பல வருடங்களுக்கு முன்னால் இதே நாள். கும்பகோணத்தில் ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருக்கிறது. காலை 9லிருந்து 10.30க்குள் முகூர்த்தம். சாஸ்திரிகள் மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறார்.
"மணி என்னாச்சு மாப்பிள்ளை?" கேட்டது சாஸ்திரிகள்.
"எட்டரை ஆச்சு?"
"எட்டரையா? அடடா ...."
பரபரப்பு தொற்றிக் கொண்டது சாஸ்திரிகளுக்கு. மந்திரங்கள் ராக்கெட் வேகத்தில் ஓதப்பட்டன. அருகிலே இருவீட்டாருக்கும் மிக நெருங்கிய சொந்தங்களே அமர்ந்திருந்தார்கள்.
ஏனையோர் காலை உணவுக்கும் அருகிலிருந்த கோவில்களுக்கும் போயிருந்தார்கள்.
அவர்களின் கடிகாரத்திலெல்லாம் சரியான நேரமாக ஏழரை தான் ஆகியிருந்தது.
அரைமணிக்குள் சாஸ்திரிகள் மேல்மூச்சு வாங்க 'கெட்டிமேளம்.. கெட்டிமேளம் ' என்று கிறீச்சிட்டார். மங்கல வாத்யம் உச்சஸ்தாயியில் முழங்க, வெளியே நின்றிருந்த பலர் உள்ளே ஓடி வந்தார்கள்.
மணமகன் கைகளில் தாலி எடுத்து கொடுக்கப் பட்டது. நிறைய தாலி கட்டிய அனுபவஸ்தன் போல் மூன்றுமுடிச்சு போட்டான்.
எத்தனை சினிமாவில் சிவாஜி உதடுதுடிக்க தாலி கட்டுவதைப் பார்த்திருக்கிறான்?
பூவும் அட்சதையுமாக சுள்சுள்ளென மேலே விழுந்தது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பலரும் அவன் அப்பாவுக்கும் சகோதரர்களுக்கும் கைகுலுக்கினாலும் அனைவரின் முகத்திலும் ஒரு கேள்விக்குறி.
அவன் மாமனார் சாஸ்திரிகளை கடிந்து கொள்ளுவதைக் கேட்டான்.
"என்ன ஸ்வாமி? இப்படி பண்ணிட்டீங்க? முகூர்த்தத்துக்கு டயம் இருக்கே. என்ன அவசரமாய் மாங்கல்ய தாரணம் பண்ணிட்டீங்களே?"
"என்ன பண்றது? மாப்பிள்ளையைத் தான் டயம் கேட்டேன். ஏழரையை தப்பா எட்டரைன்னு சொல்லிட்டார். ஆனது ஆயாச்சு. நல்ல நேரம் தான் இதுவும். அடுத்ததைப் பார்ப்போம். சுப்ரமண்யம்... சமித்து கட்டு இன்னும் ரெண்டு எடு"
அக்கா பரிகாசம் செய்தாள். "என்ன அவசரம்டா உனக்கு? ஏழரை எட்டரையா தெரிஞ்சதாக்கும்!"
"ஏழரை தொடங்கிடுச்சா?" என்று நண்பனின் கேலி.
சரியான முகூர்த்தத்துக்கு மண்டபம் திரும்பிய பலருக்கும் மாங்கல்ய தாரணம் ஆகிவிட்ட கதை தெரிந்து, மாப்பிள்ளையை பார்வையால் துளைத்தார்கள். அசடுவழிய நின்றான் மாப்பிள்ளை.
அவன் வாழ்க்கையில் வாங்கிய முதல் பல்ப். அந்த பல்புடன் தொடங்கியது இனிதே அவன் வாழ்க்கை. இனி எல்லாம் பல்ப் பல்பே.
இவ்வளவு ஆண்டு கள் கழித்து யோசித்துப் பார்க்கிறான்.
அவன் நேரம் மாற்றி தாலிகட்டிய வேளை மிக நல்லநேரமாகத் தான் இருந்திருக்க வேண்டும். வாழ்க்கையின் பல நிறைவுகளும் அந்த தம்பதிகளை அடைந்தன. குறைகளைப் பாராட்டாத மனமும் அவர்களுக்கு வாய்த்தது. தொட்டவை யாவும் துலங்கின. விதிக்கப் பட்டிருந்த தாம்பத்திய காலத்தில் ஒரு மணிநேரத்தை தானறியாமல் அந்த மாப்பிள்ளை கூட்டியிருந்தான்.
அந்த மாப்பிள்ளை ...... நான் தான்.
இன்றைக்கு எங்கள் மணநாள். அதான் நினைத்துக்கொண்டேன் என்கிறார் கட்டுரையாளர். அவரே தொடர்ந்து,
வயதில் சிறியவர்கள் எங்கள் ஆசிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். மூத்தவர்கள் பாதம் பணிகிறோம். ஆசீர்வதியுங்கள்!!
ஆய்ஷ்மான் பவஹ என்று மனதார வாழ்த்திவிட்டோம் நாமும்.
Leave a comment
Upload