தொடர்கள்
அனுபவம்
கடன் சொல்லி எடுத்த டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் பரிசு! - மாலா ஶ்ரீ

2024071008025487.jpeg

கேரள கோழிக்கோட்டை சேர்ந்தவர் வினய்கிருஷ்ணன். பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார்.

அதன் அருகிலுள்ள நடுவண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ்குமார். இவர் அடிக்கடி வினய்கிருஷ்ணனிடம் நூற்றுக்கணக்கில் லாட்டரி சீட்டுகள் வாங்குவது வழக்கம். இதனால் வினய்கிருஷ்ணனின் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்.

கடந்த சில நாட்களுக்கு முன் லாட்டரி சீட்டு கடைக்காரர் வினய்கிருஷ்ணனுக்கு போன் செய்து, ‘‘என்னென்ன டிக்கெட்டுகள் இருப்பில் உள்ளன?’ என்று ராகேஷ்குமார் கேட்டுள்ளார். அதற்கு ‘‘ஸ்ரீசக்தி லாட்டரியில் இன்னும் 18 டிக்கெட்டுகள் விற்காமல் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் குலுக்கல் நடைபெற உள்ளது…’’ என்று வினய்கிருஷ்ணன் கூறியுள்ளார். இதை கேட்டதும் தான் அத்தனை டிக்கெட்டுகளையும் வாங்கிக் கொள்வதாகவும், அதற்கான பணத்தை ஊருக்கு வந்து தருவதாகவும் ராகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராகேஷ்குமாருக்கு 18 டிக்கெட்டுகளையும் வினய்கிருஷ்ணன் மாற்றி வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குலுக்கல் முடிந்ததும், ராகேஷ்குமாருக்கு மாற்றிவைத்த லாட்டரி டிக்கெட்டுகளை கடைக்காரர் வினய்கிருஷ்ணன் பார்த்துள்ளார். அதில், ஒரு டிக்கெட்டுக்கு ₹70 லட்சம் பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. வினய்கிருஷ்ணன் நினைத்திருந்தால், இவ்விவரத்தை ராகேஷ்குமாருக்கு தெரிவிக்காமல் ஏமாற்றியிருக்கலாம். ஏனெனில், அவர் எடுத்து வைக்க சொன்ன 18 லாட்டரி சீட்டுகளின் நம்பர்களும் அவருக்குத் தெரியாது.

அப்படி செய்யாமல், ராகேஷ்குமாருக்கு உடனடியாக போன் செய்து, ‘‘உங்களுக்கு மாற்றிவைத்த லாட்டரி சீட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ₹75 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது…’’ என்று லாட்டரி கடைக்காரர் வினய்கிருஷ்ணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதை கேட்டு மகிழ்ச்சியடைந்த ராகேஷ்குமார், மறுநாள் ஊருக்கு வந்து பணத்தை கொடுத்து வினய்கிருஷ்ணனிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டிருக்கிறார். லாட்டரி சீட்டு கடைக்காரர் வினய்கிருஷ்ணனின் நேர்மையை ராகேஷ்குமார் உள்பட அப்பகுதியை சேர்ந்த மக்கள் மனதார பாராட்டினர்.

கடைக்காரர் வினய்கிருஷ்ணன் கூறுகையில், ‘‘என்னிடம் வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்குபவர்கள்தான், என்னை வாழவைக்கின்றனர். அவர்களை என்னால் ஏமாற்ற முடியாது!’’

இந்த நேர்மை தான் நம் நாட்டில் மிக அரிதாக இருக்கிறது.

இது பத்திரிகை செய்தி தான் இருந்தாலும் விகடகவியில் இதை வெளியிடுவதற்கு, பாசிடிவான இது போன்ற நெகிழ்வான விஷயங்கள் தான் விகடகவியாரை கவர்கிறது.