தொடர்கள்
கதை
இல்லம் - ஜி. ஏ. பிரபா

20240619235144691.jpeg

தளர்ந்து அந்த இல்லத்தை விட்டு வெளியில் வந்தாள் சரசு.

மனம் சோர்ந்து வேதனையும், விரக்தியும், வெறுப்பின் உச்சத்தில் இருந்தது.

காசு இல்லாதவர்கள் இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவளின் கேள்விக்குப் பதில் இல்லை. கிடைக்காது. இந்த உலகில் அன்பைக் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும் எனும் பொழுது,வாழ்வதற்கான ஒரு நல்ல இடத்தையும் அந்த காசினால்தானே தேட வேண்டும்.

சரஸ்வதியும் எத்தனையோ சீனியர் சிட்டிசன் இல்லங்களை ஏறி, ஏறிப் பார்த்து விட்டாள். ஒவ்வொன்றிலும் வீட்டு வாடகை, மெயின்டனன்ஸ், சாப்பாட்டுச் செலவு சேர்ந்து எல்லாமே 30, 40 ஆயிரத்திற்கு மேல் தாண்டியது. வெறும் பதினைந்தாயிரத்துக்குள் வாழ்வதற்கான வழி எங்கே என்று தெரியவில்லை?

சரசுவும் வேலை பார்த்தது ஒரு தனியார் பள்ளிதான் என்றாலும் 15 வருட சர்வீஸ் முடிந்தது. ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியர் வைப்பு நிதியிலிருந்து அவளுக்குப் பென்ஷனாக வருகிறது.

வேலையில் இருந்தவரை சம்பளம், டியூஷன் பீஸ் என்று வந்தது, நல்ல வீடு, ஏதோ மூன்று வேளை சோறு என்று நிம்மதியாகத்தான் இருந்தது. ரிடையர் ஆகி, உடலும் தளர்ந்து, பல நோய்கள் உடலில் சேர்ந்த பிறகு, சுற்றத்தாரின் அறிவுரை “நீ தனியாக இருக்காதே. ஏதேனும் ஹோம் பார்த்து போய்க் கொள்” என்று. அதில் மறைமுகமாக எங்களிடம் வந்து விடாதே என்ற அர்த்தம் தொனித்தது.

திருமணம் வேண்டாம் என்று குடும்பத்தைக் காப்பாற்றி, தங்கை தம்பிகளைப் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் இன்று நன்றாகத்தான் வாழ்கிறார்கள். ஆனாலும் ஏற்றிவிட்ட ஏணி பாரமாகி விட்டது.

தங்கை “நான் வடநாட்டில் இருக்கிறேன். என் மாமனார், மாமியார் என்னுடன் இருக்கிறார்கள்” என்று கூறி விட்டாள். தம்பி “என் மனைவிக்கும், உனக்கும் ஒத்து வராது. ஒரு நல்ல ஹோமாக பார்த்து நீ அங்கு சென்று விட்டால் உனக்கும் சௌகரியம், ஒரு பாதுகாப்பும் இருக்கும்” என்று கூறுகிறான்

சீ என்று மனது வெறுத்து விட்டது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்தான் சொந்தங்கள். அவளும் உள்ளூரில் நாலைந்து ஹோம் விசாரித்து விட்டாள். எல்லாமே அவள் தகுதிக்கு மீறியதாக இருந்தது.

அறுபது வயது என்றாலும், சரசுவுக்கு தனியாக இருக்க சிறிது பயமாகத்தான் இருந்து. தனக்குப் பாதுகாப்பும், நிம்மதியும் வேண்டும் என்று விரும்பினாள் சரசு. ஆனால் இந்த சொற்ப பணத்தில் எங்கு போய் வாழ்வது? சலிப்புடன் வீட்டுக் கதவைத் திறந்து தரையில் படுத்தாள் சரசு.

​“என்ன படுத்துட்ட?”

