அன்று ஆகஸ்ட் 15, காலை சீக்கிரம் எழுந்தவர் ,தன் மகனைக் கூப்பிட்டுப் பெட்டியில் இருக்கும் தேசிய கொடியை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டு வாசலில் கொடி ஏற்றியவுடன், கூடியிருந்த கிராம மக்களிடம், நீங்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொடி ஏற்றுங்கள். என்று சொல்லிவிட்டு மிட்டாய்களைக் கொடுத்தார்.
“இத பாருங்க !பாடுபட்டு வாங்கிய சுதந்திர நாளான இன்று ,டி .வி யில் மற்ற கண்றாவி படங்களைப் பார்ப்பதை தவிர்த்து, பாரதி, காந்தி, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன் படங்களை நீங்கள் பார்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளையும் பார்க்க செய்யுங்கள். நாட்டுப்பற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”
“ஜெய் ஹிந்த் ஜெய்ஹிந்த் பாரத்மாதா கி ஜே! என்று இருமுறை முழக்கமிட்டார்,
தன் மகனிடம்,“இந்த 80. வயதில் உடல்நிலை சரியில்லாத காரணமாக இந்த வருடம் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
.இன்னிக்கு சுதந்திர தினத்துக்கு நான் பள்ளிக்கூடம் போய்க் கொடி ஏத்தனும்.”
“நீ அந்த இனிப்புப் பாக்கெட் எடுத்துகிட்டு ஸ்கூல் வரைக்கும் கூட்டிப் போ” என்று சொன்னவர் மகனுடன்பள்ளிக்கூடம் புறபட்டார்..
அந்தக் கிராமத்தில் அது ஒரு நடுநிலைப் பள்ளி. எல்லா மாணவர்களும் மாணவியர்களும் பிரேயர் பாடி முடித்தனர்.
ஒவ்வொரு வருடம் குடியரசு தினம் ,மற்றும் சுதந்திர தினம் அன்று கணக்குப் பிள்ளை தாத்தா தான் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவார். எனவே அவர் வருகைக்காக எல்லோரும் காத்து இருந்தனர்.
திடீரெனச் சத்தம் “தாத்தா வந்தாச்சு “. கணக்குப் பிள்ளை தாத்தா வந்தாச்சு” என்று மாணவ மாணவியர்கள் அவரைச் சூழ ஆரம்பித்தார்கள்.
“பிள்ளைகளா! என் கண்ணு மூடுறதுக்குள்ள இந்த நடுநிலைப் பள்ளிக்கூடம் ஹைஸ்கூலா ஆக்கிடனும்னு நான் முயற்சி எடுத்து உள்ளேன் என்பது ஒங்களுக்குத் தெரியும்” .
நிச்சயம் அதற்கான உத்திரவு சீக்கிரம் வந்துடும்; என்று சொன்னவர்.சுதந்திர கொடி ஏத்திட்டுத் தலைமை ஆசிரியர் உதவியுடன் .தான் கொண்டு வந்திருந்த இனிப்புகளை எல்லோருக்கும் வழங்கி தன் சந்தோசத்தைப் பகிர்ந்தார்.
வீட்டுக்கு வந்தவர் மருமகளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டவர், பாதிக் குடிக்கும் போதே தனது மூச்சைநிறுத்திக்கொண்டார்.
“என்னது!! கணக்குப் பிள்ளை தாத்தா போயிட்டாரா?”
“பத்து நிமிடத்துக்கு முன்னாடி நல்லாத்தானே இருந்தாரு”.
செய்தி கேட்ட அடுத்த நொடியே மாணவர்கள், மாணவியர்கள் ,அவர் வீட்டுக்கு ஓட ,
தலைமை ஆசிரியரும் மத்த ஆசிரியர்களும் பக்கத்துத் தெருவில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு வேக வேகமாக ஓடினார்கள்.
ஊரில் ஒரு முதியவர் இறப்பு என்பது இயற்கையாக நடக்கக் கூடியது.தான்.
ஒரு குடும்பத்தில் ஒரு தாத்தாவின் மறைவு என்பது பேரப் பிள்ளைகளுக்கும் ,அவர் பிள்ளைகளுக்கும் நிரம்பவே வலி தரக்கூடியது!தான்.
