தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 21 - மோகன் ஜி

20240704214357809.jpg

இன்று காலை எங்கள் கல்லூரி நண்பர்கள் வாட்ஸப் குழுமத்தில், தாடி பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது.

நானொரு தாடிக்காரன். வருடத்தில் நான்கு மாதம் இரு ஐயப்ப தீட்சை காலங்களில் பொலியும் ஆன்மீகத் தாடியும், மீதி நாட்களில் அழகு தாடியுமாகத் திரியும் மயிராண்டி.

தாடி பற்றிய வாதத்தை விடலாமோ? தாடி சரிவர முளைக்காததால் மழமழவென மழித்துக் கொள்வதாக நண்பன் கல்யாணம் சலித்துக் கொண்டான்.

'விருத்தப்பா எழுதிப் பார் தாடி வரும்;

கருத்துடன் பேசிப் பார் தாடி வரும்;

வைதல் கேட்டே வளர்ந்தாலும் வரும்;

காதல் தோல்வி வந்தாலும் வரும்'

என்றெல்லாம் கல்யாணத்தைக் கேலி செய்தேன். கண்ணாடியைப் பார்த்து என் செல்ல தாடியைக் கோதிவிட்டேன் மென்மையாக... நண்பன் கல்யாணம் கும்பகோணத்தில் ஊர்பட்ட சாமிகளோடு வாசம் செய்வதால், எனது கேலி ஏதோ ஒரு உம்மாச்சியை கோபப்படுத்தியிருக்கிறது!

சற்றுமுன்னர் எனது தாடி டிரிம்மரை எடுத்துக் கொண்டு, 'அடி வான்மதி... என் காதலீ...' என்று பாடிக்கொண்டு வாஷ்பேசினுக்கு நகர்ந்தேன். டிரிம்மரின் ‘விர்’ரிடல் நல்ல சுநாதம் தான்.

டிரிம்மரை இடது கன்னத்தில் வைத்தேன். ஆன் செய்தேன். ‘ரொய்ங்’கென்ற அதிர்வுடன் என் கன்னத்தில் நெடுமுத்தம் பதித்தது.. கொஞ்சம் தாடைநோக்கி டிரிம்மரை நகர்த்தினேன்.

ஐய்யய்யோ! என்ன இது?... ஒரு திட்டாக கன்னத்தில் முடியைக் காணோம்! பதறிப்போய் டிரிம்மரின் எண் கவுண்ட்டரை நோக்கினேன். அது பூஜ்ஜியத்தில் இருந்தது. எப்போதும் அது எட்டாம் எண் செட்டிங்கில் தானே இருக்கும்? சே!

சோகத்தோடு சோப்பைக் குழைத்து, பல மாதங்கள் கழித்து ஷேவிங் பிரஷ்ஷை முகத்தில் சுழித்துசுழித்துப் பூசினேன். ரேசரை ஓட்டியபடியே , டிரிம்மரில் செட்டிங் மாறியது எப்படி என்று குழம்பினேன்.

ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது . போனமுறை தாடி டிரிம் செய்தபோது பேரனுக்கு அது எப்படி வேலைசெய்யும் என விளக்கியிருந்தேன். அப்போது தான் கவுண்டர் எண் 0 என மாறியிருக்கும்... அல்லது மாற்றியிருப்பான்.

போகட்டும்... மீண்டும் வளர்த்துக்கலாம். முகத்தில் ஒற்றிய ஆஃப்டர் ஷேவ் லோஷன் திகுதிகுவென எரிந்தது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். மோடி போல இருந்த என் முகம் சந்திரசேகர ராவ் போல ஆகிவிட்டதே?!

என் கவலையெல்லாம், மத்தியானம் பள்ளிக்கூடம் விட்டுவரும் என் பேத்தி குறித்து தான். என்னைவிட என் தாடியே அவளுக்கு இஷ்டம். மடியில் படுத்துக்கொள்ளும் அவளின் உள்ளங்காலில் என் தாடியால் உரசி மூட்டும் கிச்சுகிச்சுவுக்கு ரசிகை அவள். என்ன ரகளை பண்ணப் போகிறாளோ?

நண்பா! கும்பகோணம் கல்யாணம்! ஸாரிடா....

பகவான் நன்னா குடுத்துட்டார்!