'முதா கராக்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்' என்று விநாயகரைப் போற்றும் கணேச பஞ்சரத்னப் பாடலொன்றைத் தலைவன் பாட... அவனைத் தொடர்ந்து, தலைவி அதே மெட்டில் காதலைப் பாடுகிறாள். ஆம், திரு.பார்த்திபன் மற்றும் குஷ்பு நடித்த 'தாலாட்டுப் பாடவா' திரைப்படத்தின் பாடல்தான் அது.
இந்த வரிகளை கொஞ்சம் உற்றுநோக்குங்களேன்.
'வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிர(ற)ந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்'
இறுதியில் ‘இவன் தலைவி நாயகன்’ என்று இருப்பதை ‘இவன் தலை ‘விநாயகன்’ என்று எடுத்துக்கொண்டால் இவ்வரிகள் அப்படியே அந்தக் கணேச ரத்னப் பாடலுக்கு இணையான ஒரு தமிழ் ஆன்மிகப் பாடலாகிவிடுகிறதல்லவா!. ஆம், இந்த அற்புதத்தை இசைஞானியோடு சேர்ந்து செய்தவர் ஐயன் வாலிதான். அப்படியான ஓர் அழகான பாடலைத்தான் இசைஞானி இப்போது மீண்டும் உருவாக்கியிருக்கிறார்.
தெருக்கூத்துக் கலையை மையமாகக்கொண்டு இயக்குநர் பாரி இளவழகன் அவர்கள் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜமா’. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது. சென்றவாரம் வெள்ளி அன்று பாடல் வெளியீடு நடைபெற்றது. அன்றைய என் இரவை எடுத்துக்கொண்டது 'நீ இருக்கும் ஒசரத்துக்கு' என்னும் அப்பாடல்தான். கூடுதல் தகவல், பாடலை எழுதியிருப்பதும் இசைஞானியார்தாம். ஆம், பாவலர் இளையராஜா!
யூட்யூபில் இருக்கும் அப்பாடலைக் காட்சியோடு பார்த்தோமானால் அது காதல் பாடல். கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் இஃதோர் ஆன்மிகப் பாடலென்றே முடிவுகட்டிவிடலாம். கலைத்தாயிடம் பக்தனொருவன் பேசுகிறான். பதிலுக்கு அவளும் பேசுகிறாள். கேளுங்கள் அவ்வரிகளை.
இசைஞானி:
'நீ இருக்கும் ஒசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா!
எடத்தவிட்டு எளங்கிளியே எறங்கவேணாம் ஏங்குயிலே!'
தெய்வத்தை அடைய ஏங்கிப் பாடும் பக்தன் தெரிகிறானல்லவா!? என்னைத் தேடி இங்கு நீ வரவேண்டாம். என்னை உன் நிலைக்கு எடுத்துப்போ என்கிறார்.
கலைத்தாய்:
'நீ கொடுத்த ஒசரம் இது! ஒலகத்துக்குத் தெரியாதா!
ஒன்ன தாழ்த்திப் பேசுவதா! எப்போதும் நீ ராசாதான்'
பெண் குரலில் ஒலிக்கும் இவ்வரிகளில் கலைத்தாயே இசைஞானியாரிடம் கேட்கிறார். இசைஞானி அடைந்திருக்கும் உயரம் மற்றும் அவரைத் தூற்றிப் பேசுவோர்க்கான பதிலாக அமைகின்றன இவ்வரிகள். யார் வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் எப்போதும் அவர் ராஜாதானே!
கலை:
'ஒன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டுப் போவியா!
என்ன மட்டும் கூத்துக் கட்டிக் கெட்டுப்போவியா!'
இதையும் கலைத்தாயே கேட்கிறார். இசையையும் ராஜாவையும் பிரிக்கவேமுடியாது. போற்றினாலும் தூற்றினாலும் என் வாழ்வு இசையோடுதான் என்ற இசைஞானியாரின் பதில் இங்கு எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு?.
இசை:
'ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டுத் தாக்குற!
கோட்டையில விட்டுக் கொடி ஏத்தப் பாக்குற!'
இசைஞானியார் தன்னைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்ததைக் கலைத்தாயிடம் நினைவூட்டிப் பாடிப் பல்லவியை நிறைவுசெய்கிறார். கோட்டை என்றால் அதுதானே!
அடுத்ததாக, சரணத்தில்..
இசை:
'மேடையில போடும் வேஷம் மேடையோடு போகும் போகும்!
ஓ மனசில் ராஜ சபை ராசாவாக்கிப் பாத்தது போதும்!'
பதவிகள் எல்லாம் வேஷம். மக்கள் மனத்தில்தான் என் நிரந்தர இராஜ்யசபை பதவி. அதுவே போதும் என்கிறார்.
கலை:
'பேச்செடுத்தா ஆம்பளதான்! கூத்துல நீ பொம்பளதான்!'
ஆணாய் உருவெடுத்த கலைத்தாயே இசைஞானி. இதைச் சொல்வதும் கலைத்தாயே, அப்பெண் குரலில்.
இசை:
‘அழகே என்ன அழகாக்குற! ஊர் பார்க்கவா நீ இரசிக்க!’
இந்த ஊர் பார்க்கவும் நீ இரசிக்கவுமாக நீயே என்னை இசையால் அழகூட்டுகிறாய் தாயே! என்பதுபோல் முடிகிறது முதல் சரணம்.
அடுத்தாக, இரண்டாவது சரணம்!
கலை:
‘பொன்னுமணி வைரம் எல்லாம் பூட்டிப் பாக்கத் தோணாதா!
ஊரு பாத்து ஒலகம் பாத்து கண்ணுபட வேணாமா!
வைரம் என்பதை ‘வைரமுத்து’ என்று எண்ணி இந்த வரிகளை அசைபோட்டுக்கொள்ளலாம். என்னே! அவரது மென்மனம்.
இசை:
‘வேஷத்துக்கு அலங்கரிப்பு ஜோடனைகள் இங்கெதுக்கு?
கலை:
‘உசுரே! எந்தன் நெசமே! உன்ன வேஷம் கலைச்சி பாக்கோணும்’
இறுதியாக, மனித வாழ்வே ஒரு வேஷம். அதில் மேலும் மேலும் பட்டங்கள், பதவிகள் போன்ற அலங்காரங்கள் எதற்கு என்று இசைஞானி கேட்க, வேடங்கள் கலைந்த உண்மையை உலகம் பார்க்கவேண்டும் என்று கலைத்தாய் பதில் கூறுவதாகச் சொல்லி ஒரு தத்துவத்தோடு பாடலை முடிக்கிறார் இசைஞானி.
இப்படி, ஒரு காதல் பாட்டில் கலைத்தாயோடு ஓர் ஆன்மிக உரையாடலையே நிகழ்த்தியிருக்கும் நம் இசைஞானியை நாம் எப்படிக் கொண்டாடாமல் இருக்கமுடியும்! அவரது இசையறிவும் தமிழறிவும் யாரோடும் ஒப்பிட இயலாதவை. இசைஞானி இளையராஜா நம் காலத்தின் பெருமை!
அவர்தம் இசையோடு ஜமா திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்!
Leave a comment
Upload