எழுத்து வருத்தனம் பற்றி தொடங்குகிறார் பரணீதரன்.
அக்ஷர வர்த்தனம் என்ற வடமொழி பதம் தமிழில் எழுத்து வருத்தனம் அல்லது அக்கர வருத்தனம் என்று மாறி உள்ளது.
ஒவ்வொரு எழுத்தாக வளர்ந்து கொண்டு வருவது அக்கரவர்த்தனம் ஆகும். இதில் ஒரு எடுத்துக்காட்டை நாம் இரண்டு வாரங்களுக்கு முன்னாலேயே பார்த்து விட்டோம். மற்ற எடுத்துக்காட்டுகளை இப்பொழுது பார்ப்போம்.
சோலையை ஓர்எழுத்தால் என்சொல்லும்? தொக்கதன்மேல்
நீலப்பேர் எவ்வெழுத்தி னால்நேரும்? - மாலைக்
குடைவேந்தன் சென்னிக் குலநதியின் பேரைக்
கடைசேர்ந்த ஓர்எழுத்தால் காண்
- தனிப்பாடல்
சோலையை குறிக்க பயன்படுத்தும் ஓர் எழுத்து எது ? இந்த கேள்விக்கு பதில் ‘கா’.
வந்த பதிலை எந்த எழுத்தோடு சேர்த்தால் நீலம் என்று நாம் அழைக்கும் பூவின் பெயர் கிடைக்கும் ? ‘காவி' (குவளை மலர்)
மாலை சூடி, வெண்கொற்றக் குடையை வைத்து சென்னி (சோழன்) என்ற குலப் பெயருடன் ஆளுகின்ற மன்னனின் குல நதியின் பெயர் கடைசி ஒரு எழுத்தை சேர்க்கும் பொழுது வரும் - ‘காவிரி'
ஓரு மோருயி ராற்பசு வோதலுற்
றாரு மற்றொன்ற னாலுயி ராக்குபு
சேரு மற்றொன்றி னெத்தருச் செப்பலாம்
வாரு மற்றஃ தெங்கு மலருமே
- திருஅம்பர்ப்புராணம்
அனைவரும் அறிந்த பசுமாட்டை குறிக்கக்கூடிய ஒரு உயிர் எழுத்தை சேர்த்து - ‘ஆ’
வந்த பதிலில் இன்னொரு எழுத்தை சேர்க்கும் பொழுது நமது உயிரை குறிக்கக்கூடிய சொல்லாக மாறி - ‘ஆவி'
வந்த பதில் இன்னொரு எழுத்தை சேர்க்கும் பொழுது மரத்தின் (தரு) பெயர் கிடைக்கும். அது அனைத்து இடங்களிலும் பூக்கும் மரமாகும் (அதாவது அந்த மரத்தை எங்கும் பார்க்கலாம்) - ‘ஆவிரை’ (ஆவாரை அல்லது ஆவாரம்பூ என்று நம்மால் கூறப்படும் செடியாகும். அதனுடைய பழைய பெயர் ஆவிரை ஆகும்)
அக்கர சுதகம்
அக்ஷர சுதகம் என்ற வடமொழி பதம் தமிழில் எழுத்து சுதகம் அல்லது அக்கர சுதகம் என்று மாறி உள்ளது. ஒவ்வொரு எழுத்தாக குறைந்து கொண்டு வருவது அக்கர சுதகம் ஆகும். குறைந்து வந்த எழுத்துக்களை வைத்து உருவாக்கப்பட்ட சொற்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு பொருளை கொடுக்கும். எடுத்துக்காட்டுகளை இப்பொழுது பார்ப்போம்.
