தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை. - 30 -ரேணு மீரா

20240709204703943.jpg

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர். (குறள் – 485)

உலகத்தை ஆள நினைக்கும் அரசர் மனம் கலங்காமல் தக்க காலத்தை எதிர்பார்த்து காத்து இருப்பர்.

இந்த குறளில் ஒரு இலக்கை அடைவதற்கு ஒருவன் முடிவெடுத்து விட்டால் அதற்கான கால நேரம் அமையும் வரை விழிப்புடன் காத்திருந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பார்.

சரி, இப்படி நாம் ஒரு இலக்கை தீர்மானித்து அதை நோக்கி பயணிக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை சென்ற தொடர்களில் பார்த்தோம். பொறுப்புக்களை பகிர்ந்து அளித்தலும் அதன் மூலமாக நாம் இலக்கை நோக்கிய பயணச் சுமையை குறைத்துக் கொள்வதை பற்றியும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

அன்றாட வேலைகளை முதலில் ஒழுங்குப்படுத்திய பின், நமது இலக்கு நோக்கிய விஷயங்களை தெளிவுடன் கையாளும் விதத்தைப் பார்ப்போம்.

பெரும்பாலானோர் “எனக்கு வேலைகள் அதிகமாக இருக்கின்றன, எதை முதலில் தொடுவது என்றே தெரியவில்லை” என்று குழம்புவர். நம்மை விட மிக அதிகமான வேலைகளை பலரும் சுலபமாக செய்து முடிக்கிறார்களே அது எப்படி முடிகிறது இதை பலர் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள் மிக எளிதான வழிகளை தான் இந்த வெற்றி வீரர்கள் கையாள்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக செய்து முடிக்கிறார்கள் இது முதல் யுக்தி.

இவர்களது வேலை பட்டியல் நீண்டு கொண்டே போனால் வேலைகளில் முக்கியத்துவத்தை கணக்குப் போட்டு அதன் பின் முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை தருகிறர்கள், அவசியமற்ற வேலைகளை ஒதுக்கி தள்ளிவிட இவர்கள் தயங்குவதே கிடையாது. இந்த பழக்கமே இவர்களை வெற்றியாளராக மாற்றுகிறது, இதுவே இவர்களின் இரண்டாவது யுக்தி.

முக்கியமான வேலைகளை மிகவும் அதிகமாக பெருகிக்கொண்டே போனால் அவற்றில் தன்னால் முன் மட்டுமே செய்ய முடியும் என்கிற வகை வேலைகளை மட்டும் அவர்கள் செய்கிறார்கள். மற்ற வேலைகளை தன்னுடன் பணி செய்பவர்களிடம் பகிர்ந்து கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து மேற்பார்வை செய்கிறார்கள் இது மூன்றாவது யுக்தி.

பொறுப்புக்களை பகிர்ந்து அளிப்பது என்பது ஒரு கடினமான வேலையை பலரிடம் பிரித்துக் கொடுத்து பின் ஒன்று சேர்ப்பதாகும்.பொறுப்புக்களை பகிர்ந்து அளித்தல் என்பது நேர நிர்வாக கலையில் முக்கியமானதாகும்.

இவ்வாறே பெற்றோர் தம் இலக்கை அடைய சின்னச் சின்ன வேலைகளை பொறுப்புக்களை தன் குழந்தைகளிடம் கொடுத்து முக்கிய வேலையை தான் பார்ப்பதை குழந்தைகள் பார்த்து வளரும் பொழுது பிற்காலத்தில் ஒரு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு தெளிவு அந்த குழந்தைக்குள் உதிக்கும்.

அதே சமயம் சின்ன சின்ன பொறுப்புக்களை பிரித்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு பொறுப்புணர்ச்சியும் அதிகரிப்பதை பெற்றோர்களான நீங்கள் உணர்வீர்கள். வாழ்க்கை இலக்கின் முக்கியத்துவத்தையும் இலக்கை நோக்கி அன்றாட பணியுடன் சேர்த்து பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் தன் எடுத்துக்காட்டடான வாழ்க்கையால் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதே சாலச் சிறந்ததாகும்.

முக்கிய குறிப்பு:

வேலைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1. நீயே அல்லது மற்ற எவரோ செய்ய வேண்டாதவை.

2.உன்னால் செய்ய முடிந்த ஆனால் பிறரிடம் ஒப்படைக்க முடியாத வேலை.

3. உன்னால் மட்டுமே செய்ய முடியும் வேலை.

தொடரும்….