ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெறும்போது நம் மனதில் எழும் கேள்வி இதுதான். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்தும் ஏன் பதக்கங்கள் மட்டும் ஒற்றைப்படையில் பெறுகிறோம்?
இந்தியா ஏறக்குறைய தனது நூறு வருட ஒலிம்பிக் பயணத்தில் மொத்தமாக 37 பதக்கங்கள் தான் வாங்கி உள்ளது. வாங்கிய 10 தங்க பதக்கங்களில் 8 இந்திய ஹாக்கி அணி வாங்கியது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 124 இந்திய வீரர்கள் சென்று வெறும் 7 பதக்கங்களை பெற்று நாடு திரும்பினர். அதில் ஒரே ஒரு தங்கம் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வாங்கினார்.
உள்நாட்டுப்போரில் சிக்கி சீரிழந்த செர்பியா 24 பதக்கங்கள் அதில் 6 தங்கம், குரோஷியா 41 பதக்கங்கள் அதில் 14 தங்கம், நம்மை விட ஏழ்மையான கென்யா ஒலிம்பிக்கில் மொத்தமாக வாங்கிய பதக்கங்கள் 113. அதில் 35 தங்கம். கொசோவோ கூட இந்த 2024 ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் நமக்கு மேலே இருக்கிறார்கள்.
ஏன் இந்தியாவில் திறமைசாலிகள் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
உங்களுக்கு ஷிவ்கேஷவ் யார் என தெரியுமா?
இந்தியாவின் நம்பர்1 பனிச்சறுக்கும் வீரர் 6 முறை ஒலிம்பிக் வீரர்,2011ல் ஜப்பானில் நடந்த ஆசிய பனிச்சறுக்கும் போட்டியில் புது சாதனை படைத்து தங்கம் வென்றார். இமாச்சல் மாநிலத்தை சேர்ந்த இவர் கரடுமுரடான இமயமலை பனியில் பயிற்சி செய்ய முடியாத காரணத்தால் மலையின் தார் சாலைகளில், ஓடும் கார், கனரக லாரிகளின் இடையில் புகுந்து சக்கரம் வைத்த தனது செலட்ஜில் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரை 2002ல் இத்தாலி பிரமாதமான பயிற்சி , பணம் தருகிறோம் என கூறி, தமது நாட்டின் சார்பாக விளையாடும்படி கேட்டதற்கு தாய்நாடு பெரிது என்று மறுத்தவர். 2006 ல் ஷிவ்கேஷவ் ஒரு பேட்டியில் போட்டிகளில் கலந்துக்கொள்ளவே பணம் இல்லாததால் 2 சீசன்களை தவறவிட்டதாக கூறுகிறார். 2014 பிப்ரவரியில் ரஷ்யாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில், அரசு நிதி உதவி செய்யாத காரணத்தால், பொதுமக்களிடம் பணஉதவிப்பெற்று சென்றார். தனக்கு உதவிய 50,000 நன்கொடையாளர்களின் பெயர்களை தனது சட்டையில் அச்சடித்துக்கொண்டு ஷிவ்கேஷவ் போட்டியில் பங்கெடுத்தார்.
இம்மாதிரி கொடுமைகளுக்கு முடிவுக்கட்டி, திறமைசாலிகளுக்கு உதவுவோம் என 2014ல் மத்திய விளையாட்டுத்துறையின் கீழ் டாப்ஸ் (The Target Olympic Podium Scheme or TOPS) எனும் திட்டம் கொண்டுவரப்பட்டது. வில்வித்தை, பாட்மிண்டன் குத்துச்சண்டை, ஹாக்கி, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
அத்துடன் மத்திய அரசு “விளையாடு இந்தியா” (Khelo India) வை அமல் படுத்தி உள்ளது. ஒவ்வொரு குக்கிராமத்தில் உள்ள பழங்குடி இன மாணவர்கள் உட்பட அனைத்து 8 to 14 வயதுள்ள திறமையுள்ள சிறார்களை கண்டறிந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் மாதம் ரூ50,000 தந்து பயிற்சியளிக்கிறார்கள்.. மத்திய அரசு 2021-22லிருந்து 2025-26 வரை இத்துறைக்கான பட்ஜெட் ரூ 8750 கோடிகள் ஒதுக்கியிருக்கிறார்கள்.
