ஒரு திரைப்படத்தில் மறைந்த நடிகர் சுருளிராஜன் ‘எட்டுக்குள்ளே ஒரு நம்பர் சொல்லு’ என்ற கேள்விக்கு, ‘ஒம்போது’ என்று அப்பாவியாக பதில் அளிப்பார்.
எட்டு ஒரு மகத்தான எண். தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் என்ற பகுப்பு முக்கியம் வாய்ந்தது.
‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் (எட்டாம் வீட்டில்) சனி’ என்பார்கள். எட்டைத் தொட்டு தாண்டிவிட்டால் சுகம் தான்.
மேலை நாடுகளில் எட்டு என்கிற எண்ணை தவிர்க்கும் சென்டிமெண்ட் உண்டு.
ஆனா பாருங்க! ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ’ என்று சூப்பர் ஸ்டார் பாட்ஷாவில் பாடிய பிறகு 8 எனும் எண்ணின் தோஷம் நீங்கிவிட்டது.
பல்பு வாங்கும் போது அசடு வழிந்து என் முகம் கூடத்தான் அஷ்ட கோணலாக மாறும். என்ன செய்வது?
சிறிய வயதில் வாய்ப்பாடு சொல்வதில் 8X8 என்ற பெருக்கலை ‘எட்டோட்டு அறுபத்தி நாலு’ என்போம்.
எட்டோட்டுக்கு இலக்கணக் குறிப்பு ஏதும் உண்டா தெரியவில்லை.
சில காலம் முன்பு, நெடுக்க வாக்கிங் போவதைவிட, 8 போட்டு நடப்பது என்பது பிரபலமானது. 8 என்னும் வழித்தடத்தில் சுழன்று சுழன்று நடந்திருக்கிறீர்களா? நான் கொஞ்ச நாள் நடந்து பார்த்தேன். ஒரு பக்க இடுப்பு லேசாக சைடு வாங்குவதை உணர்ந்து நிறுத்தி விட்டேன்!
இன்று காலை பேத்தி அக்ஷரா என்னிடம், “தாத்தா உனக்கு கணக்கு சரியா வருமா?” என்று கேட்டாள்.
நானும் கன கம்பீரமாக “நானு கணக்குல எக்ஸ்பர்ட் கண்ணு! செண்டம் வாங்குவேன் தெரியுமா!” என்றேன்.
அவள், “ஜீரோவையும் ஜீரோவையும் சேர்த்தால் என்ன வரும்சொல்லுங்க?” என்று கேட்டாள்.
“ஜீரோ தான் வரும்” என்றேன்.
“ஒரு பூஜ்ஜியத்தின் கீழ் இன்னொரு பூஜ்ஜியம் சேர்த்தால் எட்டு வரும் தாத்தா. நீங்க எக்ஸ்பர்ட்டு வேற!!”என்று பரிகசித்தாள்.
“சரி தாத்தா! அடுத்த கணக்கையும் சொல்கிறேன். இதுக்காவது சரியாக விடை சொல்லணும்” என்று தொடர்ந்தாள்.
“உங்க கிட்ட இரண்டு 3 தரேன். அவற்றை சேர்த்தால் என்ன வரும்?” என்று வினவினாள்.
என்ன பாப்பா? எல்கேஜி கேள்வியா இருக்கு! இரண்டு மூன்று சேர்த்தால் ஆறு வரும் என்றேன்.
“மறுபடியும் தப்பு தாத்தா! ஒரு மூன்றை வலது பக்கமாக திருப்பி, ‘Ɛ’ அதோடு இன்னொரு மூன்றை சேர்த்தால் அப்பவும் எட்டு தான் வரும். கொஞ்சம் லேட்டர்லா யோசிக்க மாட்டியா தாத்தா? என்றாள்.
“மூணை இப்படி Ɛ திருப்பி போடற சிம்பலுக்கு என்ன பேரு தெரியுமா தாத்தா?”
“அப்படில்லாம் எதுவும் இல்லே. அடிச்சி உடாதே!” என்றேன்.
“டியர் தாத்தா! அதுக்குப் பேரு ஃப்ளிப்டு 3. அதை எப்ஸிலான் சிம்பல்னு சொல்லணும்”
“இது உனக்கெப்படிம்மா தெரியும்?”
“அண்ணா தான் சொன்னான்!” என்று உள்ளே போய் விட்டாள்.
“சே! எனக்கு ஸ்கூல் நாளிலே இதையெல்லாம் சொல்லிக் குடுக்காம மங்களம் டீச்சர் ஏமாத்திட்டாங்களே!”
இப்படியாகத்தானே இன்றைய பல்பு எட்டு என்ற எண் வடிவில் தலைக்கு மேல் சன்னமாக எரிகிறது.
Leave a comment
Upload