தொடர்கள்
அனுபவம்
ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்

2024062622024460.jpeg

சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிறந்து வளர்ந்த முந்தைய தலைமுறையினர்,அவர்களின் வேலைக்காகப் பெருநகரங்களில் வந்து குடியேறியவர்களில் பெரும்பாலோருக்கு ஒரு கனவு இருந்தது. அவர்கள் ஓய்வு பெற்றபின் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.பலர் அதனை நிறைவேற்ற முடியாமல் எண்ணி எண்ணி ஏக்கத்துடனே காலத்தைக் கழிப்பார்கள்.சிலர்,ஓய்வு பெற்றபின் தங்கள் பிறந்த ஊருக்கு வந்து இயற்கையான சூழ்நிலையில் சொந்த பந்தங்களுடன் அமைதியான முறையில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை வாழ்வார்கள். இதைவிடப் பல மடங்கு அமைதியான எளிமையான வாழ்க்கை முறையை ஓய்வு காலத்தில் மட்டுமல்லாமல் என்றென்றும் கடைப்பிடிக்கும் மக்கள்,அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

நவீன உலகில் குறிப்பாக அமெரிக்காவில்,ஒரு சமூகத்தினர் தலைமுறை தலைமுறையாக பண்டைய கலாச்சாரத்தை பின்தொடர்ந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் வீட்டில் தற்போதைய உலகின் மூச்சுக்காற்றாக விளங்கும் செல்போன்,லேப்டாப்,டிவி ஆகியவை இல்லை.

20240626220351628.jpeg

கார் மற்றும் மோட்டார் வாகனங்களும் இல்லை ,அந்த மக்கள் மின்சாரத்தையும் உபயோகிப்பதில்லை. பயணத்திற்கு குதிரை வண்டியை 1952 லிருந்து இன்று வரை உபயோகப்படுத்துகிறார்கள்.இவை அனைத்தும் தினந்தோறும் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள் என நான் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருந்தது.இந்த மில்லினியம் யுகத்தில் எப்படி சாத்தியம்? பெரியவர்கள் கடைப்பிடித்தாலும் பிள்ளைகள் எப்படி பின்பற்றுவார்கள் என்று என் மனதில் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தன.அவர்கள் வாழும் கிராமத்திற்கே நேரில் சென்றேன்.

20240626220518647.jpeg

ஆமிஷ் (Amish)என்ற அழைக்கப்படும் பாரம்பரிய கிறிஸ்தவ இனத்தை சார்ந்தவர்கள்.இவர்கள் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் கனடாவிலும் வசித்து வருகிறார்கள்.பெரும்பான்மையான ஆமிஷ் மக்கள் “பென்சில்வேனியா”(pennsylvania)மாநிலத்தில் “பிலடெல்பியா” (Philadelphia)நகரத்திற்கு அருகில் உள்ள “லாங்காஸ்டர்”(Lancaster) என்ற இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து வந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்கள்.மத சுதந்திரத்திற்காகவும்,வாழ்வாதாரத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்காகவும் அமெரிக்காவுக்கு வந்தனர்.பைபிளில் குறிப்பிட்டபடி தங்கள் வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழ்கிறவர்கள்.எளிய வாழ்க்கை முறை,எளிய உடை, நவீன வசதிகளைத் தவிர்ப்பது ஆகிய மூன்றிற்கும் இவர்கள் பிரசித்தி பெற்றவர்கள்.

பொதுமக்கள் ஆமிஷ்மக்களின் பாரம்பரியத்தை தெரிந்துக்கொள்ளவும்,சுற்றுலா பயணிகளுக்காகவும் அரசாங்கம் பிரத்தியேகமாக“ஆமிஷ் வில்லேஜ்” (Amish village) என்ற இடத்தை உருவாக்கி இருக்கின்றது.இதில் அவர்களின் வீடு,கொட்டில், பண்ணை,பள்ளிக்கூடம்,கொல்லன் பட்டறை, குதிரை வண்டிகள் ஆகியவற்றை நேரில் காண முடிந்தது.

ஆமிஷ் மக்களின் வயல்வெளிக்கு ஒட்டிய சாலையில் பேருந்தில் சுற்றுப் பயணம் செல்லவும் அரசாங்கம் வசதிகள் அமைத்துக்கொடுத் திருக்கி றார்க ள். அவர்களுடைய தொழில் மற்றும் வாழ்க்கை முறையை காட்சிகள் மூலம் விளக்கினார்கள்.ஆமிஷ் மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் நாம் உள்ளே சென்றுப் பார்க்க முடியாது. அவர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் இடம் பெற விரும்புவதில்லை.அதனால் அவர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ள இவை ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தன.

