அத்துழாய் கொண்ட பேறோ! விட்டுணு
சித்தனும் பெற்ற வரமோ? இத்தரை
செய்த பாக்யம் அம்மே! வந்தனை நீ
கொய்திடா திவ்ய பூவாய்.
நிலமகளே கோதையென பூத்தொடுக்க வந்தாயோ?
தலைமகளாம் தமிழுக்கு என வளர்ந்தாய் - சொலவே
விடுபட்ட வேதமாம் பாவை பாடவோ
புறப்பட்ட தமிழ்ப் பாவாய்.
பட்டர் பிரான் பயிற்றுவித்த பாடமெலாம்
இட்ட முடன் பயின்றாய் - தொட்டவுடன்
பாயும் இராம கணையாய் சூட்டிகையின்
சேயும் நீயானாய் வல்லி.
திருமகள் போலும் கருணை- பொறுமை
நிலமகள் ஈந்த சீர்தான் ; குலமகள்
நப்பின்னை யன்ன அன்பும் ஓருருவாய்
இப்புவிக்கே வந்த தாயே!
செங்கீரை சப்பாணி அம்புலி அம்மானை
சிங்கார ஊசலென சீராட்டோ; மங்காத
பிள்ளைத் தமிழ் சொன்னாரோ? நின்தமிழ்
அள்ளக் குறையா அமுது.
பூமாலை கட்டத் தொட்ட கைமணம்- நீ
தோள்மாலை சூட மேனிமணம்- பாமாலை
சொன்ன காலை தமிழ்மணம் யாவுமே
அண்ணல் இட்டம் அறி.
கிளியென்ன தோழமையோ? ஓயாது பேச
துளியேனும் வாய் சளைக்காதோ - நெளி
பாம்பணை அறிதுயில் ரங்கனைச் சேர்கையில்
வேம்பனை இடையூறோ கிளி?
தமிழ்ப் பேசும் மகவெலாம் ஆண்டாளே!
கமழ் மாலைசேரும் உன்தோளே- அமிழ்த
மொழி பாட்டெலாம் உன்பாட்டே! கோதாய்
அழிவிலா பக்தி நல்கு.
Leave a comment
Upload