ஆனால் இப்படிஒரு பள்ளிக் கூடத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவர்களும், ஆசிரியர்களும், மொத்த ஊர் மக்களும் ,தங்களின் தாத்தாவாகவே கருதும் ஒருவரின் மறைவு, கிராமம் முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்றால் அவர் மேல் எப்பேர்பட்ட அபிமானம் இருந்துருக்க. வேண்டும் .
செய்தி அறிந்து பக்கத்து கிராம மக்கள் .கூட்டம் வேறு அதிக அளவு .காணப்பட்டது.
மாணவர்கள் மாணவியர்கள் எல்லோரும்” “சற்று முன்பு தானே இனிப்பு கொடுத்து விட்டு போனீர்கள்!. தாத்தா! இப்படிப் பொசுக்குண்ணு போயேட்டீ ங்கீ ளே தாத்தா!”
அந்த அளவுக்கு இவர் மேல் பாசம் வரக் காரணம் அவர் என்ன செய்தார்?
சுதந்திரப் போராட்ட வீரர்,நேதாஜி படையில் சில காலம் இருந்தவர். சுபாஷ் இறந்த பிறகு , தன் கிராமத்துக்கு வந்தவர் கணக்குப் பிள்ளை யாகச் சில வருடங்கள் பணியாற்றியவர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தில் அரசு பள்ளிக் கூடம் அமைக்க இடம் இல்லாமல் பக்கத்து டவுனில் போய்ப் படித்து வந்த ஆண் பிள்ளைகள் நிலைமை இப்படி இருக்க, அந்தக் கிராமத்தில் இருக்கும் பெண் பிள்ளைகள் படிப்பறிவு இல்லாமல் இருக்கக் கண்டு, அதற்கு என்ன செய்வதென்று ஊர் மக்கள் தவித்த போது, - மெயின் ரோட்டில் உள்ள தனது பட்டா நிலத்தில் 250 குழியினை அரசுக்குத் தானமாகத் தந்து, கிராமத்தில் தொடக்கப் பள்ளி அமைய முழுக் காரணமாக இருந்தவர்.
.இந்தி புலமை,ஆங்கிலப் புலமை தெரிந்த காரணத்தினால் இதை வைத்துக்கொண்டு மாவட்ட கல்வி அதிகாரிகளை, உள்ளூர் மக்களுடன் சந்தித்து, அவர்களுடன் பேசி ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்து மட்டுமல்லாமல், ஐம்பது சதவீதம் சிமெண்ட் கல் போன்றவற்றுக்கு உதவி செய்து, மற்ற ஊர் மக்களின் நிதியில் ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.
பின்னாளில் அதனை நடுநிலைப் பள்ளியாகவும் மாற்றிக் காட்டியவர்.
பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு, தினமும் காலை மாலை இரு வேளையும், இவர் தண்ணீர் ஊற்றுவதைப் பார்த்த மாணவர்கள் நிறைய மரக்கன்றுகள் நட்டுத் தண்ணீர் பாய்ச்சினார்கள்.
அந்தப் பள்ளியின் மீதும்,அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் மீதும் பெரும் பாசம் கொண்டவராகவே இருந்தவர்.
தலைமை ஆசிரியர் அனுமதியுடன் ஒரு மரத்தடியில், நீதிக் கதைகள் சொல்லி அவர்களைக் குஷிப்படுத்த அந்தப்பாத்திராங்களாகவே மாறி, நடித்துக் காட்டுவார். அவர் கதைகளைக் கேட்க நாளுக்கு நாள் மாணவர்கள் கூட்டம் அதிகரித்தது.
ஒரு உண்மையான தேசத்தின் தியாகி போராட்ட வீரர் சுதந்திர தினத்தன்று இறந்து போனது எப்பேற்பட்ட பாக்கியம்.
மறுநாள் அந்தப் பள்ளிக்கூடத்தை உயர் நிலைப் பள்ளியாக வரும் கல்வியாண்டில் இருந்து துவங்கப்படும் என்று வந்த உத்திரவு கடிதத்தை அவர் ஃபோட்டோ முன்பு வைத்து வணங்கினார்கள்.
உண்மையான தியாகியின்கனவு பலித்தது..
Leave a comment
Upload