தொடர்கள்
சினிமா விமரிசனம்
GOAT - முதல் நாள் முதல் காட்சி - லைட்பாய்

20240807013643663.jpg

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே வந்திருக்கிறது வெங்கட் பிரபுவின் கோட்.

ஏராளமான பொருட்செலவில் ஏகப்பட்ட லோகேஷன்களில், ஏராள செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்களுடன், கிராபிக்ஸில் வேலை மெனக்கெட்டு, விஜயகாந்தை கொண்டு வந்து, இளம் விஜயை படம் முழுவதும் வரவைத்து, பிரஷாந்த், ஜெயராம்,பிரபு தேவா, மோகன்,சிவ கார்த்திகேயன் (பாவம் கழிப்பறை கிட்டயே நின்னவர் தான் ஆளையே காணோம்) திரிஷா, ஸ்னேகா, யோகி பாபு, அஜ்மல், வைபவ், விடிவி, ஒய்ஜி மகேந்திரா இப்படி ஒரு துணை நடிகர்கள் லிஸ்ட் போல மெயின் நடிகர்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். எல்லாருக்கும் வேலை கொடுக்க வேண்டுமல்லவா.. அதனால் மூன்று மணி நேரங்கள் வெச்சு செய்கிறார்கள்.

20240807072319367.jpeg

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பாட்டு. ஷாம்பெய்ன் துவங்கலாமா என்றதும் என்ன காம்பெய்ன் துவங்கலாமா வா என்று கேட்பதில் ஆகட்டும், அவர் செல்லும் கார் நம்பர் ப்ளேட் CM 2026 என்ற குறியீடாகட்டும், இதெல்லாம் பார்த்து பார்த்து தான் செய்திருக்கிறார்கள்.

விஜயின் லாஸ்ட் பட் ஒன் படம் அதாவது கடைசிக்கு முன்னாடி படம். அதில் விஜயை எல்லோருக்கும் பிடிப்பது போல காண்பிக்க வேண்டியது தானே ஒரு டைரக்டரின் கடமை. என்னதான் ஒரு நல்ல விஜய் இருந்தாலும் இன்னொரு விஜய் மீது ஆடியன்ஸுக்கு இப்படியா ஒரு வெறுப்பு வருவது போல் கதாபாத்திரப்படுத்துவது. பெரிய முரண்பாடு இது.

20240807072344348.jpeg

எத்தனை இரட்டை வேட ஹீரோக்கள் போட்டாலும் ஒரு ஹீரோவை கெட்டவனாகவே காட்டினாலும் இப்படி கோரமாக அந்த கேரக்டரை வெறுக்க வைப்பது போல் இதுவரை யாரும் யோசித்ததே இல்லை. கடைசி வரை இந்த வெறுப்பை மெயிண்டெய்ண் செய்திருக்கிறார் டைரக்டர். இது ஒரு சறுக்கல்.

20240807072815151.jpeg

1950 அல்லது 60களில் வந்த கதை. அதை ஏராள டிஜிட்டல் பூச்சுக்களோடும் ஹாலிவுட் டைப் காட்சியமைப்பிலும் பழைய சோறை பக்கா பாக்கேஜ் செய்து விற்க பார்க்கிறார்கள். அதிலும் விஜய்காந்த், மற்றும் ரொம்ப சின்ன பையன் விஜய் சீரியஸ் சீனில் சிரிப்பு மூட்டுகிறது. அமெச்சூர்த்தனமாக இருக்கிறது.ஆண்டிராய்டு அப்ளிகேஷனில் செய்த ஏ.ஐ. போலும்.

கிளைமேக்ஸ் காட்சியில் தோனி வருவது மற்றும் சி.எஸ்.கே மாட்ச் காட்டுவது இதெல்லாம் அவர்களது கிரிக்கெட் ராசிக்காக போலும்.

20240807072651315.jpeg

கதை சொல்வது பாவம் என்றாலும் கோட் பார்க்க பழைய காலத்து அசோகன் படம் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அதிலும் அசோகன் இப்படி நொண்டிக் கொண்டே தான் வருவார்.