ஒளிகொண்டபுத் தூர்உறை கோதை தீந்தேன்
துளிகொண்டபூந் துளபத் தோன்ற லாற்கீந்த
தளிகொண்டதை அணிந்த தன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர் தேங்கமழ் வாசிகை சிகை கை
- மாறனலங்காரம்
ஞான ஒளியை தன்னுள்ளே கொண்ட திருவில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கோதை நாச்சியாரான ஆண்டாள் தித்திப்பான தேன் துளிகளை கொண்ட பூக்களையும் துளபம் என்று அழைக்கப்படும் துளசியையும் மாலையாக அணிந்திருப்பவருக்கு கொடுத்தது - வாசிகை (மாலை)
அப்படி கொடுத்த மாலையை அணிந்த இடம் - சிகை (முடி)
மாலை அணிந்த பின் திருமால் கோதையை பற்றிய இடம் - கை (கைத்தலம் பற்றியது என்று கூறுவர்)
சாத மந்தவ னந்தழை வித்தலு
மேத மேதுமின் றாகவி ரித்தலுங்
காதல் பூப்ப விடந்தொறுங் காட்டலும்
போத கந்தகங் கம்மெனப் போற்றுமே
- திருஅம்பர்ப்புராணம்
உயிர்களுக்கு இறப்பு பிறப்பு ஆகிய பிறவி இல்லாத பெரும் பேற்றை கொடுப்பதும் - போதகம் (போதனை / மெய்ஞானம்)
மேதம் என்று அழைக்கப்படுகின்ற கொழுப்பு முற்றிலுமாக இல்லாமல் செய்வதும் - தகம் (நெருப்பு)
எல்லா இடங்களிலும் காண்பவர்கள் மகிழ்ச்சி அடைய காட்சி தருவதும் - கம் (தண்ணீர்)
ஆகிய இந்த மூன்றையும் போற்றுவீர்களாக…
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்தஅண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல்
மற்றியார்கொல் என்னின் மலர்தூவி வணங்கி நாளும்
கற்றார் பரவும் கநகாரி நகாரி காரி
- தண்டியலங்காரம்
ஹிரண்யம் என்றால் வடமொழியில் தங்கம் என்று பொருள். கசிபு என்றால் வடமொழியில் துணி என்று பொருள். தங்கத் துணியை அணிந்து கொண்டிருக்கும் இரண்ய கசிபுவின் அரண்மனையில் இருந்த தங்கத்தால் ஆன தூணை பிளந்து கொண்டு மிகுந்த ஒளி பொருந்தியவராக வந்தவர் - கநகாரி (நரசிம்மர்). அதாவது கநக + அரி - தங்கத்தை போல ஜொலிக்க கூடிய சிங்கம் என்று ஒரு பொருள். தங்க நிறமான நகங்களை உடையவர் என்பது மற்றொரு பொருள். நரசிம்ம அவதாரத்தின் சிறப்பே அவரது நகங்களை மட்டும் வைத்தே இரணிய கசிபுவை கொன்றார் என்பது. அதனால் இங்கு நகங்கள் சிறப்பிக்கப்படுகிறது.
பொய்கையில் பிறந்த தலைவன் - நகாரி (முருகன்). அதாவது சரவணப் பொய்கையில் பிறந்தவர் முருகப்பெருமான் ஆவார். மலைக்கு ‘நகம்’ என்று ஒரு பெயர் உண்டு. தாரகாசுரன் ஆண்டு கொண்டிருந்த க்ரௌஞ்ச மலையை பிளந்ததால் நகாரி (நக + அரி), அதாவது மலைக்கு எதிரி என்ற பெயரை முருகன் பெற்றார்.
ஆயர் குலத்தில் தோன்றிய சிறுவன் முன்னொரு காலத்தில் பெண்ணாகி ஈன்ற தலைவன் - காரி (கார் மேகத்தை போன்ற கரிய நிறம் உடையவர் - ஐயனார் / கருப்பண்ணசாமி). ஆயர் குலத்தில் குழந்தையாக தோன்றியவர் கிருஷ்ணர். அவர் மோகினி அவதாரம் எடுத்த போது உருவானவர் காரி என்று அழைக்கப்படுகின்ற அய்யனார் அல்லது கருப்பண்ணசாமி.
இந்த மூவரையும் கற்றவர்கள் பணிந்து வணங்குகிறார்கள் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.
அடுத்த வாரமும் மற்ற சித்திரக் கவிகளை பார்ப்போம்.
Leave a comment
Upload