தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 79 " - பரணீதரன்

இந்த வாரம் சித்திரக்கவியைப் பற்றிக் கூறத் தொடங்குகிறார்.

கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே எழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால

  • தண்டியலங்காரம் - 97

சித்திரக் கவியில் அமைந்துள்ள சில வகையான செய்யுள்களை தண்டியலங்காரம் பின்வருமாறு விளக்குகிறது. கோமூத்ரி, கூடசதுக்கம், மாலைமாற்று, அக்ஷரவர்தனம் என்ற அக்கரவர்த்தனம் என்ற எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறைப்பாட்டு, சக்கரபந்தம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்ஷரசுதகம் என்ற அக்கரச்சுதகம். இன்னும் திருவெழுக்கூற்றிருக்கை போன்ற மற்ற செய்யுள்களும் உள்ளன என்றும் தண்டியலங்காரம் கூறுகிறது.

வடமொழியிலும் தமிழ் மொழியிலும் சித்திரக்கவிகள் மிகுந்து காணப்படுகிறது. சில சித்திர கவியின் பெயர்கள் வடமொழி சொற்கள் போல இருந்தாலும், வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒற்றுமைகளில் சித்திரக் கவியும் ஒன்றாகும். இதில் வரப்போகும் சித்திரக்கவிகள் தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் போன்ற பழைய இலக்கண நூல்களில் இருந்து கையாளப்படும்.

கீழே உள்ள படங்களில் சில வகையான சித்திரக்கவிகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றாக நாம் சில வாரங்களுக்கு பார்க்கலாம்.

நாம் தினமும் வாசலில் இடும் கோலங்கள் மற்றும் தெய்வங்களுக்கு எழுதப்படும் எந்திரங்கள் ஆகிய பல விஷயங்கள் சித்தரக்கவிகளை சார்ந்தவைகளே.

20240626213321934.jpg

20240626213443173.jpg

இந்த வாரம் எழுத்து வருத்தனத்தில் ஒரே ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு விளக்குகிறார்.

எழுத்து வருத்தனம் என்றால், ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு எழுத்தாக வளர்ந்து கொண்டே வந்து கடைசி கேள்விக்கு முழுவதுமாக பதில் கிடைத்துவிடும். இப்பொழுது கீழே உள்ள இந்த பாடலைப் பார்ப்போம்.

ஏந்திய வெண்படையு முன்னால் எடுத்ததுவும்

பூந்துகிலு மால்உந்தி பூத்ததுவும் - வாய்ந்த

உலைவில் எழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்

தலைமலைபொன் தாமரையென் றாம்.

திருமால் கைகளில் ஏந்தி இருக்கும் வெண்மை நிறத்தை உடைய ஆயுதம்

அவர் முன்னொரு காலத்தில் எடுத்தது (தூக்கியது)

அவர் உடுத்தி இருப்பது

அவருடைய உந்தியில் (தொப்புள் கொடியில்) பூத்தது

முதல் பதில் வரும் ஒரு எழுத்தை எடுத்துவிட்டு, அதன் பிறகு அந்தச் சொல்லில் ஒரு ஒரு எழுத்தாக சேர்த்து வரும் பொழுது கிடைக்கக் கூடிய சொற்கள் : தலை, மழை, பொன் மற்றும் தாமரை ஆகும் என்று இந்த பாடல் நமக்கு விளக்குகிறது.

அது எப்படி என்பதை இப்பொழுது பார்ப்போம்.

சங்கிற்கு கம்பு என்று ஒரு பெயரும் உண்டு. அதனால் முதல் கேள்விக்கு விடை கம்பு. இப்பொழுது நமக்கு கிடைத்து விடையில் ஒரு எழுத்தை எடுக்க வேண்டும். கம் என்றால் தலை என்று ஒரு பொருள் உண்டு. நமக்கு தலைக்கான பதில் கிடைத்து விட்டது.

அடுத்தது நகம் என்றால் மலை என்று ஒரு பொருள் உண்டு. . கிடைத்த விடையில் ஒரு எழுத்தை சேர்த்து விட்டோம். தங்கத்திற்கு கநகம் (கனகம்) என்று ஒரு பெயர் உண்டு. அதேபோல தாமரைக்கு கோகநகம் (கோகனகம்) என்று ஒரு பெயர் உண்டு.

இவ்வாறு ஒரு எழுத்தை எடுத்துவிட்டு பிறகு பல்வேறு எழுத்துக்களை சேர்த்து விடைகளை கொண்டு வருவது எழுத்து வருத்தனம் ஆகும்.

இன்னும் உண்டென்று கூறிய பரணீதரன், இந்த வாரத்திற்கான உரையை முடித்துக் கொள்கிறார்.