தொடர்கள்
கதை
பேசா மடந்தை =   சுஶ்ரீ

20240703082238312.jpeg

எங்கம்மா சொல்லுவா நான் ஒண்ணரை வயசுலயே கணீர்னு பேசுவேனாம்.

யாரைக் கொண்டிருக்கோ இந்த ராட்சசி,பூசணிக்கா பூசணிக்காயா பேச்சைப் பாரு, பெரியவா எது பேசினாலும் காதுல போட்டுக்கறது அப்பறம் நேரம் காலம் தெரியாம பளிச்னு பேசிக் காட்டறது.

இதாலே எத்தனை பிரச்சனை வரப் போகுதோ வீட்டிலே, இது என் பாட்டி.

எனக்கு இரண்டரை வயசு இருக்கச்சே,பாட்டியும் அம்மாவும் அப்பாவோட ஒண்ணுவிட்ட தங்கை விசாலி அத்தையைப் பத்தி அப்பாவுக் கூடத் தெரியாம சமையலுள்லே பேசிட்டிருந்தாங்களாம்.அப்ப நான்சமையலறை ஒட்டின ரேளில சொப்பு பொம்மை வச்சி விளையேடிட்டிருந்தேனாம்.

பாட்டி,”இந்தக் ஷாலினிக் குரங்கு இங்கேன்னா விளையாடிண்டிருக்கு எதையாவது கேட்டு எதையாவது உளறி வைக்கப் போறது”

அம்மா,”குழந்தையை குரங்குனு திட்டக் கூடாதாம் என் அப்பா சொல்லுவார்.குரங்குனுதிட்டினா ஆயுசு கம்மி ஆயிடுமாம்”

சாயந்திரம் வழக்கமா பாட்டி பக்கத்துல இருக்கற நவநீதகிருஷ்ணர் கோவிலுக்கு போவா,

என்னையும் இடுப்புல இடுக்கிண்டு போவா உடம்பு நன்னா இருந்தா.திரும்ப வரும் போது கோவில்

கடைகளுக்கு நடுவுல இருக்கற ராயர் அல்வாக் கடைல இருந்து,பட்டர் பேப்பர்ல

சுத்தின சீவிலிபுத்தூர் பால்கோவா வாங்கித் தருவா.

ஒரு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போயிட்டு வெளில வரப்ப விசாலி அத்தை உள்ளே நுழைஞ்சா. எங்களைப் பாத்துட்டு ஷாலுச் செல்லம்னு என் கன்னத்தை கிள்ளி முத்தம் இட்டுண்டா.

நான் உடனே பாட்டியையும் நறுக்னு கிள்ளு அத்தம்மா, உன்னைப் பொல்லாது,பேச்செல்லாம் பொய்,விஷம்னு சொல்றான்னேன்.

அத்தை கண்ல புளுக்னு தண்ணி,என்ன பெரிம்மா என்ன உன் குடியை நான் கெடுத்துட்டேன்னு குழந்தை கிட்ட இந்த பொல்லாப்பு.

பாட்டி,”விசாலி, என்னைப் பத்தி உனக்கு தெரியாதா இது ஏதோ உளறரதை வச்சிண்டு என் மேல எறிஞ்சு விழறயே” அன்னிக்கு சீவிலிபுத்தூர் பால்கோவா கட்.

விசாலி அத்தைக்கும் பாட்டிக்கும் இப்ப தீராப் பகை.என்னால என்னாலேன்றா நான் என்ன பண்ணினேன்.

மூணறை வயசுல என்னை பக்கத்துல இருக்கற பப்ளி கிட்ஸ் பிளே ஸ்கூல்ல போட்டுட்டா.அப்ப நான் பெரிய லொடலொடா,

வாயையே மூட மாட்டேனாம்.கமலி டீச்சர் அப்பா கிட்ட கம்ப்ளெயின் பண்றா. இது மத்த குழந்தைகளையும் படிக்க விடாம ரொம்ப பேசுதுனு.

பாவம் அப்பா என்ன பண்ணவார் நான் இப்படி வாயாடியா இருக்கறதுக்கு.

கார்பரேஷன் ஸ்கூல், ஹைஸ்கூல் எல்லா இடத்துலயும் வாயாடினு பேர் வாங்கியாச்சு. இப்ப திட்டவோ, சீவிலிபுத்தூர் பால்கோவா வாங்கித் தரவோ பாட்டியும் இல்லை.நான் கொஞ்சம் பேச்சை குறைச்சிட்டேன்னுதான் நினைக்கறேன்.

