கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 97 - பரணீதரன்
பா வகைகளை தொடர்ந்து விவரிக்கத் தொடங்குகிறார் பரணீதரன்.
பொதுவாக காதல் கவிதைகளும் மற்ற கடிதங்களும் இப்பொழுது தான் உருவானது போல நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சங்க காலம் தொட்டு இன்று வரை இப்படிப்பட்ட காதல் கடிதங்களும் மற்ற அலுவல் கடிதங்களும் எழுதப்பட்டு அவைகள் தெய்வங்களுக்கோ மன்னர்களுக்கோ அல்லது மற்ற முக்கியமான பணிகளில் இருப்பவர்களுக்கோ கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சிற்றிலக்கியங்களில் - உலாமடல், மடல், வளமடல், தூது, சீட்டுக்கவி போன்ற பல்வேறு விதமான இலக்கியங்களாக நமது தமிழ் மொழி பிரித்து வைத்திருக்கிறது.
இன்று நாம் பார்க்க போகின்ற சில சிற்றிலக்கிய வகைகள், மடல், தூது மற்றும் சீட்டு கவியாகும். வளமடலும் உலாமடலும், மடல் என்ற இலக்கியத்திற்குள்ளேயே வந்துவிடும்.
முதலில் நாம் மடல் என்ற இலக்கியத்தை பற்றி பார்ப்போம். மடல் என்ற இலக்கிய வகை மடலேறுதல் என்ற சங்ககால விஷயத்தை வைத்து உருவாக்கப்பட்டு இலக்கியமாகும். இந்த வகை இலக்கியத்திற்கு முன்னோடியாக இருந்தது பக்தி இலக்கியத்தில் புகழப்பட்ட திருமங்கை ஆழ்வார் ஆவார். இவர் பெரிய திருமடல் மற்றும் சிறிய திருமடல் என்று இரண்டு இலக்கியங்களை எழுதியுள்ளார்.
தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் சாம்பல் பூசிக் கொண்டு, தலைவியின் ஓவியம் வரையப்பட்ட துணிவுடன் ஊரின் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, தலைவனின் தோழர்கள் அதனை இழுத்துச் செல்வர். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் 'மடல்' என்று அழைக்கப்பட்டது. இந்நிகழ்வால் தலைவனின் நிலையை ஊர் மக்கள் அறிந்து, இவனை தலைவியுடன் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைவான்.
பெண்கள் மடல் ஏற மாட்டார்கள் என்பது பொதுவான மரபு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளை பெண்கள் கொண்டுள்ளதால் தன் காதலை ஊரார் முன்னிலையில் வெளிப்படையாக கூற மாட்டார்கள். இந்த மரபை திருமங்கை ஆழ்வார் சற்று மாற்றி, தன்னை பரகால நாயகியாக (எதிரிகளுக்கு எமனை போன்றவர் என்பது அவருடைய பட்டப்பெயர். அவர் பெண்பாவத்தில் இந்த பாடல்களை பாடி உள்ளதால் தன்னை நாயகி என்று கூறிக்கொள்கிறார்) பாவித்துக்கொண்டு திருமாலுக்காக மடலேறப் போவதாக பெரிய திருமடலிலும் சிறிய திருமடலிலும் பாடியுள்ளார். இந்த இரண்டு மடல்களிலும் பல்வேறு விதமான இலக்கண இலக்கிய நடைகளில் கையாண்டுள்ளார். சிறிய திருமணம் முழுவதும் திருமாலின் ஒரு பெயரான ‘நாராயணன்’ என்ற பதத்தில் உள்ள சில் எழுத்துக்கள் எதுகையாக வருவதைப் போல உருவாக்கியுள்ளார். இப்போது இந்த மடல்களில் ஒன்று இரண்டு செய்யுள்களை பார்ப்போம்.
பெரிய திருமடல்
பாடியவர் : திருமங்கை ஆழ்வார்
பாடப்பட்டவர் : திவ்ய தேசங்களில் அருள் பாலிக்கின்ற திருமால் (பல்வேறு திவ்ய தேசங்களை சேர்ந்த பெருமாள் திருமேனிகள்)
பாடப்பட்டதன் நோக்கம் : திருமாலை ஞான காதலின் மூலம் அடையும் பொருட்டு (பேரின்ப பொருள்)
பாடப்பட்ட பாடல்கள் : 78 (78 பாசுரங்கள்)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் *
மின் ஆடும் கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை *
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை *
பன்னாகராயன் மடப் பாவை ||
பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல *
தன்னுடைய கொங்கை முகம் நெரிய ||
‘நாராயணன்’ என்ற சொல்லில் உள்ள ‘ன்’ என்ற எழுத்து எதுகையாக வந்துள்ளது. மொத்த பாடல்களும் ‘ன்’ என்ற எதுகையை மட்டுமே கொண்டு வந்துள்ளது. இதே போல் இதில் அந்தாதி தொடையும் வந்துள்ளது.