20240626220654723.jpeg

காரில் பயணம் செய்து அந்த “ ஆமிஷ்வில்லேஜ்” க்கு நானும் வந்தடைந்தேன்.அங்கிருந்த வீட்டின் உள்ளே நுழைந்தேன்.

சமையலறையில் அவர்கள் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் பார்க்க முடிந்தது.சூடேற்றும் சாதனம், குளிர்சாதன பெட்டி, உறைகலம்,எரிவாயு அடுப்பு,சலவைப் பெட்டிஆகியவற்றை ப்ரோப்பேன் வாயு (propane gas) மூலம் உபயோகப்படுத்துகிறார்கள்.

அங்கிருந்த விளக்கும்(Standing lamp) சிலிண்டரில் இருக்கும் வாயுவின் மூலமாக ஒளிர்ந்துகொண்டிருந்ததை காண முடிந்தது.

20240626220825176.jpeg

மக்கள் சமையல் செய்ய விறகு,மண்ணெண்ணெய்,நிலக்கரி ஆகியவற்றை உபயோகப்படுத்துகிறார்கள்.சமையலைத் தொழிலாக செய்பவர்கள்,அதிக அளவில் உணவை தயாரிக்கவும் மின்சாரத்தை உபயோகிக்காமல் பாரம்பரிய முறைப்படி சமைக்கிறார்கள்.அவை மிகவும் சுவையாக இருக்கும்.

அடுத்த அறையில் ஆமிஷ் மக்கள் உபயோகப்படுத்தும் கட்டில் இருந்தது. கட்டில் வன் மரங்களால்(Hard wood) கைத்திறன் உள்ள ஆமிஷ் ஆண்களால் உறுதியாக செய்யப்படுகின்றது.ஆமிஷ் பெண்களின் கைகளாலே மெத்தை (quilt)செய்யப்படும்.

பாரம்பரிய முறைப்படி ஆமிஷ் மக்கள் செய்யும் மரச்சாமான்கள், மெத்தைகள் மற்றும் அனைத்து கைவினைப் பொருட்களும் எளிமை,தரம்,கை வினைத்திறன் ஆகியவற்றிற்கு சிறந்து விளங்குகின்றன.

நாம் பள்ளியில் மட்டும் தான் சீருடை(Uniform) அணிகிறோம்.

ஆனால் அதுபோல உடையை இந்த மக்கள் தினந்தோறும் அணிகிறார்கள்.ஆமிஷ்மக்களின் உடைகள் அடுத்த அறையில் தொங்க விடப்பட்டிருந்தன.அவை ஆடம்பரம் இல்லாமல் எல்லோரும் சமம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக எளிமையாக இருந்தன.

20240626220940858.jpeg

ஆமிஷ் பெண்கள், தங்கள் உடல் முழுவதும் மறைக்கும் வகையில் குறிப்பிட்ட சில ஆழ்ந்த நிறங்களில் மட்டுமே ஆடைகளை அணிகிறார்கள்.திருமணம் ஆகாதவர்களும் திருமணம் ஆனவர்களும் தங்கள் ஆடைகளிலும் தோற்றத்திலும் வித்தியாசத்தை காண்பிக்கிறார்கள்.ஆமிஷ் பெண்கள் இறந்த பிறகு அவர்களின் திருமண ஆடையில்தான் புதைக்கப்படுகிறார்கள்.அவர்களின் திருமண ஆடைகளும் எந்தவித ஆடம்பர வடிவமைப்பும் இல்லாமல் எளிமையாக இருக்கும்.அவர்களின் சமூகத்தில் விவாகரத்து என்பது மிகவும் அரிதானது.தம்பதிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால்,தேவாலயம் மற்றும் சமூக தலைவர்களின் ஆலோசனை மூலமாக தீர்க்கப்படுகின்றது.

