கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும்!
சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும்!
மேகக்கூட்டம் மழையைச் சுமந்திருக்கும்!
மழையினுள்ளே இடியும் ஒளிந்திருக்கும்!
-பாடலாசிரியர் பிரியன்.
கேரள மாநிலத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மனத்தை உலுக்கியது. குறைந்த நேரத்தில் அதிகப்படியாகப் பொழிந்த மழையின் காரணமாக அந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபடியும் இது நம் பூமியின் சூழலியல் சீர்கேட்டையே நினைவூட்டுகின்றது.
மழை எப்படி ஓர் இயற்கைச் சீற்றமாகிறது?. வானம் பொழியாதுபோனால் பூமி வறண்டுவிடும், பசி தாண்டவமாடும் என்றுதானே சொன்னான் வள்ளுவன். உணவுகளை விளைவிக்கவும், விளைவித்த பொருள்களோடு தானும் ஓர் உணவாகவும் மாறுவதுதான் மழை என்றுதானே போற்றினான் வள்ளுவன். ஆனால், இந்த மழைக்கு இப்படியொரு முகம் உண்டென்று சொல்லாமல் போய்விட்டானே என்று நாம் வருந்தலாம். ஆனால், இவையாவும் நாம் நம் சூழலியலில் ஏற்படுத்தும் கொடிய மாற்றங்களால் இயற்கை நமக்குத் திருப்பித் தருபவை என்பதை உணரவேண்டும்.
பேரிடர்களாகக் கருதப்படும் அழிவுகள் பெரும்பாலும் நிலம் மற்றும் நீரால் ஏற்படுகின்றன. நிலம் என்றால் நிலநடுக்கம். நீர் என்றால் பெருமழை, வெள்ளம், சுனாமி போன்றவையாக இருக்கின்றன. குறிப்பாக, கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்துச் சூழலியலாளர்கள் எப்போதும் கவலை தெரிவித்தே வருகின்றனர். பசுங்குடில் வாயுக்களால் புவியின் வெப்பநிலை உயர்ந்து பனிமலைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன.
சங்க காலத்திலேயே, இத்தகு தொழிற்புரட்சி, கரிம வாயுக்களின் வெளியேற்றம் இல்லாத காலத்திலேயே புவியின் வெப்பம் குறித்த கவலைகள் தமிழர்க்கு இருந்திருக்கின்றன என்பதற்கு, கீழ்க்காணும் பாடல்கள் எடுத்துக்காட்டு.
'விளைவுஅறா வியன்கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி
நீர்ச்செறுவின் நீள்நெய்தல்
பூச்சாம்பு புலத்து...'
-பட்டினப்பாலை- வரிகள்: 8-12
எப்போதும் விளைந்துகொண்டேயிருக்கும் அகன்ற வயல். அங்கே கரும்பு ஆலை இருக்கும். அங்கிருந்து வரும் வெப்பத்தால்/புகையால் அருகிலிருக்கும் நெய்தல் மலர்கள் வாடி அழகிழக்கும் என்கின்றன இவ்வரிகள்.
'கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
வெம்பாதாக, வியல் நில வரைப்பு!'
-பரிபாடல் - 11 - வரிகள்:74-80
இடி முழங்கும் மழைக்காலம் போனது. பனிக்காலமும் வந்தது. அக்காலத்தின் முழுநிலவு நாளில் திருவாதிரை கொண்டாட்டத்தை விரிநூல் அந்தணர்கள் தொடங்க, புரிநூல் அந்தணர்கள் பொற்கலசங்களை ஏந்த, இப்பரந்த நிலப்பரப்பு வெம்மையால் வாடாதிருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டினர் என்கின்றன இவ்வரிகள்.
புவிவெப்பமடைந்தால் என்னென்ன நேரும் என்று அவர்கள் அறிந்திருப்பார்களோ?!