சிறிய திருமடல்
பாடியவர் : திருமங்கை ஆழ்வார்
பாடப்பட்டவர் : திவ்ய தேசங்களில் அருள் பாலிக்கின்ற திருமால் (பல்வேறு திவ்ய தேசங்களை சேர்ந்த பெருமாள் திருமேனிகள்)
பாடப்பட்டதன் நோக்கம் : திருமாலை ஞான காதலின் மூலம் அடையும் பொருட்டு (பேரின்ப பொருள்)
பாடப்பட்ட பாடல்கள் : 40 (40 பாசுரங்கள்)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஓரானைக் கொம்பொசித்து ஓரானை கோள்விடுத்த
சீரானைச் செங்கண் நெடியானைத் தேன்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணானை-எண்ணரும்சீர்ப்
பேரா யிரமும் பிதற்றி - பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்
‘நாராயணன்’ என்ற சொல்லில் உள்ள ‘ரா’ என்ற எழுத்து எதுகையாக வந்துள்ளது. மொத்த பாடல்களும் ‘ரா’ என்ற எதுகையை மட்டுமே கொண்டு வந்துள்ளது. இதே போல் இதில் மோனைத் தொடையும் வந்துள்ளது.
மடல் பற்றிய செய்திகளும், இலக்கியங்களும் தமிழில் :
- தொல்காப்பியம்
- குறுந்தொகை
- திருக்குறள்
- நம்மாழ்வாரின் திருவாய்மொழி
- நம்மாழ்வாரின் திருவிருத்தம்
- மாணிக்கவாசகரின் திருக்கோவையார்
- சித்திர மடல்
- வருணகுலாதித்தன் மடல்
மிகுந்து வந்துள்ளது.
உலாமடல் என்பது இறைவன் உலா வரும் பொழுது அவனைப் பார்த்த பெண்கள் மடல் ஏறுவது போன்ற காட்சியை கொடுப்பது. வளமடல் என்பதும் பொதுவாக இவ்வாறான கட்சியையே கொடுப்பதாகும்.
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது சீட்டு கவி இலக்கியமாகும். இதை ஓலைப்பாசுரம் என்றும் கூறுவர். அதாவது ஓலையில் எழுதப்பட்ட ஒரு பாசுரமாகும். இது கவியரசர் ஒருவர் முடியரசருக்கோ அல்லது வள்ளல் ஒருவருக்கோ தனக்கு அல்லது பிறருக்கு உதவி செய்யுமாறு கேட்டு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞரின் புகழும் வள்ளலின் புகழும் பாடப்படும். அருணாசல கவிராயர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பிய சீட்டுக்கவி, பாரதியார் எட்டயபுர சமஸ்தான அரசருக்கு அனுப்பிய சீட்டுக்கவி ஆகியவற்றை பொதுவாக அனைவரும் அறிந்தவை.
சரவணப்பெருமாள் கவிராயர் அவர்கள் - இலட்சுமண மந்தரி, முத்துக்கருப்பண்ண விலக்ஷ்ணன், திருமலைராயன் பட்டினத்தவர், சிங்கபூபன், விருதரசுபட்டபொம்மேந்த்ரதுரை, சுங்கப்பிராமணர்கள் போன்ற 19 பேர்களின் மீது சீட்டு கவி பாடி உள்ளார்.
அருணாச்சல கவிராயர் அவர்கள் - கவுரிவல்லவ ராஜசிங்கன், மலையாண்டியப்பைய நரேந்திரன், தென்குளத்தார் முத்துத்தானப்பர், தேப்பெருமாள் வணிகாதிபன், மணலி முத்துக்கிருஷ்ண முதலியார், வேங்கடாசல வள்ளல் போன்றோர் மீது சீட்டு கவி பாடியுள்ளார்.
படிக்காசுப்புலவர் அவர்கள் - மழவரங்கன், வாந்தைக்குடி மஹாஜனத்தலைவர், இரகுநாத சேதுபதி போன்றோர் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
சுப்ரமணிய பாரதியார் அவர்கள் - எட்டயபுர ராஜா ராம வெங்கடேசுரெட்டப்ப பூபதி, வெங்கடேசுரெட்டப்ப பூபதி, ஆகியோர் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
கும்பன் அவர்கள் - மழவரங்கன் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
சொக்கநாதப் புலவர் அவர்கள் - மகிபாலன் மங்கைநகராதிபன் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
அந்தகக்கவி வீரராகவமுதலியார் அவர்கள் - சேலம் செழியன் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் - வீரபூபாலன் தனையன் வேங்கடரங்கன் மீது சீட்டுக்கவி பாடி உள்ளார்.
சீட்டுக்கவியில் உள்ள இலக்கண இலக்கிய நடையையும் தூதையும் வரும் வாரம் பார்ப்போமே என்று கூறி விடை பெற்றுக் கொண்டார் பரணிதரன்.
Leave a comment
Upload