பாஸ்கரன் இப்ப என்னை விடாம துரத்தறான்னு தெரியறது. நான் ரொம்ப அழகுனு பீத்திக்க மாட்டேன் ஆனா நீளக் கூந்தலும், “சிவந்த நிறமும் வட்ட முகமும் நீ தனி அழகுடினு என் ஃபிரண்ட் சுசீலா சொல்லுவா.ஆனா ஒண்ணுடி உன் இந்த நான் ஸ்டாப் பேச்சுதான் பயமா இருக்கு யார் உன் கிட்ட மாட்டிண்டு திணறப் போறானோனு.”

சுசீலாவும் அழகாதான் இருப்பா, ஆனா இந்த தேரடித்தெரு பாஸ்கரனுக்கு என் பின்னால சுத்தறதுல ஒரு கிக் போல.

ஒரு நாள் அப்பா கிட்டயே பேச வந்துட்டான். “நான் ஐ.டி. கம்பெனில வேலை பாக்கறேன்,உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறேன்.”

என் அப்பா கர்நாடகத் தந்தை இல்லை. “ஏன்பா பாஸ்கரன் உன் அம்மா,அப்பா இருக்கா இல்லையோ அவாளை வந்து பேசச் சொல்வயா, நீயே வந்துட்டயே”

அதில்லை சார்,உங்க பொண்ணுக்கு பிடிக்குதானு தெரியாம எப்படி அதனாலதான்

அப்ப பொண்ணைக் கேக்காம என் கிட்ட ஏன் கேக்கறே அவ ரொம்ப ரிசர்வ் டைப்பா தெரியறா, பேசுவாளோ மாட்டாளோனுதான் உங்க கிட்டயே நேரா வந்தேன்.

பகபகனு சிரிச்சார் அப்பா,கண்ணுல நீர் வர.கதவு மூலைல நின்னு இவங்க பேச்சை கேட்ட அம்மாவாலையும் சிரிப்பை அடக்க முடியலை.

கண்ணைத் துடைச்சிண்ட அப்பா, சரி உன் பேரண்ட்ஸை வரச் சொல்லுனு சொல்லிட்டு திரும்ப சிரிக்கிறார்.

பாஸ்கரனுக்கு ஒண்ணும் புரியலை அப்படி என்ன காமெடியா பேசிட்டோம் நாமனு யோசிச்சிண்டே போனான்.

அந்த பாஸ்கரனோடயே கல்யாணம் ஆச்சு.முதலிரவுல ஊமையா நீ,என் கூட பேசவே மாட்டயானு கேட்ட

கணவனைப் பாத்து சிரித்தேன். ஒரு அரை மணி நேரம் பேசலை.அப்பறம் அவன் எப்ப தூங்கினான்னு தெரியாது நான் பேசிண்டிருக்கேன்.

அவர் பொறுமை இழந்து கத்தினார், நானும் ஒண்ணும் பதில் பேசக் கூடாதுனு பாத்தா மூச்சு விடாம ஏதாவது சொல்லிண்டே இருக்கயே.எதிர்ல உள்ளவா உன் பேச்சை கேக்கறாளா இல்லையானு தெரிஞ்சிண்டு பேசணும்.

அவர் என்ன சொன்னா எனக்கென்ன நான் பேசிண்டேதான் இருப்பேன்.எங்க குழந்தைகள் இப்ப 2,

ரெண்டும் என் வாய்க்குதான் பயப்படும்,அவர் கிட்ட கொஞ்சமும் பயமில்லை.

ஏய் ஷாலு… ஷாலு…என்ன ஆபீஸ்ல இருந்து வந்து அரை மணி நேரம் ஆச்சு இவ எங்கே போனா, கொஞ்சம் பலமாவே சொல்லிண்டு பெட்ரூமுக்கு வந்தார்.

தூக்கி தூக்கி போடற குளிர்ல நான் கால்லஇருந்து முகம் வரை போத்திண்டு.

ஏய் என்ன பண்றது காச்சலா? குனிந்து என் நெற்றியில் கை வைத்தார்.

அச்சோ கொதிக்கறதே வா எந்திரு டாக்டர் கோவிந்தராஜ் கிட்ட போயிட்டு வரலாம்.

என்னால முடியலை கைத்தாங்கலா கூட்டிண்டு போய் கார்ல உக்கார வச்சு டிஸ்பென்சரி போனோம். டாக்டர் டெம்ரேச்சர் பாத்துட்டு ரொம்ப ஹையா இருக்கே,பிளட் டெஸ்ட், மத்த டெஸ்ட்லாம் பண்ணணும்னார்.

நிமோனியா சிவியர் அட்டாக். அன்னிக்கு கைசாடைல கைகாட்டி தண்ணினு மெல்லமுனகினேன் அதுதான் கடைசிப் பேச்சு.

வோகல்கார்ட்ல எதோ அபெஃக்ட் ஆயிருக்கு, இ.என்.டி. டாக்டர் கிட்ட காட்டணும்னார். யார் கிட்ட காட்டி என்ன அந்த 48 வயசுல என் பேச்சு போயே போச்சு.