பா வகைகளை தொடர்ந்து விவரிக்கத் தொடங்குகிறார் பரணீதரன்.
நாரை விடு தூது
பாடியவர் : சத்திமுத்தப் புலவர்
பாடப்பட்டவர் : பாண்டியன் மாறன் வழுதி, நாரை, புலவரின் மனைவி
பாடப்பட்டதன் நோக்கம் : தன்னுடைய நிலையை மனைவியிடம் தெரிவிக்க
பாடப்பட்ட பாடல்கள் : 1 (1 கவி)
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
இந்த பாடலில், நாரைக்கு அலகுகள் பிளக்கப்பட்ட பனங்கிழங்கை போல உள்ளதாக பாடிய உவமை தமிழ் இலக்கியத்திற்கு புதிதாகும். பாண்டிய நாட்டில் வாடி காற்றால் கஷ்டப்படுவதாக கூறிய புலவரின் பாடலைக் கேட்டு பாண்டிய மன்னன், புலவருக்கு தன்னுடைய உத்தரீயம் (அங்க வஸ்திரம்) என்ற மேலாடையினை கொடுத்தான். அவர் கேட்ட மற்ற பரிசு பொருட்களையும் வழங்கினான். அதேபோல இந்த பாடலில் நாரைகள் இமய மலைக்கும் தென் குமரிக்கும் பறந்து செல்லும் செய்தியையும் நமக்காக கொடுத்துள்ளார். இதை இன்றைய நாளில் வலசை அதாவது ஆன்வல் மைக்ரேஷன் (Annual Migration) என்று கூறுகிறோம்.
அன்னம் விடு தூது
பாடியவர் : பிசிராந்தையார்
பாடப்பட்டவர் : சோழன் கோப்பெருஞ்சோழன்
பாடப்பட்டதன் நோக்கம் : தன்னுடைய நட்பை தெரிவிக்க
பாடப்பட்ட பாடல்கள் : 1 (1 கவி)
அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே
இந்தப் பாடலில் பிசிராந்தையார் ஆண் அன்னப்பறவையை (அன்னச் சேவல்) திருக்கோழி (ஊரின் பெயருக்கு காரணமான காட்சியை மேலே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன். இது உறையூரில் உள்ள பஞ்சவர்ணஸ்வாமி கோவிலில் உள்ளது) அல்லது கோழி என்று அன்னாளில் வழங்கப்பட்ட உறையூரில் (இன்றைய திருச்சி என்று அழைக்கப்படுகின்ற திருச்சிராப்பள்ளியில் உள்ள சோழர்களின் பழமையான தலைநகரம்) வாழும் கிள்ளி வழியில் வந்த கோப்பெருஞ்சோழனுக்கு தூதாக அனுப்புகிறார். காவலர்களை தாண்டி கிள்ளியிடம் சென்று பிசிராந்தையார் வாழும் இடத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினால் அவன் உன்னுடைய பேடைக்கு (பெண் அன்னப் பறவை) நல்ல அணிகலன்களை கொடுப்பான் என்று கூறுகிறார். ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டது இவர்களின் தனிச் சிறப்பு.
புகையிலை விடு தூது
பாடியவர் : சீனிச்சர்க்கரைப் புலவர்
பாடப்பட்டவர் : பழனி மலையில் குடி கொண்டிருக்கும் பாலதண்டாயுதபாணி ( முருகப் பெருமான்)
பாடப்பட்டதன் நோக்கம் : முருகப்பெருமான் மீது உள்ள தன்னுடைய காதலை தெரிவிப்பதற்காக
பாடப்பட்ட பாடல்கள் : 59 (59 கண்ணிகள்)
பூங்கடப்ப மாலையான் போரசுரர் தங்களுயிர்
வாங்கடப்ப வேலையான் வாலவுருப்-பாங்குபெறு
கந்தன் முருகன்வேள் காங்கேயன் வள்ளிபுணர்
சொந்தமண வாள துரந்தரிகன்-அந்தம்
தருபழனி யுரனெங்கள் சண்முகவேள் வீதிக்
கொருபவனி மாமயின்மே லுற்றான்-வருபவனி
சேவிக்க யான்போய்த் தெரிசிக்கு மவ்வளவிற்
கோவித்து மாரனம்பு கொல்லவே-ஆவலுடன்
ஆகினே னென்மயக்க மாருரைப்பா ருன்னையன்றி
வாகுபெற நீபோய் வகையாக-ஓகையுடன்
சென்றுரைத்துத் திண்புயமேற் சேர்ந்திலங்கு பூங்கடப்ப
மன்றல்கமழ் தார்வாங்கி வா.
புகையிலையின் பெருமைகளை கூறி, அதன் இயல்புகளை மும்மூர்த்திகளுக்கும் சிலேடையாக வடித்து, அவற்றின் குணங்கள் பயன்கள் போன்றவற்றை கூறி, அதன் பிறகு புகையிலேயே முருகப்பெருமானுக்கு தூதாக அனுப்புகிறார். ஒரு பெண் தன்னுடைய காதலி முருகப்பெருமானுக்கு உணர்த்துவதாக புகையிலை விடு தூது எழுதப்பட்டுள்ளது. புகையிலையை முருகப்பெருமானுக்கு தூதாக அனுப்பி, அவரின் கடம்பப்பூ மாலையை முருகனிடமிருந்து வாங்கி வர சொல்கிறார். அதாவது தன்னை மனம் புரிந்து கொள்ள அந்த பெண் கூறுகிறார். பக்தியின் வெளிப்பாட்டை இவ்வாறு ஒரு பெண்ணின் மூலமாக சீனிச்சக்கரைப் புலவர் கூறியுள்ளார்.
நெஞ்சம் விடு தூது
பாடியவர் : உமாபதி சிவாச்சாரியார்
பாடப்பட்டவர் : மறைஞான சம்பந்தர் (உமாபதி சிவாச்சாரியாரின் குரு)
பாடப்பட்டதன் நோக்கம் : அருள் மற்றும் ஞானம் வேண்டி
பாடப்பட்ட பாடல்கள் : 125 (125 அடிகள்)
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்
இது சங்க கால இலக்கியங்களுக்கு பின்னால் எழுந்த முதல் தூது வகை சிற்றிலக்கியமாகும். இந்த நூலில், தன்னுடைய குருவான மறைஞானசம்பந்தரை சிவபெருமானாகவே நினைத்து தன்னை ஒரு பெண்ணாக வியாபித்துக் கொண்டு அவரை தான் காதலிப்பது போல இந்த நூலை உமாபதி சிவாச்சாரியார் இயற்றியுள்ளார். தன்னுடைய குருவின் அருளையும் ஞானத்தையும் அடைவதற்காக அவர் இவ்வாறான இலக்கியத்தை உருவாக்கியுள்ளார். தன் நெஞ்சையே தூது பொருளாக அவர் உருவகப்படுத்தி உள்ளார்.
இத்துடன் தொடை நயங்களை முடித்துக் கொண்டு வரும் வாரம் முதல் யாப்பிலக்கணத்தின் மற்ற பகுதிகளை பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload