தொடர்கள்
அனுபவம்
நடந்தது-ஜாசன்

2024102918322908.jpg

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரயிலில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். வழக்கமான நலம் விசாரிப்புக்கு பிறகு, அவர் வீட்டில் நீண்ட நாட்களாக இருந்த சொத்து பிரச்சனை பற்றி கேட்டேன். அதற்கு அவர் "சொத்துப் பிரச்சனை ஒரு மாதிரி தீர்ந்து போய் புதிதாக ஒரு பிரச்சனை ஆரம்பித்து விட்டது "என்றார். நான் அது என்ன புது பிரச்சனை என்று கேட்டேன்.

சொத்து பிரிப்பு சுமுகமாக முடிந்து. எனக்கென்று ஒதுக்கப்பட்ட பழைய வீட்டை இடித்து வருமானம் வருவது போல் குடியிருப்பாக மாற்ற முடிவு செய்து வேலையை தொடங்கினேன். மாநகராட்சியில் இதற்கான வரைபட ஒப்புதலுக்கு போனபோது நீங்கள் முதலில் போய் உங்கள் பகுதி கவுன்சிலரை பாருங்கள் அதன் பிறகு இங்கு வாருங்கள் என்றார்கள் அதிகாரிகள். அவரை எதற்கு நான் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது நீங்க வீடு கட்டணுமா வேண்டாமா கட்ட வேண்டும் என்றால் போய் அவரை பாருங்கள் என்றார்கள் அதிகாரிகள். நானும் போய் கவுன்சிலரை பார்த்தேன்.

உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்டார். நான் இரண்டு கோடி ரூபாய் நான் என்று சொன்னதும், அதில் 10% ரூபாய் 20 லட்சத்தை என்னிடம் தாருங்கள், அதன் பிறகு எல்லா வேலையும் மளமள என்று உங்களுக்கு நடக்கும் என்று சொன்ன அந்த கவுன்சிலர் தனது உதவியாளரை அழைத்து இவரிடம் உன் செல்பேசி எண்ணைதா என்று சொல்ல அவர் என்னிடம் உங்கள் செல்பேசி எண் என்ன என்று கேட்டார் நான் என் செல்பேசி எண்ணை சொன்னதும் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தார் அந்த உதவியாளர். இதை ஸ்டோர் பண்ணிக் கொள்ளுங்கள் என்று கிட்டத்தட்ட உத்தரவு மாதிரி சொன்னார். அதன் பிறகு மேலும் பலரிடம் விசாரித்த போது எனக்கு கட்டிடம் கட்டி தரும் ஒப்பந்தக்காரரிடம் ஆலோசனை செய்தபோது இப்போது இந்த ஆட்சியில் இது தான் சார் நடக்கிறது.

நீங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால் உங்களால் வீடு கட்ட முடியாது. அதிகாரிகள் மூலம் மறைமுக அச்சுறுத்தல் வரும் என்று சொல்ல, அதன் பிறகு அவர்கள் கேட்ட 20 லட்சத்தை தந்த பிறகுதான் மாநகராட்சி அதிகாரிகள் விண்ணப்பமே தந்தார்கள் என்றார் அந்த நண்பர்.

ஆனால், கவுன்சிலர் இந்த 20 லட்சம் எனக்கு மட்டுமல்ல இதில் கொஞ்சம் தான் எனக்கு மற்றவற்றை மேலே கொடுக்க வேண்டும் என்று சொன்னார் என்ற தகவல் என் நண்பர் சொல்லிவிட்டு சரி வேலையெல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்பி இருந்தபோது திடீரென குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வந்து உங்களுக்கு குழாய் இணைப்பு தர வேண்டும் என்று சொல்லி அவர்கள் லஞ்சமாக ஒரு தொகையை சொன்னார்கள்.

அப்போது அவர்களிடம் நான் ஏற்கனவே கவுன்சிலரிடம் தந்து விட்டேன் என்று சொன்னபோது அது மாநகராட்சி வேலைக்காக தந்தது அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றார்கள். அதன்பிறகு அவர்கள் கேட்ட தொகையை தந்து வேலையை முடித்தேன். இது போதாது என்று இன்னொரு சின்ன கட்சியை சேர்ந்த ஐந்து பேர் வந்து "நீங்கள் முறைப்படி கட்டிடம் கட்டவில்லை என்று நாங்கள் பொதுநல வழக்கு போடுவோம்" என்று மிரட்டி அவர்களும் சில லட்சங்களை வாங்கி போய் விட்டார்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் லஞ்சம் ஆகவே தந்துவிட்டேன் என்று அலுத்துக் கொண்டார் அந்த நண்பர்.

நான் அப்போது உங்களுக்கு நிறைய அரசியல் தொடர்பு இருக்கிறதே அதை பயன்படுத்தக் கூடாதா என்று கேட்டபோது எல்லோரிடமும் பேசினேன் நாங்கள் பேசினால் கொஞ்சம் பணத்தை குறைத்துக் கொள்வார்கள் அவ்வளவு தான். ஆனால் உன் வேலை தாமதம் ஆகும்.

இப்போது இந்த ஆட்சியில் இப்படித்தான் நடக்கிறது. ஜெயலலிதா, எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சியில் கவுன்சிலர்கள் இருந்தார்கள் ஏதோ ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்று கேட்பார்கள். அவ்வளவுதான் அது கூட வற்புறுத்தி எல்லாம் கேட்க மாட்டார்கள் என்று சொன்ன அந்த நண்பர் எனக்கு ஏதோ பணம் வந்தது நான் செலவு செய்தேன் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டத் தொடங்கினால் அவர் நிலைமையைப் பற்றி யோசித்தால் எனக்கு பயமாக போய்விட்டது என்றார். அது உண்மைதான்.

குழந்தைகளை நல்லா வளர்த்திருக்கீங்க என்ற வார்த்தை தான் ஒரு தாய்க்கு கிடைக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது என்று ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்தது. சரிதானே ?