ஆமிஷ்மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது.அனேகமாக இந்த மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பண்ணை,கொட்டில் இருக்கும். “ஆமிஷ்வில்லேஜ்” -இல் வீட்டிற்குப் பக்கத்தில் மூடிய கூரையுடன் ஒரு கொட்டில் இருந்தது.அதில் குதிரை,மாடு,ஆடு,கழுதை போன்ற கால்நடைகள் இருந்தன.வீட்டிற்கு வெளியே திறந்தவெளி கொட்டிலும் இருந்தது.அதற்கு அருகில் சிறிய ஓடை போய்க் கொண்டிருந்தது.அங்கு மாடு,ஆடு,கோழி, வான்கோழி,சேவல் ஆகியன இருந்தன. அங்கு மயில்கள் கூண்டுக்குள் இருந்ததையும் காண முடிந்தது.பாதுகாப்பிற்காக மயிலை வளர்க்கிறார்கள்.இந்தப் பழக்கம் தலைமுறை தலைமுறையாக ஆமிஷ் மக்களிடம் இருந்து வருகின்றது.ஏதாவது விபரீதம் என்றால், மயில் பயங்கரமாக கத்தி அனைவரையும் அந்த இடத்திற்கு வரவழைத்து விடும்.விவசாயத்திற்கு குதிரைகளை உபயோகப்படுத்துகிறார்கள்.பயணத்திற்கும் கார்களை உபயோகப்படுத்தாமல் குதிரை வண்டிகளையே உபயோகப்படுத்துகின்றார்கள்.அவற்றையும் அங்கு பார்க்க முடிந்தது.

அமெரிக்க அரசாங்கம்,ஆமிஷ் மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை முறையை தொடர பல வசதிகளையும் விதிவிலக்குகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக கல்வி முறை,மருத்துவ காப்பீடு மற்றும் சோஷியல் செக்யூரிட்டி வரிகளை சொல்லலாம்.அரசாங்கம் அவர்களின் மத நம்பிக்கைக்கும்,பாரம்பரிய வாழ்க்கை முறைக்கும் மதிப்பு கொடுத்து,எதனையும் கட்டாயமாக திணிக்கவில்லை.

20240626221020154.jpeg

பண்ணைக்கு எதிர் பக்கமாக ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது.இது ஒரு அறை உடைய பள்ளியாகும். இந்த அறை நல்ல காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. ஆமிஷ் மக்கள் அவர்களுக்கென்று தனிப்பட்ட கல்வி முறையை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள்.இங்கு கம்ப்யூட்டர் இல்லாமல் பலகை மற்றும் புத்தகம் வாயிலாக மட்டும் தான் கல்வி கற்பிக்கிறார்கள்.எந்த நவீன வசதிகளும் பள்ளியில் இல்லை.இங்கு மாணவர்களுக்குள் போட்டி எதுவும் கிடையாது.அவர்கள் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்ய வேண்டும்.அவர்களுக்கு எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படிப்பு உள்ளது.ஆமிஷ் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை கல்வியை மட்டுமே இங்கு பயிலுகிறார்கள்.ஆமிஷ் கல்வி முறை, அவர்களின் பிள்ளைகளை அந்த சமூகத்தில் வாழவும், நடைமுறைக்கு தேவையான அறிவையும்,மத போதனைகளையும்,அவர்களின் வழிமுறைகளை என்றென்றும் பாதுகாக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த கட்டிடத்தில் கொல்லன் பட்டறை இருந்தது.இதில் மின் வசதிகள் இல்லாமல் இயங்கும் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இருந்தன.இவற்றை மக்கள் வீட்டு உபயோகம், விவசாயம்,வியாபாரம் மற்றும் ஆமிஷ் சமூகத்திற்கு உபயோகப்படுத்துகின்றனர்.

பிறகு ஆமிஷ் மக்களின் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள சாலையில் பயணம் செய்தேன்.அங்கு குதிரைகளை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். இரண்டிலிருந்து எட்டு குதிரை வரை உபயோகப்படுத்துகிறார்கள்.நீளவாக்கில் உருளை வடிவில் அமைந்த தொட்டியை (tank)பார்க்க முடிந்தது. இதில் தண்ணீர்,நீர்ம உரம்,எரிபொருள் ஆகியவற்றை அவர்களின் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறார்கள். குதிரைகள் மட்டுமல்லாமல் மாடுகளும் கழுதைகளும் கூட கொட்டகையில் இருந்தன.பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு அருகிலேயே அவர்களின் வீடுகளும் இருந்தன.இது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உழைக்க ஏதுவாக உள்ளது.