மாநில அரசுகளும் தங்களால் இயன்றவரை தத்தம் விளையாட்டு துறையை மேம்படுத்த முயற்சிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.
அப்படி இருந்தும் ஏன் நம்மால் ஒலிம்பிக் போட்டிகளில் பிரகாசிக்க இயலவில்லை? நிதிப்பற்றாக்குறை, வீரர்களுக்கு சர்வதேச விளையாட்டுகளின் பரிச்சயம் இன்மை, விளையாட்டுத்துறையில் புகுந்து விளையாடும் அரசியல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பு/அரங்குகள் அதிகம் இல்லாதது , அதிகாரமிக்கவர்களின் ஊழல் இவையெல்லாம் காரணமாக இருந்தாலும் இன்னுமொரு பெரியத்தடை இந்திய பெற்றோர்களின் மனநிலை. படிப்பு மட்டுமே வாழ்க்கையாக, குழந்தைகள் படிப்பைத்தாண்டி வேறு எந்த துறையின் மீது கண் வைத்தால், பெற்றவர்கள் அவர்கள் மேல் பழுக்க பழுக்க கை வைத்து விடுவார்கள்.
சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் திறமை மேல் நம்பிக்கை வைத்து படிப்பை ஓரங்கட்ட துணிச்சலாக முடிவெடுக்கிறார்கள். விளையாட்டு என்பது நமது சமூகத்தின் கலாச்சாரமாக மாற வேண்டும். உதாரணமாக ஜல்லிக்கட்டு என்பது தமிழனின் பாரம்பரியத்தின் அடையாளமாக, நமது கலாச்சாரத்தின் நீட்சியாக கொண்டாடி வருவதால் தான் இந்த வீரவிளையாட்டு 3000 வருடங்களாக தொடர்கிறது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் மேல்நிலைப்பள்ளிக்கான நுழைவுத்தேர்வில் நீச்சல் பயிற்சிக்கு 20 மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். பின் ஏன் நீச்சல் போட்டியில் சீனர்கள் பதக்கம் வெல்ல மாட்டார்கள்? அதே போல் நம் பஞ்சாப் ஹரியானாவை பாருங்கள். மக்கள் தொகையில் 4.4% உள்ள இவர்கள் கடந்த 2020 ஒலிம்பிக்கில் 40% எண்ணிக்கையில் பங்குப்பெற்றார்கள். சர்வதேச போட்டிகளிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள். பஞ்சாப் காவல்துறையும், ஓய்வுப்பெற்ற ராணுவத்தினரும் திறமையான விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சியளிக்க பெரும் உதவியாக இருந்து வருகிறார்கள். பஞ்சாப் ஹரியானாவில் மூலைக்கு மூலை இருக்கும் கிராமங்களில் கூட “டங்கல்”எனப்படும் மல்யுத்த, குத்துச்சண்டை அரங்கங்கள் வைத்துப்போட்டிகள் நடத்துகிறார்கள். ஹரியானா அரசும் பள்ளிகளில் 8-19 வயதுள்ள பிள்ளைகளுக்கு விளையாட்டு திறமைப்போட்டி ( Sports and Physical Aptitude Test (SPAT) ) நடத்தி, இறுதி சுற்றில் வெல்பவர்களுக்கு பயிற்சியுடன் உதவித்தொகையும் அளிக்கிறார்கள்.
1968 ல் தங்கம் வாங்கிய பீம்சிங், ஹவாசிங் முதற்கொண்டு வீரேந்திரசிங், யோகேந்திரதத், சாக்ஷி மாலிக் வரை இவர்களின் தயாரிப்பு தான்.
இந்த விஷயத்தில் அனைத்து இந்திய மாநிலங்களும் விளையாட்டை தங்கள் சமூக கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாற்றிய பஞ்சாப் ஹரியானாவை பின் பற்ற வேண்டும்.
