தொடர்கள்
கதை
சுயம் வரம் - பா அய்யாசாமி

20240828081721121.jpeg

கடவுளே! இந்தப் பெண்ணையாவது இவனுக்கு பிடிக்கனுமே! எனக்கரங்களைக்கூப்பி வேண்டிக்கொண்டிருந்தாள் லலிதா. என்ன வேண்டுதலா ? நீயும் வேண்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்.
நான் விரும்புகிற மாதிரி பெண்ணும் கிடைக்கப்போறதில்லை எனக்கு எந்த அவரசரமுமில்லை என தனது அம்மாவிடம் பேசிவிட்டு அலுவலகம் புறப்பட்ட ஸ்ரீதரை நிறுத்தினாள் லலிதா..


இல்லடா, இன்றைக்குப் பார்க்கப்போகிற பெண் படித்தவள், அமைதியானவளாம் என்றதும்.. யாரு அந்த தரகர் சொன்னாரா ?

ம்..ம் என்ற லலிதா, முக்கியமாக அந்த பெண் நீ விரும்பிய
மாதிரியே வேலைக்கு போகலையாம், வீட்டிலேதான் இருக்குதாம்,
வா சாயந்திரம் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்திடலாம் என்று
கெஞ்சாதக்குறையாக சொன்னாள் லலிதா. சரி போகலாம் என்றபடி
கிளம்பிப்போன ஸ்ரீதருக்கு இந்த ஆண்டோடு வயது 29 பூர்த்தியாகிறது.
இதுநாள்வரை கல்யாணமே வேண்டாம் என இருந்தவன், இப்போது
வேலைக்குப் போகாத பெண்ணாகயிருந்தால் பார்க்கலாம் என
சொன்னபிறகுதான் நிம்மதியடைந்தாள் லலிதா.
தற்போதைய காலக்கட்டத்தில் இருவரும் வேலைக்கு செல்வதுதான்
சிறந்தது என எத்தனையோ நபர்கள் சொல்லியும், பிடிவாதமாக மறுத்து
வந்தவன் ஸ்ரீதர்.

அன்று அலுவலகத்தில் நுழைந்தபோது தரையைக் கூட்டிக்
கொண்டியிருந்த எழுபது வயதைக்கடந்த ஆயாவை நலம் விசாரித்தபடி
இருக்கையில் அமர்ந்தான். பாவம் இது! இந்த வயசிலே வேலைப் பார்த்து
வயத்தைக் கழுவுது, அவளுக்கு வாய்த்தப் பிள்ளையும் சரியில்லை
பேரனும் சரியில்லை, இவளோட ஒரு வேளை சாப்பாட்டைக் கூட தானே
கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் என வருத்தப்பட்டு

அவ்வப்போது உதவிகள் செய்வதால் ஸ்ரீதரிடம் அன்போடு பழகுவாள்
அந்த பாட்டி.

என்ன தம்பீ, இந்த வருடமாவது கல்லாணம் கட்டுவியா ? இல்லே நான்
போனதற்குப்பிறகுதானா ? என கேட்டபடி சென்றாள்.
ஸ்ரீதர்! இன்னும் எத்தனை நாள்தான் காத்தியிருக்கப்போறீங்க?
வேலைக்குப் போகிற பெண்ணே வேண்டாம்னு சொல்றீங்க ? நாங்கள்
எல்லாம் வேலை பார்க்கலையா, சம்பாதிக்கலையா ? வீட்டையும்
சமாளிக்கலையா ? என கேட்டனர் அலுவலக தோழிகள்.


சம்பாதிக்கிறீங்க ? ஆனால் நிம்மதியாக இருக்கீங்களா ? உண்மையைச் சொல்லுங்கள் என ஸ்ரீதர் கேட்டதும் அவர்களிடம் பதில் வார்த்தையில்லாமல் யோசனையில் நின்றனர்.

உங்களின் இந்த அமைதிதான்,என்னை காலம் கடக்க வைக்கின்றது என்றான். ரொம்பவே ஆணாதிக்கம் உள்ளது இவரிடத்தில், பெண்கள்னா வீட்டிலேயிருந்து தனக்கு சேவகம் செய்யனுமென
நினைக்கிறார் போல...

அதெல்லாம் காலம் மலையேறி போயிடுச்சு,அது தெரியாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்காரு என்று சிரித்தபடி கடந்தார்கள்.

போம்மா ? என்னால் லீவெல்லாம் போட முடியாது, இதே வேலையா உனக்கு ? எத்தனையோ பேர் வந்தார்கள், என்ன சம்பளம் வாங்குறா ? பத்தாதே என்றார்கள், இன்றைக்கு வருபவரோ வேலையே பார்க்க
வேண்டாம் என்கிறார், நீயும் வேலைக்குப்போகலையென தரகர்கிட்டே பொய் சொல்லச் செல்லி அவர்களையும் வரசொல்லியிருக்கே என தனது அம்மாவிடம் வாதிட்டுக் கொண்டியிருந்தாள் சுமதி.

ஆமாம் சுமதி, எனக்கும் வயசாகிட்டே போகுது, சீக்கிரமாக கல்யாணம் செய்து பார்க்கனுங்கிற ஆசை இருக்காதா ?