ஒரே வீட்டில் வெவ்வேறு விதமான இரண்டு,மூன்று குதிரை வண்டிகள் காணப்பட்டன. குடும்பமாகச் செல்ல,(Family buggy) தம்பதிகளாகச் செல்ல(Courting buggy) வியாபாரத்திற்கு எடுத்துப் போக(Market wagon) என பயன்பாட்டிற்கு ஏற்ப வண்டிகளை உபயோகப்படுத்துகிறார்கள்.அவர்களின் வீடுகளில் சைக்கிளும் இருந்தது.சிறு தொலைவிற்கு சைக்கிளை உபயோகப்படுத்துகிறார்கள்.ஆமிஷ் மக்கள் துணி துவைக்கும் இயந்திரத்தை உபயோகிக்காமல்,கைகளால் துவைத்த துணிகளை கயிற்றில் உணர்த்தி, காய வைத்திருந்ததையும் அங்கு பார்க்க முடிந்தது.

மக்கள் குதிரை வண்டிகளில் பயணிப்பதையும் ஆங்காங்கே காண நேரிட்டது.லாங்காஸ்டரில் இருக்கும் சில பெரிய கடைகளில் குதிரை வண்டிகளை நிறுத்த, வாகனங்களை நிறுத்தும் இடத்தின் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.பிறகு அங்கிருந்த ஒரு கடைக்குச் சென்றேன்.அங்குள்ள விவசாய நிலத்தில் விளையும் பொருட்கள்,பரிசுப்பொருட்கள், பூத்தொட்டிகள், இனிப்புகள்,பெஞ்ச்,நாற்காலி என வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கு இருந்தன.இவை அனைத்துமே ஆமிஷ் மக்களால் தரமாக உருவாக்கப்பட்டப் பொருள்கள் ஆகும்.

விவசாயம்,வீடு கட்டுதல்,கொட்டில் கட்டுவது,பண்ணை வைத்திருப்பது,தச்சு வேலை, கொல்லன் வேலை,உணவுப் பொருட்கள் தயாரிப்பது,அனைத்து விதமான கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்பது,சொந்தமாக கடை வைத்திருப்பது ஆகியன ஆமிஷ் மக்களின் முக்கிய தொழிலாகும்.

ஆமிஷ் மக்கள் உடல்நல குறைவு ஏற்பட்டால் பாரம்பரிய மருத்துவ முறைகளையே பெரிதும் உபயோகப்படுத்துகிறார்கள்.மிக அவசியத்தேவை ஏற்பட்டால் நவீன மருத்துவ உதவியை நாடுகிறார்கள்.இங்கு அனைவரும் எடுக்கும் உடல் நல காப்பீடு அவர்கள் எடுப்பதில்லை.அதற்கு மாறாக தேவாலய அமைப்பின் மூலம் இருக்கும் உதவித்திட்டங்களில் பங்களிக்கிறார்கள். ஆமிஷ் மக்களுக்கு அவர்கள் சமூகத்தினர் இடமிருந்து வலுவான ஆதரவு கிடைக்கின்றது. மருத்துவ நெருக்கடி ஏற்படும்போது சமூகத்தினர் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

மக்களுக்கு கொட்டகைகள் கட்டுவது மற்றும் பெரிய திட்டப் பணிகள் பெரும்பாலும் சமூக நிகழ்வுகளாகின்றது (Community events).இங்கு மக்கள் ஒன்று சேர்ந்து உழைக்கிறார்கள்.இவர்கள் நவீன வசதிகளை உபயோகப்படுத்தாததால்,ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

எங்கு அவசியம் மின் வசதி தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள்.இதுவும் அவர்கள் சமூகத்தை பொறுத்து உள்ளது. ஆனால் அனைவரும் அரசாங்க மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தை உபயோகப்படுத்துவது இல்லை.

வியாபாரத்தில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் மற்றும் நெருக்கடியான நிலைமைகளில் மட்டுமே ஆமிஷ் சமூகத்தினர் உபயோகப்படுத்தும் பொது தொலைபேசியை உபயோகப்படுத்துகிறார்கள். இதனையும் பழமைவாத ஆமிஷ் குழு உபயோகப்படுத்துவதில்லை.முற்போக்கான குழு அவசிய தேவைக்கு மட்டும் தொலைபேசியை உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆமிஷ் மக்கள் மத நம்பிக்கை,கடின உழைப்பு,எளிய வாழ்க்கை முறை அவர்களின் சமூகத்திற்குச் சேவை என இதனைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.அமெரிக்காவில் சாலையில் கார்களோடு குதிரை வண்டிகளும் போய்க்கொண்டிருந்ததை நம்பவே முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நவீன வசதிகளுக்கு அடிமையாகாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் ஆமிஷ் மக்களின் வாழ்க்கைமுறை என்னை திகைப்படைய வைத்தது.