தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 19 "நவராத்ரி வேட்டை" - மோகன் ஜி:சித்திரம்: தேவா

20240622230327174.jpg

“அகிலாண்டம் மாமி! இன்னிக்கி என்ன சுண்டல்?”

“உள்ளே வா மோகி! கொண்டக்கடலை சுண்டல் தான்!”

“அய்யே! இன்னிக்கும் கொண்டக்கடலையா? நீங்களே கொட்டிக்கோங்க!”

“அடக் கடங்காரா ! நாளைக்கு கமகமன்னு மல்லாட்ட உண்டை பண்ணப் போறேன். இப்போ வந்து கட்டபொம்மு வசனம் பேசிட்டுப் போ மோகி!”

“கொண்டைக் கடலைக்கெல்லாம்

கட்டபொம்மன் கேக்குதா? புதுப் பாளையத்துலேயிருந்து உங்க அக்கா பொண்ணு எப்போ வருவா?”

“ஞாயித்துக்கிழமை தான் அவாளெல்லாம் வருவா. அவளோட உனக்கென்ன சிநேகம் படவா?! அவளும் மோகி மோகிங்கறா? அஞ்சாம் கிளாஸ்லயே ஆரம்பிச்சிட்டியா, ரவிச்சந்த்ரன் காஞ்சனா மாதிரி? ருக்மணி மாமிகிட்ட சொல்றேன்”

‘சொன்னா சொல்லிக்கோ.

சொம்பெடுத்து மாட்டிக்கோ.

ஜெயிலுக்குள்ள பூந்துக்கோ.

செருப்படி வாங்கிக்கோ’

என்ற என் எதிர்வினை கேட்பதற்குமுன் மாமி உள்ளே போய்விட்டாள்.

“மோகி! இங்க தான் இருக்கியா? வீட்டுக்கு வா! உன்னோட ‘ரவுடி ரமேஷ்’ டிராமா இன்னைக்குப் போடலாம்னியே? மறந்துட்டியா? நம்ம ஜமா ஆறுபேர் அப்படியே ரெடியா இருக்கா! வா!”என்றபடி வந்தாள் என் சிநேகிதி சந்திரா.

“போ சந்திரா! பத்து நிமிஷத்துல வரேன்” வீட்டுக்குப் போய் ரமேஷ் கதாபாத்திரத்துக்கான ‘பென்ஹர்’ மஞ்சள் பனியன், கருப்பு பேண்ட் மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

‘ரௌடி ரமேஷ்’ நாடகத்தின் எழுத்து, இயக்கம், கதாநாயகன் எல்லாம் நான் தான். ஒரு ஓபனிங் சாங் கூட எழுதி டியூன் போட்டிருந்தேன். கிச்சா அதை அழகாகப் பிராக்டீஸ் செய்து பாடக் கத்துகிட்டான்.

‘உலகமடா! இது உலகமடா!

தீயவர்களின் வாழ்விடம்!

திருடர்களின் இருப்பிடம்!

மலரைப்போல பூத்திருந்த

எங்கள் வாழ்விலே....

புகுந்து விட்ட மடையனடா! அவன் மடையனடா....’

பாட்டை எழுதும்போது கடைசி இரண்டுவரியை சந்திரா தான் சேர்த்தாள். கிச்சாவுக்கு அது பிடிக்கவில்லை. எனக்கும் தான். ஆனால் அவை சந்திராவோட வரிகள். அவளை மனசு கஷ்டப்பட வைக்க விரும்ப வில்லை.

சந்திராவை விட்டால் சரஸ்வதி வேடம் போட யாரிருக்கா? என் முந்தைய நாடகம் “சரஸ்வதி பண்ணிய கொழுக்கட்டை”.

நல்லா நினைவிருக்கு. ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்னைக்கு அதை எழுதினேன். சரஸ்வதி தேவி செய்த கொழுக்கட்டையைப் பற்றிய ஏதோ கதை. நாடகத்தில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்லாம் கூட இருந்தது.

சந்திரா தான் மெயின் ரோல். நான் பிரம்ம தேவன். அட்டையில் நாலு மண்டை வெட்டத்தான் கஷ்டப் பட்டேன்.

இரண்டு மாதங்களுக்குமுன் அந்த நாடகத்தைப் போடும்போது வரைந்த அட்டை நசுங்கி கிழிந்து விட்டது. இன்னொன்றை தயார்செய்யும் வரை இருக்கட்டும் என்று புதிதாக எழுதிய நாடகந்தான் ‘ரௌடி ரமேஷ்’

சந்திரா வீட்டுக்குப் போனேன். நாடகம் போட்டோம். சந்திராவோட பாட்டி எல்லோருக்கும் ஒரு தொன்னை கொடுத்தாள்.

அதிலேயும் கொண்டைக்கடலை சுண்டல். அதில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு தேங்காய்ப் பல்லை மட்டும் வாயில் போட்டுக் கொண்டேன்.

“எப்படி இருக்கு சுண்டல் மோகி?”

“நல்லாருக்கு பாட்டி”

“நான்தான்டா தேங்காயைக் குட்டிகுட்டியா வெட்டிக் குடுத்தேன். இல்லயா பாட்டி?”என்றாள் சந்திரா.

“ஆமாண்டி ராஜாத்தி!” என்று அவளை அணைத்துக் கொண்டாள் அவள் பாட்டி.

“வரோம் பாட்டி”

“டிராமா நல்லாத் தான் இருக்கு. ஆனா அந்தப் பாட்டு வேணாண்டா. நல்ல நாளும் அதுவுமா தீயவர், திருடர்னு ... “என்றபடி பாட்டி உள்ளே போனாள்.

சந்திரா இடைமறித்தாள். “ஆமாண்டா.. புதுசா பாட்டு எழுது. ஆனா நான் எழுதின அந்த கடைசி இரண்டு வரியை மட்டும் வச்சிக்கோ.”

“சரிடி....” நானும் கிச்சாவும் மட்டும் கிளம்பினோம்.

கிச்சா புலம்பிக் கொண்டே வந்தான். “வேஸ்ட் மோகி! சந்திராவோட பாட்டியானால் ஒரு தொன்னை சுண்டல் கொடுத்துட்டு, அதை மாத்து இதை மாத்துன்னு... இந்தப் பாட்டை மூணுநாள் கஷ்டப்பட்டு பாடி இப்பதான் எனக்கு வசமாயிருக்கு.. அவளோட வரியை மட்டும் வச்சுக்கணுமாம். “

“விடுடா கிச்சா! அடுத்த டிராமாவை அந்தப் பாட்டியைக் கிண்டல் பண்ணி எழுதலாமா?”

“கரெக்ட்டுடா! செய்யலாம். “கிச்சா குஷியாகி விட்டான்.

எனக்கு கொண்டைக்கடலை சுண்டல் பிடிக்காது. கிச்சாவுக்கு சந்திராவைப் பிடிக்காது.