய கிணற்றில் விதவிதமான நீச்சல் உள்பட பல்வகை தற்காப்பு கலைகள் கிராமத்து இளைஞர்கள் மூலம் பாட்டி கற்க வைத்து, தனது 2 பேரப் பிள்ளைகளையும் சிறுவயதிலேயே சிறந்த நிபுணராக மாற்றிவிட்டாள் பாட்டி சிவபாக்கியம்.

கோயில் திருவிழாவில் தற்காப்பு கலை போட்டிகள் நடந்தன. இறுதிகட்ட போட்டியில் தொடர் வெற்றி பெற்ற வீரர் இறுமாப்பில், “என்னை வெல்வதற்கு இங்கு யாரும் இல்லையா?” என்று கொக்கரித்தான். ஊரே அமைதி காத்தது.

சற்று நேரத்தில் இறுக தார்பாய்ச்சி கட்டிய வேட்டியுடன் பாட்டி சிவபாக்கியம், அந்த வீரருடன் மோத களமிறங்கினாள். இதைக் கண்ட பேரப் பிள்ளைகளும், “பாட்டி, உனக்கு வயசாயிடுச்சு. உன்னை அடிச்சு கீழே தள்ளிடப் போறான்!” என்று அலறினர். அவர்களை கிராமத்து பெண்கள் ஆசுவாசப்படுத்தினர்.

கடைசி கட்டத்தில், உக்ரகாளியாக மாறி சரமாரி தாக்குதல் தொடுத்து, அந்த வீரரை வெற்றி கொண்டாள் சிவபாக்கியம் பாட்டி. இவற்றை பார்த்து குதூகலமான 2 பேரப் பிள்ளைகளும் “சகலகலா மாட(ல்)ர்ன் பாட்டிதான்டோய்!” என்று உற்சாக குரல் கொடுத்தனர்.

விடுமுறை முடிந்ததும் தனது குழந்தைகளை ஊருக்கு அழைத்து செல்ல வந்திருந்த மகன் கீர்த்திவாசன், மகள் செவ்வந்தி ஆகிய இருவரும் “என்னம்மா… ரொம்ப படுத்திட்டாங்களா?!” என்று சிவபாக்கியத்திடம் கேட்டனர். அதற்கு இரண்டு பேரப் பிள்ளைகளும் கலகல சிரிப்புடன், ”எப்படி வாழணும்கிறதை நீங்கதான் பாட்டிகிட்ட கத்துக்கணும். ஒரு மூணு மாசம் லீவு போட்டு இங்க வாங்க, அப்பதான் பாட்டி ‘சகலகலா மாட ர்ன் பார்ட்டி’னு உங்களுக்கு தெரியும்!” என்று கலாய்த்தனர்.