அடுத்து... நீர்.. கடல்.. கடலை முந்நீர் என்றும் அழைக்கின்றன சங்க இலக்கியங்கள். முந்நீர் என்றால் ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் மூன்றும் சேர்ந்தது என்றும் சொல்வதுண்டு. ஆனால், முந்நீர் என்றால் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழிலையும் செய்யும் நீர் என்கிறார் நச்சினார்க்கினியர்.
கடலில்தான் முதல் உயிர் தோன்றியது என்பது அறிவியல். இது ஆக்கல். கடல் உணவுகளைத் தருகிறது. முக்கியமாக மழையைத் தருகிறது. இது காத்தல். சுனாமி, கடற்கோள் என்றாகித் தன் கோரமுகத்தையும் காட்டுகிறது. இது அழித்தல்.
2004இல் உலகமே அதிர்ந்த சுனாமி நமக்குத் தெரியும். கடற்கோளைச் சிலப்பதிகாரம் நமக்குக் காட்டுகிறது.
'பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள'
-சிலம்பு- காடுகாண்- வரிகள்: 19-20
இப்படியான கடல் பாதிப்புகள், மண் அரிப்புகள், நிலச்சரிவுகள் போன்றவற்றிலிருந்து காத்துக்கொள்ள அக்காலத்தில் நிறைய மரங்கள் இருந்திருப்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.
'புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண்டல் வேலிய ஊர்'
-நற்றிணை 74- வரிகள்: 7-10
புதுமணல் பொங்கும் கடற்கரையில் வீசும் கீழைக்காற்றில் புன்னை மலர்கள் மணக்கும். அக்காற்று குருகுகள் தம் சிறகுகள் கூப்புமாறு குளிரும். அந்தக் கடற்கரையில் கண்டல் மரங்கள் வேலியாக இருக்கும் ஊர் என்கின்றன வரிகள். கண்டல் மரங்கள் என்பவை அலையாத்தித் தாவரங்கள். இவைதாம் கடல் அலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பினைத் தடுக்கின்றன. அலையை ஆற்றுபவை என்றும் கொள்ளலாமோ!
கடல்போல் பெரிய வைகை ஆற்றங்கரையும் பல மரங்களைக் கொண்டிருந்தது என்கின்றன கீழ்க்காணும் வரிகள்.
'அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்'
-பரிபாடல்- 12 - வரிகள் 5-9
நாகமரம், தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவை வையையாற்றின் கரையில் இருந்து மண்ணரிப்பையும் நிலச்சரிவையும் தடுத்தன என்று கூறுகிறது மேற்காணும் பாடல். பெருவெள்ளம் வந்தபோதும் வையை உயிர்ப்பலி எடுத்துக்கொண்டதாய் எக்குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஆக, மரங்களை வளர்ப்பதும், அதுவும் சரியான இடங்களில் வளர்ப்பதும், முடிந்தவரை காடுகளை அழிக்காமலிருப்பதும், நமக்கும் நமக்குப் பின்வரும் தலைமுறைக்கும் நாம் செய்யும் நன்மையாகும். இப்போதாவது விழித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் இயற்கை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நம்மால் பதிலளிக்கமுடியாது.
புவி இருந்தால்தான் கவி பாட முடியும் என்பதை அறிந்து, சூழலியலைப் பெரிதும் போற்றிக் காத்து நமக்கு நன்முறையில் அளித்ததோடு, அவற்றை இலக்கியங்களில் பதிவுசெய்து நமக்கு விட்டுச்சென்ற அத்தனை சங்கப் புலவர்கட்கும் ஒரு தமிழ்முத்தம் தந்தோம். நாமும் அவர்களைப் பின்தொடர்வோம். யாவரையும் வளத்தோடு காக்கும் நம் தமிழுக்கு இது நிறைவான முத்தம்!.
-நிறைந்தது
(இனிய தமிழ் அமுதை இதுவரை நமக்குப் பரிமாறிய பித்தன் வெங்கட்ராஜ் அவர்களுக்கு நன்றி- விகடகவி)
Leave a comment
Upload