தொடர்கள்
கவிதை
கடந்த காலம் - இர.மணிகண்டன்

20240620001938378.jpeg

இப்போதெல்லாம்

சற்று மஞ்சள் நிறமாக

ஒளி உமிழும்

தெரு மின்விளக்குகளைக்

காண முடிகிறபோது,

அவ்வொளியில்

எழுதிய நாலு வரி நோட்டில்

அப்படியே

என் கையொப்பம்

இட்டுவிடுகிறேன்.

எதிர்ப்படும்

கிணற்றுச் சுவரில்

எழுதப்பட்டிருந்த

தேர்தல் வேட்பாளரின் பெயரை

எழுத்துக் கூட்டாமல்

படித்துவிடுகிறேன்.

என்னைக்

"கனகாம்பரம்" என்று

சொல்லச் சொல்லி,

கேலி செய்யக்

காத்திருப்போரிடம்

"கனகராம்பரம்" என்றுச் சொல்லாமல்,

சரியாகச் சொல்லி

பொக்கெனச் சிரிக்கும்

அவர்கள் வாயை

அடைத்துவிடுகிறேன்.

சீயக்காய்த் தூளைச்

சத்து மாவு

என நினைத்து

வாரி வாயில் போட்டுக்கொண்டது

இப்போது நடக்காமல்

பார்த்துக்கொண்டேன்.

வேண்டுமென்றே

வேர்க்கடலைப் பையில்

சிக்கலான முடிச்சு போடும்

பாட்டி!

அவிழ்ப்பதற்க்குள்

பாட்டியே வந்துவிடுவார்

மாட்டிக்கொள்வேன்.

இப்போது அப்படியில்லை

எவ்வளவு வேண்டுமோ

சுதந்திரமாக எடுத்துக்கொள்ளலாம்!

குரங்கிடம்

போடப்படும் பாட்டியின்

"போடா ராமா" கோஷம்

செவியின்

ஏதோ ஒரு மூளையில்

எதிரொலிக்கிறது!

இப்போதெல்லாம்

உருளைக்கிழங்கிற்கும்,

சப்போட்டா பழத்திற்கும்

எளிதில்

வித்தியாசம் தெரிந்துவிடுகிறது!

சுட்டி விகடனின்

தோனி டி.எஸ்.பி தொடர்

லேசாக கண்ணின் ஈரத்தில்

மிதக்கிறது!

இறுதியாக,

டிக் டிக் யாரது? விளையாட்டில்

என்ன வேண்டும்? என்ற கேள்விக்கு

"கடந்த காலம்" என்றேன்,

காலம் தன் வெறுங்கையைப்

காட்டிக்

கண்ணீர்மல்க நிற்கிறது !