தொடர்கள்
பொது
காற்றினிலே வரும் கீதம் - நாடக அனுபவம் - வேங்கடகிருஷ்ணன்

2024082615305867.jpg

இந்தியாவின் கவிக்குயில் எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், வீ.எஸ்.வீ.ரமணன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில், த்ரீ என்டெர்டெய்னர்ஸ் வழங்கிய "காற்றினிலே வரும் கீதம் " நாடகம் அம்மாவின் 108 வது பிறந்த நாளன்று அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் சென்னையில் நிகழ்ந்தது.

20240826153226851.jpg

நான்கு நாட்களும் பார்த்தவன் என்ற வகையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் நாள் எம்.எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறு முதல் முறையாக மேடையில் என்கிற பிரமிப்பு நடித்தவர்களைப்போலவே எனக்கும் இருந்தது. நிகழ்வுகளை காட்சி படுத்தியிருந்த விதம், ஒளி , ஒலியின் மூலம் காட்சிகளை நகர்த்தி சென்ற விதம் பாராட்டவேண்டிய ஒன்று. பெரிய அளவில் காட்சியமைப்புக்கான செட்டுகள் இல்லை. ஓரிரு பொருட்கள் மூலமாகவே , காட்சி நடக்கும் இடங்கள் வேறுபடுத்தி காண்பிக்கப்பட்டிருக்கின்றன. முழு நாடகமும் கற்பனைக்கும், வரலாற்று உண்மைக்கும் நடுவில் பயணிக்கிறது. உதாரணமாக எம்.எஸ் , சதாசிவம் பம்பாய் ரயில் பயணம் (ஏனோ தில்லானா மோகனாம்பாள் ரயில் பயணக் காட்சி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை) சதாசிவம் , வ வே சு சந்திப்பு, பின்னர் அவரை விட்டு சதாசிவம் விலகியது, சதாசிவம் வீட்டில் எம்.எஸ் முதன் முதலாக நுழைவது..போன்றவற்றை சொல்லலாம்.

20240826153530369.jpg

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வசனம் மற்றும் பாடல்கள் சில சமயம் நடிகர்களின் வாயசைப்பிற்கு பொருந்தாமல், காட்சியோடு ஒன்றியிருக்கும் நம்மை, இது நாடகம் தான் என்று நிஜ உலகிற்கு அழைத்து வந்துவிடுகிறது. காயத்ரி வெங்கட்ராகவன் குரலும் சிறுவயது எம்.எஸ் க்கு குரல் கொடுத்த சிறுமியின் பாடலும் நல்ல முயற்சி. ராஜாஜி, காந்தியைத் தவிர மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. ஆறுவயது எம். எஸ் அருமையான நடிப்பு. காஞ்சி பெரியவரிடம் யுனைட்டட் நேஷன்ஸ் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு பேசுவதில் துவங்கி, எம்.எஸ் அம்மா தன வாழ்க்கையை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக ஆரம்பிக்கிறது. TTD க்காக அன்னமய்யா கீர்த்தனையை பாட ஒப்புக்கொள்வதோடு நிறைவு பெறுகிறது.

பாம்பே ஞானத்தின் மேடை நாடக அனுபவம், அவரது டைரக்ஷனில் நன்றாக வெளிப்படுகிறது. வசனங்கள் சில இடங்களில் "பளிச்". சண்முக வடிவாக வரும் நடிகை தனித்து நிற்கிறார். தில்லானா மோகனாம்பாள் வடிவு ஆங்காங்கே நினைவுக்கு வருகிறார்.

சதாசிவமாக பாஸ்கர் நல்ல தேர்வு. எம்.எஸ் நம் மனதில் முதல் காட்சிலேயே வந்து உட்கார்ந்து விடுவதால், லாவண்யாவுக்கு பெரிய வேலையில்லை. முதல் காட்சியில், எம்.எஸ் ப்ளூ புடவையிலேயே வருவது அதற்கு துணை செய்கிறது.

2024082615371616.jpg

எல்லாவற்றையும் இரண்டரை மணி நேர நாடகத்தில் அடக்குவது மிகவும் சிரமமான ஒன்று. சில காட்சிகள் துண்டு துண்டாய் நிற்கின்றன. ஆனாலும் , எல்லோரின் உழைப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

" காற்றினிலே வரும் கீதம்" - உண்மை கலந்த கற்பனை. அந்த கவிக்குயிலுக்கு செய்யும் அஞ்சலி.