கருங்கல், களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளைப் பார்த்திருப்போம்.. மஞ்சளில் பிடித்து வைத்தால் கூட விநாயகர் நமக்கு அருள்பாலிப்பார். ஆனால் தேவர்கள் கடல் நுரையைக் கொண்டே விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டுள்ளனர்.
அந்த விநாயகரைத் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் சுவாமிமலைக்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன்நாயகி சமேத கபர்தீஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம். இக்கோவிலின் மூலவராகச் சிவபெருமான் கபஸ்தீஸ்வரராக இருந்தாலும் பிரதான தெய்வம் விநாயகரே ஆவார். வெள்ளை நிறம் கொண்டவர் என்பதால் "சுவேத விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார். (‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள்.) வெள்ளை மனம் கொண்ட இவரை எங்கிருந்து வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.
புராணத்தின் படி, தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடையும்போது, தடங்கல் ஏற்பட்டது. விநாயகரை வணங்காததால் தான் தடங்கல் உண்டானது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தார். விநாயகரின் ஆசியுடன் மீண்டும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்றனர். பின்னர், அந்த விநாயகரை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது:
திருவலஞ்சுழியின் மிகச்சிறந்த பிரசித்தமான கடல் நுரையாலான ஸ்ரீ சுவேத விநாயகர் அளவில் சிறியவர், சுமார் ஒரு அடி உயரமே உள்ள இந்த வெள்ளை விநாயகருக்கு மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இங்கு கிடையாது அதற்குப் பதிலாக புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாயகரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார்கள். இதுமட்டுமில்லாமல் வஸ்திரம், சந்தனம், பூக்கள் சாத்தும் வழக்கமும் இங்கு இல்லை. சுவேத விநாயகரை இங்குள்ள கருங்கல் ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம். மேலும் இவரது தும்பிக்கை வலப்புறமாக வளைந்திருப்பதும் திருவலஞ்சுழி என இவ்வூருக்குப் பெயர் வர ஒரு காரணம் என்றும் சொல்கின்றனர். சின்னஞ்சிறிய மூர்த்தியான ஸ்வேத விநாயகருக்கு அசாத்திய சக்தியும் கீர்த்தியும் இருப்பதற்குச் சாட்சி இங்கு வருகை தரும் பக்தர்களை வைத்தே சொல்லிவிடலாம்.
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது அங்கு நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு வேண்டினால் திருமண பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இவரை வழிப்பட்டால் வருடம் முழுவதும் வழிப்பட்ட பாக்கியமும், காரியத்தடைகள் எல்லாம் நீங்கி வெற்றியும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
கோயிலுக்குச் செல்லும் வழி:
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில், சுவாமிமலைக்கு அருகே திருவலஞ்சுழி இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம்.
இந்த அதிசய வெள்ளை விநாயகரை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பானது. !!
Leave a comment
Upload