அஸ்வின் ரவிச்சந்திரன்
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், சினிமா மற்றும் கிரிக்கெட் எது ஜனரஞ்சகத்தின் உச்சத்தை தொட்ட துறை என்று விவாதம் நடத்தினால், அது ஒன்றையொன்று விஞ்சும் விதமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஊருக்கு ஒரு ரசிகர் மன்றம், முதல் நாள் காட்சிக்கு அலைமோதும் கூட்டம், ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் என இவை அனைத்தும் மக்கள் சினிமா மீது வைத்திருக்கும் ஆர்வத்திற்கு சான்றாக அமைந்த செயல்கள். கிரிக்கெட் ஆர்வலர்கள், நாங்களும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல எனும் தொனியில், இந்திய வீரர்கள் செல்லும் பேருந்தை தொடர்ந்து செல்லுதல், இந்திய அணியின் டி-ஷர்ட் அணிதல், உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டம் என தங்கள் ஆதரவை தொடர்ந்து பல விதமான செயல்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே வந்துள்ளனர். இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் , நாமும் மட்டை எடுத்து இந்திய அணிக்காக விளையாட மாட்டோமா என்கிற துடிப்பு ஏற்படுவது இயல்பே! தெரு நடுவில் நடைபெறும் கில்லி கிரிக்கெட் தொடங்கி, தனது பள்ளிக்கு விளையாடி, பின் கிளப் கிரிக்கெட், அண்டர் 16, 19, ரஞ்சி என படிப்படியாக தாண்டி, இறுதி படியான இந்திய அணிக்கு விளையாடுதல் என்பதே அவர்களின் இலக்கு. இது இன்றைய காலகட்டத்தில் இரு பாலருக்கும் பொருந்தும்.
தமிழ் நாட்டிலிருந்து இந்த வரிசையில் முன்னேறி, இறுதி கட்டத்தை அடைந்து, அதன் சிகரத்தை தொட்டவர்கள் மிகச் சிலரே. வடக்கு, தெற்கு , இந்தி மொழி என நாம் எவ்வளவு காரணங்களை அடுக்கிக்கொண்டே சென்றாலும், இந்த விளையாட்டில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, உலக அரங்கில் தொடர்ந்து விளையாடிய தமிழ் வீரர்களை நாம் விரல் விட்டு எண்ணி விட முடியும். அந்த வரிசையில் இடம் பிடித்ததோடு மட்டுமின்றி, உலக சாதனை பட்டியலில் பலமுறை இடம் பிடித்தவர் - சென்னையை சேர்ந்த நம் வீட்டு பிள்ளை அஸ்வின் ரவிச்சந்திரன். எந்த ஒரு பின்புலமும் இன்றி, ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பாணி அமைத்து, தனது விடாமுயற்சியாலும், புதுப்புது யுக்திகளாலும் அனைவரின் கவனத்தையும் தன் பால் திரும்பியுள்ளார்.
தற்பொழுது நடைபெற்ற இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தது. இந்த நிலையில் களமிறங்கிய அஸ்வின் ஜடேஜாவுடன் இணைந்து, 112 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து விளாசியதுடன், 6 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். 36 முறை ஐந்து விக்கெட்டுகள் எடுத்த வீரர் அஸ்வின். ஆறு முறை நூறு ரன்களும், 14 முறை 50 ரன்களும் எடுத்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நிகழ்த்திய சாதனை அவரது பிறந்தநாளில் அமைந்தது கூடுதல் சிறப்பு. இந்த டெஸ்ட் போட்டியில் இவர் நிகழ்த்திய சாதனையின் மூலம் தான் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
கிரிக்கெட் தவிர, பல துறைகளில் பரிமளிக்கும் பன்முக திறமையாளர் இவர். இவரது youtube ஒளியலை வரிசைக்கு (Channel) இருக்கும் பார்வையாளர் பட்டியலே இதற்கு ஒரு சான்று.கோவிட் காலத்தில் ஆரம்பித்த இவரது சேனல் கிரிக்கெட் மட்டுமின்றி, உலகில் இருக்கும் கிரிக்கெட் மைதானம், சினிமா, விளையாட்டு நுட்பங்கள் என பலதரப்பட்ட தலைப்புகளை ஆராயும் களமாக அமைந்துள்ளது. இவரது "குட்டி ஸ்டோரி" தொடருக்கு நானும் ஒரு மிகப் பெரிய விசிறி என்பதை பெருமையாக இந்தத் தருணத்தில் சொல்லிக்கொள்ள விழைகிறேன். எந்த குட்டி கதைகளை எழுத்து மூலம் புத்தகமாக வெளியிட்டு, ஒரு எழுத்தாளராகவும் மாறியிருக்குகிறார் அஸ்வின். இவரது மனைவி ப்ரீத்தி இந்த youtube சேனல் ஆரம்பிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.அவர், ஒரு பத்திரிக்கையாளரும் கூட. இவை அனைத்தையும் தாண்டி அஸ்வின் ஒரு சினிமா பிரியர். இவரது பல காணொளிகள், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சினிமா தலைப்புகளுடன் விளங்குவதோடு, இவர் அவ்வப்போது எடுத்து விடும் பஞ்ச் வாக்கியங்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.
பிரபல ஹர்ஷா போக்லே, அஸ்வினின் இந்த சாதனை பற்றி கூறுகையில் இவரது ஆட்டம் இந்த போட்டியில் வித்தியாசமாக இருந்ததாகவும் , அஸ்வினிடம் இதை பற்றி அவர் கேட்டபொழுது எந்த ஒரு விளைவையும் எதிர்பாராமல் விளையாடும் நோக்கோடு செயல்பட்டதாக அவர் பதிலளித்திருப்பதாகவும் கூறினார். தோனியின் பார்முலா ஆயிற்றே! என நீங்கள் நினைப்பதை நானும் உணர்கிறேன். இதை பற்றி ஹர்ஷா மேலும் கூறுகையில், TNPL இல் களமிறங்கிய அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்திருக்கிறார் . இது அவரிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி,பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் தன்னை புதுப்பித்து, வித்தியாசமான கோணத்தில் பங்களிக்க வாய்ப்பளித்திருக்கிறது எனக் கூறி வியந்துள்ளார். உலக அரங்கில் நட்சத்திர தகுதி பெற்ற ஒரு வீரர், தனது மெனக்கெடல்கள் மூலம் வெற்றி பெற்று, முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்ற கூற்றை மெய்ப்பித்திருக்கிறார். முப்பத்தி எட்டு வயதாகும் அஸ்வின் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று அனைவரும் எழுப்பும் வினாவை தாண்டி,பங்களாதேஷ் உடனான போட்டிகளுக்கும் மற்றும் ஆஸ்திரேலியாவில் அடுத்து விளையாடவிருக்கும் தொடருக்கும் விகடகவி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம் !
Leave a comment
Upload