முருகனுக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடித் திங்களில் வரும் கார்த்திகை நாள் மிகவும் சிறப்பிற்குரியது. ‘ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு.
முருகப்பெருமானின் நட்சத்திரம் கிருத்திகை அல்லது கார்த்திகை. இந்த கிருத்திகை தின விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள் முக்கோடி கிருத்திகைகள் என அழைக்கப்படுகின்ற ஆடி, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் வரக்கூடிய கிருத்திகை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் அனைத்து கிருத்திகைகளிலும் விரதம் மேற்கொண்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தட்சிணாயன புண்ணியகாலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது உலக தமிழ் மக்கள், தமிழ் கடவுள் முருகனுக்குப் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் முக்கிய நாளாகக் கொண்டாடுகின்றார்கள்.
ஸ்கந்த புராணம்:
ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி பார்வதி தேவியின் தெய்வீக சக்தியாலும், சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு சுடர்களாக முருகப்பெருமான் அவதரித்தார். அக்னியும் வாயுதேவனும் இந்த ஆறு சுடர்களைச் சரவணப் பொய்கைக்கு எடுத்துச் சென்றனர். அங்குக் கார்த்திகைப் பெண் (கிருத்திகைகள்) அவர்களைத் தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக வளர்த்தனர். ஒருமுறை சிவபெருமானும் பார்வதி தேவியும் அந்த சரவணப் பொய்கைக்கு வந்திருந்தனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே நீங்கள் எம் குமாரனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் “கார்த்திகேயன்” என்ற பெயர் பெறுவான் என்றார். அப்போது தாயான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாகக் கட்டித் தழுவி அவர்களை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம் மற்றும் ஆதோமுகம் ஆகிய ஆறு முகங்களுடன் ஒரே உருவமாக மாற்றினார்.
அத்தகைய முருகப்பெருமான் பக்தர்களால் சண்முகன், ஆறுமுகன், கார்த்திகேயன் மற்றும் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அதுமட்டுமின்றி, கிருத்திகைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே ஆறுமுகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாகக் கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனால் கார்த்திகை விரதம் இருந்து தன்னை வழிபடும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குகிறார் முருகப்பெருமான்.
ஆடிக் கிருத்திகை விழா கொண்டாட்டம்:
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. இந்நாள் மிகவும் மங்களகரமானதாகவும், முருகனை வழிபடுவதற்குச் சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமான் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, விரதம் மேற்கொள்வது எனத் திருவிழாக் கோலமாக இருக்கும். ஆடிக் கிருத்திகை நாளில் மிகவும் விசேஷமானது காவடி ஆட்டம். பக்தர்கள் காவடிகளைத் தோளில் சுமந்து கொண்டு நீண்ட தூரம் நடந்து கோவிலுக்குச் செல்வார்கள். மேலும் பல பக்தர்கள் இந்நாளில் விரதங்களை அனுசரிப்பார்கள்.
ஆடிக் கிருத்திகை விரதம்:
ஆடிக் கிருத்திகை தினத்தன்று காலை ஸ்நானம் செய்து விட்டு, பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்து பூஜையறையில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்குப் பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு புதியதாகப் பூக்களைச் சூட்டி, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து தெரிந்த முருகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.
அன்றைய தினம் விரதம் இருப்பது என்பது அவர் அவருடைய உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். எதுவுமே சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதம் இருக்க முடியும் என்று நினைத்தால் தாராளமாக முருகப்பெருமானுக்கு உபவாசம் இருக்கலாம். வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் முருகப்பெருமானை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலையில் விரதத்தைத் தொடங்கி அன்றைய நாள் முழுவதும் வீட்டுவேலைகளைக் கவனித்தாலும் சரி, அல்லது அலுவலக வேலையைக் கவனித்தாலும் சரி, வேலை போக மீதமிருக்கும் நேரத்தில் ‘ஓம் முருகா’ அல்லது ‘சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அன்று முருகன் கோவிலுக்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.
மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு முருகப்பெருமானுக்குத் தீப தூப, கற்பூர ஆராதனை காட்டி நைவேத்தியம் செய்த பின் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்றைய தினம் முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டுச் சாப்பிடலாம்.
முருகனுக்குரிய மந்திரம்:
ஆடிக்கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானின் சடாக்ஷர மந்திரமான, 'ஓம் சரவணபவ' என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மிகவும் பலன் தரும். இவ்விரதத்தின் போது, கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், வேல் மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிக்கலாம்.
ஆடிக் கார்த்திகை பலன்கள்:
ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். திருமணத் தடை அகலும். சொத்து சம்பந்தமாக இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். தொழில் அபிவிருத்தி, வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகை அன்று முருகனை மனமுருக வழிபட்டு அருளைப் பெறுவோமாக...!
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை ஜூலை 29ஆம் தேதி திங்கள்கிழமை அன்று வருகிறது
கந்தனுக்கு அரோகரா..!! முருகனுக்கு அரோகரா..!!!
ஓம் சரவணபவாய நம....!!!!
Leave a comment
Upload