தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 88 - பரணீதரன்

ஆறாரைச் சக்கர பந்தம் பற்றி நமது பரணிதரன் தொடர்கிறார்.

20240827130253214.jpg

மாதவனே தென்னரங்கே சமான்மருளா கமிகு

போதனுமன் பிற்றோழுகே சவபுரைகூர் பவமே

வாதிதமா குதற்கிங்கே யெனாருயிர்கா பொதுவே

வேதநமா நமபோதநை வார்க்குள்ளமே தகவே

  • மாறனலங்காரம்

மேலே உள்ள பாடல் திருமாலின் பெருமையை குறித்து பாடப்பட்ட பாடலாகும். லட்சுமி தேவியை தன்னகத்தில் உடையவனே, தென்னரங்கம் என்று அழைக்கப்படும் திருவரங்கத்திற்கு அரசனே, மேகம் போன்ற நிறத்தை உடையவனே, பிரம்மன் முதலிய சகல தேவர்களால் வழங்கப்படுபவனே, கேசவன் என்று அழைக்கப்படுபவனே, அனைத்திற்கும் மேலானவனே, அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக இருப்பவனே, உன்னை நினைத்து உருகுபவர்களின் இதயத் தாமரையில் உறைபவனே, வேத முதல்வனே, உன்னை நமா நம என்று நான் நித்தமும் வணங்குகிறேன், அதற்கேற்றவாறு அடியேனுக்கு மறுபிறப்பு இல்லாதவாறு காத்து நீ அருள் செய்ய வேண்டும்.

இதில் தென்குருகூர் என்ற நம்மாழ்வார் பிறந்த ஊரின் பெயர் அமையுமாறு பாடப்பட்டு பாடல் ஆகும். இந்தப் பாடல் ஆறாரை சக்கர பந்தத்திற்கு எடுத்துக்காட்டாக மாறன் அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது.

20240827130311892.jpg

தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த

கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த

பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க

தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே

  • தண்டியலங்காரம்

மேலே உள்ள பாடல் நாகை பட்டினத்தின் சிறப்பையும், அங்கு வாழ்கின்ற பெண்களின் கண்கள் சிறப்பையும் பற்றி கூறும் பாடல். மன்மதனின் அம்புகளில் உள்ள பூக்களும், தேவியரின் இருக்கைகளான மலர்களும், நீலோற்பல மலர்களும் நாகையில் யாழிசையை பயிலும் தாமரையை ஒத்த பெண்களின் கண்களுக்கு தோற்றுப் போகும். இது போதிவானவர் என்ற சொல் வருமாறு உருவாக்கப்பட்ட செய்யுளாகும். இந்தப் பாடல் ஆறாரை சக்கர பந்தத்திற்கு எடுத்துக்காட்டாக தண்டி அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது.

20240827130328365.jpg

நன்ன ருணுங்கடுப் போநகப் பண்ணவ நாம்விளைத்த

பன்னகம் பூண்சிவ வீகுக பத்தி பரிந்துதொண்டர்

தின்மை யகழ்ந்தோர் நிலைகதி யாக்கருட் சீலவுச்ச

நன்மைப் பழங்கதி யாய்ந்தவர் சார்நகு லேசவந்தே

  • நகுலேச்வர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

நன்கு உருவான ஆலகால விஷமாகிய நஞ்சை உணவாகக் கொண்ட கடவுளே, அச்சத்தை உண்டாக்கும் பாம்பினை ஆபரணமாக கொண்ட சிவபெருமானே, அடியார்களுக்கு வருகின்ற துயரங்களையும் துன்பங்களையும் பரிந்து வந்து அழிப்பவரே , அவர்களுக்கு ஒப்பில்லாத உயர்ந்த நிலையை கொடுக்கக் கூடிய தயா சீலரே, உயர்ந்த ஞானிகளும் தெளிந்த ஞானத்தை உடையவர்களும் பக்தியோடு வணங்கும் நகுலேஸ்வரத்தில் வீற்றிருக்கும் நகுலேச்வரரே, அடியேனுக்கு பக்தியை தந்தருள வேண்டும். இது நகுலைப்பதி (நகுலேச்வரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்) என்ற சொல் வருமாறு உருவாக்கப்பட்ட செய்யுளாகும்.

20240827130345354.jpg

தேவா திபநிச மாவைய கந்த திணங்​கொண்மறை

பாவா லுரைவர கல்லா கமநெறி பற்றிடவுள்

வாவா னரச வடிவேற் கரத்த வரமருள்வை

தேவா விபாகர வாவிற்றை நாளாள் செயவையனே

  • மாவை திருவிரட்டை மணிமாலை

தேவர்களுக்கு அதிபதியாகவும் சேனாதிபதியாகவும் இருக்க கூடிய கந்தபெருமானை மறை என்று அழைக்க கூடிய வேதங்கள் புகழ்கின்றன, வேதங்களுக்கு விளக்கம் கூறிய முருகப் பெருமானின் வடிவேல் ஏந்திய கரங்கள் நமக்கு வரங்களை அருள்பவை, அப்படிப்பட்டவரை நாம் சரணடைந்து அவர் அவர்களை பெற வேண்டும். இது சரவணபவ (முருகப்பெருமானின் தாரக மந்திரம்) என்ற சொல் வருமாறு உருவாக்கப்பட்ட செய்யுளாகும். இது இலங்கையில் உள்ள மாவிட்டபுரம் (இன்றைய மாவை) கந்தப்பெருமானை பற்றிய பாடல் ஆகும்.

வேறு நாகரீகங்களில் உள்ள சில சக்கர பந்தத்தை கீழே கொடுத்துள்ளேன். அவர்களும் நம்மைப் போலவே சக்கர பந்தத்தை பயன்படுத்தி உள்ளனர். உதாரணமாக கீழே உள்ள சக்கர பந்தங்கள் தென் அமெரிக்காவின் ஆஸ்டக், மாயன், ஐரோப்பாவின் வைக்கிங், ஆசியாவின் சீனர்கள், ஆப்பிரிக்காவின் பழங்கால எகிப்து, ஆஸ்திரேலியாவின் மாவுரி ஆகிய நாகரிகங்களின் படங்களாகும். இவற்றில் நமது சக்கர பந்தங்களை போலவே உருவங்களும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பந்தங்களை பற்றிய ஞானம் உள்ளவர்கள் இவற்றை ஆராய்ந்தால், நமது பந்தங்களுக்கும் இவர்களின் பந்தங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

20240827130403136.jpg

அடுத்த வாரம் எட்டாரைச் சக்கர பந்தத்தை பற்றி பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.