கிரிக்கெட் மட்டும் இங்கே பிரபலமாக உள்ளதே என்றால் கிரிக்கெட் இந்தியாவில் கடவுளின் ஆட்டமாக எப்போதோ மாறிவிட்டது. தனியாரால் கொட்டப்படும் ஆயிரக்கணக்கான கோடிகள் ஒருபக்கம் , மீடியாவின் அதீத கிரிக்கெட் செல்லம் மறுப்பக்கம் .. உதாரணத்திற்கு தீபா கர்மாக்கர் ஜிம்னாஸ்ட்டிக்கில் பதக்கத்தை நூலிழையில் தவற விட்டதை எந்த மீடியாவும் கவனிக்கக்கூட இல்லை. ஆனால் இத்தனையாவது ஓவரில் 4 ஆவது பந்தில் கைவிரல்களுக்கு இடையில் பந்தை ஃபோருக்கு நழுவவிட்ட ஃபீல்டரையும், அதற்காக மைதானத்திலேயே இந்திய கேப்டனிடம் திட்டு வாங்கி சர்ச்சை ஆகியதையும் 100வது முறையாக எழுதுவார்கள். கோடிக்கணக்கான இந்திய மக்களும் அந்த விட்ட பந்தை ரீல்ஸில் திரும்ப திரும்ப பார்த்து உணர்ச்சி பொங்குவார்கள்.
ஆனாலும் கிரிக்கெட் வந்து தான் மற்ற விளையாட்டு போட்டிகளை மூலையில் உட்கார வைத்துவிட்டது என புலம்புவது வேலைக்காகாது. ஏதோ இந்த கிரிக்கெட் புண்ணியத்தால் இந்தியா, ஆட்டத்தில் உலகை ஆள்வது மட்டுமில்லாமல் உள்நாட்டிலும் தெருவில் விளையாடும் பள்ளிக்குழந்தைகள் முதற்கொண்டு இளைய தலைமுறையினர் வரை ஆர்வத்துடன் இவ்விளையாட்டில் பங்கு பெறுகிறார்கள். இதையும் ஊற்றி மூடினால் கத்தி, அரிவாளோடு தெருவில் யாரையாவது துரத்திக்கொண்டு ஒடுவதுதான் இளைஞர்களின் விளையாட்டு என மாறிவிடும். எனவே கிரிக்கெட்டை விட்டுவிடலாம்.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகள் விளையாட்டு துறைகளில் அதிகம் செலவு செய்கிறார்கள். 2012 ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வாங்கிய ஒவ்வொரு பதக்கமும் 4.5 மில்லியன் பவுண்ட் மதிப்புடையது. அதாவது தோராயமாக ஒரு பதக்கத்திற்கு 50 கோடி ரூபாய் செலவு செய்பவருடன் நாம் போட்டி போட வேண்டும் என்றால் அரசு மட்டுமே அதை செய்ய இயலுமா? ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கங்களை அள்ளி குவிக்கும் அமெரிக்காவில் கூட அரசு எந்த நிதி உதவியும் விளையாட்டு வீரர்களுக்கு அளிப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் விளம்பரதாரர்கள் தான் உதவுகிறார்கள்.
திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்பது சிரமம் தான் என இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒரு முறை கூறியிருக்கிறது.
இளம் திறமைசாலிகளுக்கு இங்கே பஞ்சமில்லை என்பதை செஸ், கேரம், பில்லியர்ட்ஸ் போன்றவைகளில் கோலோச்சிவரும் இளம் இந்திய வீரர்கள் ஏற்கனவே நிரூபித்து வருகிறார்கள்.
இந்திய பெற்றோர்களும், கல்விக்கூடங்களும், சமூகசூழ்நிலையும் இளையத்தலைமுறையை படிப்பு,வேலை ,சம்பாத்தியம் என்ற வழிகளிலேயே அவர்களை செலுத்துகிறது. விளையாட்டு என்பது இந்திய சமூகத்தின் முக்கிய அங்கமாக, இயல்பான கலாச்சாரமாக மாறினால், படிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றே விளையாட்டுக்கும் கொடுக்கப்பட்டால் , அரசுடன் இணைந்து தனியார், என்ஜிஓக்கள் உதவி செய்தால் வருங்காலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வெல்ல வாய்ப்பிருக்கிறது.
Leave a comment
Upload