எதிர்த்த வீட்டு அக்கா. “சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு பண்ணினேன். சாப்பிடு” என்று கொடுத்துவிட்டு, “ஏதேனும் இல்லம் கிடைத்ததா? என்று கேட்டார்.

“இல்லக்கா.காஸ்ட் ஆஃ ப் லிவிங் ஜாஸ்தி.”

“ அப்படித்தான் இருக்கும். எல்லாரும் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு, அங்கு வந்து இருக்கிறார்கள். காசு இருக்கிறது. எனவே அங்கு போகிறார்கள்.”

அப்போ காசு இல்லாதவர்கள் வாழவே முடியாதா?”

“ ஏன் முடியாது? நான் ஒன்று சொல்லவா?”

“ சொல்லுங்க அக்கா”

“ நீ அங்கு போவதை விட இங்கேயே ஒரு இல்லம் ஏன் ஆரம்பிக்கக் கூடாது?”

“நானா?”

“ ஆமாம். ஒரு நாலைந்து பேர் ஆதரவற்றவர்கள், பணம் கம்மியாக உள்ளவர்கள், வருமானம் இல்லாதவர்கள் என்று சேர்ந்து கொண்டு , அவரவர்களுக்கு தெரிந்த விஷயத்தை செய்து நாலு காசு சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள். உடம்பில் தெம்பும், மனதில் வலுவும் உள்ளவரை நமக்கு முதுமை என்பது கிடையாது. அப்படியே முதுமை வந்து படுத்தாலும், ஒருவர் மற்றவர்களுக்கு ஆதரவு. “

​“- - - - - - - - “

இல்லம் என்பது என்ன சரசு? நம்ம மனசுதானே. நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவும் நம் மனசால் இருந்த இடத்திலேயே உண்டாக்கிக் கொள்ள முடியும். இதுவும் ஒரு கூட்டுக் குடும்ப முறைதானே சரசு.

சரசு யோசனையோடு பார்த்தாள்.

“ இதோ என் பையன் என்னை விட்டுட்டுப் போய்ட்டான். நான் இட்லி போட்டு வித்து வாழ்க்கையைக் கழிக்கிறேன். எனக்குத் தெரிந்த இன்னொரு பெண். யாரும் இல்லை. சொற்ப வருமானம். அவளும் ஹோம் தேடறா,. என்னுடைய அக்காவுக்கு 85 வயதாகிறது. அவளுக்குக் குழந்தைகள் இல்லை. நான்தான் அவளுக்கு சமைத்துக் கொண்டு போய் கொடுக்கிறேன். அவளையும் அழைத்து வருகிறேன்.

“நாம் நாலு பேரும் சேர்ந்து இருக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஈகோ இல்லாமல், ஒருவர் உணர்வுகளை மற்றவர்கள் மதித்து வரும் செலவுகளை பகிர்ந்து கொள்ளலாம். வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். நமக்கு துணைக்கு நாலு பேர் இருக்கிறார்கள் என்ற ஒரு தைரியமும் இருக்கும். இல்லம் என்பது இதுதானே” என்றார்.

சரசுவுக்கு பொட்டில் அடித்தாற் போல் இருந்தது.

ஆம். பாதுகாப்பையும்,நிம்மதியையும் தேடி அலைவதை விட இருக்கும் இடத்தில் நாமே அதை ஏற்படுத்திக் கொள்வது மிகச் சிறப்பு அல்லவா?

சரசு உற்சாகத்துடன் எழுந்தாள்.

“வாங்க அக்கா. இப்பவே இந்த நிமிஷத்திலிருந்து நாம சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம். ஒரு நல்ல வசதியான வீட்டை பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ளலாம். அன்பு, அக்கறை, பாசம், பிரியம் எல்லாவற்றையுமே” என்றாள் சரசு.

கூறும்போது மனது நிம்மதியாக இருந்தது.