அதற்காக பொய் சொல்லனுமா ? நாளை அவங்களுக்கு விஷயம் தெரிந்தால் எல்லோருக்கும் சங்கடம்தானே என கேட்டாள்.

நல்ல இடம், ஒரே பையன், பிக்கல் பிடுங்கல் இல்லை, அவர்கள் விருப்பபடி வேலையைக்கூட நீ விட்டுவிடலாமே என்று மெதுவாக சொன்னதும், என்னது வேலையை விடனுமா? இந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு? கஷ்டப்பட்டு படித்து, நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் வாங்கி ஓரளவு நம் குடும்பத்தை வசதியாகவும்,என்னை சுதந்திரமாகவும் வைத்திருப்பதே இந்த வேலைதான், அதெல்லலாம்
முடியாது போம்மா என சண்டையிட்டுக்கொண்டே அலுவலகத்திற்கு கிளம்பி போனாள்.


மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்து காபி அருந்தியபடி இருக்க, தம்பீ பொண்ணுகிட்டே ஏதேனும் பேசனும்னா பேசிக்கோங்க என்று சுமதியின் அம்மாவே அனுமதி வழங்கிட இருவரும் தனியே
கொல்லையில் உள்ள மாமரத்தடிக்கு சென்றனர்.


சுமதியே ஆரம்பித்தாள், ஏங்க, வேலைக்குப்போக கூடாதுனு கண்டிசன் போட்டிங்களாமே அதற்கான காரணம் தெரிஞ்சுக்கலாமா ? என கேட்டதும் நீங்க வேலைக்குப் போறீங்களா ? என பயந்தபடி கேட்டவனை "இல்லை சும்மா கேட்டேன்.காரணம் தெரிஞ்சுக்க" என்றாள் சுமதி.
பெண்கள் வேலைக்குப் போக வேண்டாம் என்பது, என் ஆணாதிக்க மனநிலை என என்னைத்தவறாக நினைச்சுகிடாதீங்க, பெண்களுக்கும் சுய சிந்தனைகள், விருப்பு, வெறுப்புகள் உண்டு என்பதைப் புரிந்துக்
கொண்டதினாலும்,பெண்ணுக்குரிய அங்கீகாரம், அன்பு,பாராட்டு போன்ற அனைத்து உரிமைகளையும் தர வேண்டியதும் அவசியம் என்கிற நிலையிலிருந்து சொல்கிறேன்.

என்னமோ சொல்ல வருகிறார் என்ற ஆர்வத்தில் ஸ்ரீதர் சொல்வதை நன்றாக கவனிக்க ஆரம்பித்தாள் சுமதி.

ஸ்ரீதரே தொடர்ந்து,,பொதுவாக பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்,மனரீதியான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.


அவை தானாகவே சரியாகிவிடும் என்கிற மனநிலையிலேயே இருப்பார்கள், காரணம், அதற்கு முக்கியத்துவம் தரமுடியாத அளவுக்கு வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆகவே மனஅழுத்தத்தில் சிக்கிக்
கொள்கிறார்கள். இவையெல்லாம் என் அம்மா அடுப்படியில் வெந்து,

வேலை வேலை என அலைந்து, அனுபவித்தது. அதன் விளைவுகளை நான் பார்த்தவகையில் எடுத்த முடிவுதான் இது. அவர்களும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, வாழ்க்கையை வாழவேண்டும், அதற்கு நான் நல்லதொரு சக மனிதனாக, கணவனாக, தோழனாக இருந்து துணைபுரியவேண்டும் இருவருக்குமான அந்த வாழ்க்கையில்தான் அர்த்தம் உண்டு என ஆழமாக நம்புவதால் வேலைக்குச் செல்லும் பெண் வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கின்றேன் என்று முடித்தபோது,

சூப்பர் என கையெடுத்து கும்பிட்டாள் சுமதி. என்னங்க ரொம்ப போரடிச்சிட்டேனா ?! எனக் கேட்டவனைப்பார்ரத்து யோசிக்க வச்சுட்டீங்க என்றாள் சுமதி.

அனைவரும் கிளம்பி போனபிறகு, அம்மா நான் வேலையை விட்டு விடப்போகிறேன் என்றாள் சிரித்துக்கொண்டே சுமதி என்னடி சொல்றே நிஜமாவா ? கேட்டாள் அம்மா.

ஆமாம்மா...தன் அம்மா பட்ட கஷ்டத்தைப்பார்த்து அது வேறு ஒருவருக்கு வரக்கூடாது என நினைக்கிறார் என்றால் எப்படி வளர்ந்திருப்பார் இவர்னு தெரியுதம்மா, இருவரும் பணம் சம்பாதித்தால் சந்தோஷமாக வேண்டுமானால் இருக்கலாம்மா.. ஆனால் நிம்மதி ? நாங்கள் நிம்மதியாக இருக்கவே விரும்புகிறோம்மா.. இவர் எனக்கு கிடைத்தது வரம்மா... என்றாள்


தீர்க்கமாக.