வெங்கட் பிரபு மங்காத்தாவிற்கு அஜித்திடம் கதை சொன்ன போது சார் நாலு கெட்டவங்க சார். நான் நல்லவனா என்று கேட்டாராம் அஜித். இல்ல சார் அவங்க நாலு பேரை விட நீங்க ரொம்ப கெட்டவன் என்றதும் ஓப்புக் கொண்டாரம் அஜித்.

அதைப் போல ஒரு ஒன் லைனர் சொல்லியிருப்பார் போல விஜய்க்கு. கடைசியில் கெட்ட விஜய் மனம் மாறி அக்மார்க் அறுதப் பழைய படம் போல ஆக்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு மட்டும் கொஞ்சம் டிவிஸ்ட்.

டிவிஸ்ட், டிவிஸ்ட், டிவிஸ்ட், இப்படி ட்விஸ்ட்டுகளாக வைத்திருந்தாலும் சலிப்பு தட்டுவதற்கு காரணம் புரியவேயில்லை. நீளம் காரணமாக இருக்கலாம். இன்னும் ஒரு அரைமணி நேரம் குறைக்கலாம். அத்தனை நீளம்.

நிஜமாகவே சிலர் எழுந்தே போய் விட்டார்கள் பாதியில்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு படம் பிடிக்காது இளைய சமுதாயத்திற்குத் தான் பிடிக்கும் என்று ஒரு காமெண்ட்டும் வந்தது தியேட்டரில். எழுந்து போனதில் ஒரு இளைஞரும் அடக்கம்.

படம் சொல்ல வரும் செய்தி....

வயது என்பது ஒரு நம்பர் தான்.

மூளைச் சலவை செய்தால் அதை திரும்ப சரி செய்வது கடினம்.

உளவுத் துறை அதிகாரிகள் எந்த நாட்டுக்கும் போய் எத்தனை கொலைகள் செய்தாலும் பிரச்சினையில்லை.

20240807072419522.jpeg

சில கேள்விகளும் தொக்கி நிற்கிறது.

அத்தனை பயத்தையும் பார்த்த ஒரு குழந்தை இத்தனை கொலைகள் செய்யும் அளவுக்கு பாதகனாக முடியுமா ?

இத்தனை துரோகம் கொண்ட ஒரு ஆளை கண்டு பிடிக்க அத்தனை வருசம் ஆகுமா ??

ஒரே ஒரு போன் காலில் பட்டென்று சொல்ல வேண்டிய ஒரு சிம்பிள் எச்சரிக்கையை, நேரில் தான் சொல்ல வேண்டுமா ? சரி, அதுவே ஒரு ஆங்கில பட பாணி என்றாலும், மெட்ரோ ரயிலுக்குள் அத்தனை நேரம் கிடைக்கும் போது கத்தி சொல்லியிருக்கலாமே ??

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு ஆனா இத்துடன் போதும்.

தமிழ் சினிமா டைரக்டர்களை எல்லாம் வரிசையில் நிற்க வைத்து எடுக்க வேண்டிய ஒரே ஒரு பாடம், ஒருத்தன் துப்பாக்கியால சுட்டா பின்னாடி நிக்கறவனுக்கு ஒன்னும் ஆவாதுன்னு இனியும் படம் எடுக்காதீங்கடா... வரிசையில் எட்டு பேர் நின்றாலும் கூட அத்தனை பேரையும் துளைத்து விடும் தோட்டா. இந்த ஆதார பெளதீக அறிவியலை அத்தனை பேருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இரண்டாவது ஆக்‌ஷன் படம் எடுங்க. இல்லைன்னா பயங்கர செண்டெமெண்ட் படம் எடுங்க. இரண்டையும் ஒரே சமயத்தில் ஆகாது.

சுருக்கமாக விஜய் ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டிய படம். விஜயை பொறுத்த வரை வாங்கிய சம்பளத்திற்கு இரண்டு மடங்காக உழைத்திருக்கிறார். சந்தேகமேயில்லை.

20240807072444230.jpeg

மற்றபடி சினிமா ரசிகர்கள் அல்லது நல்ல சினிமாவை தேடிப் போய் பார்ப்பவர்களுக்கு......"கோட்டு "தான்.