கர்நாடக அரசு இந்த வாரம் ஒரு சர்ச்சைக்கு உரிய சட்ட வரைவை கொணர்ந்தது. அதாவது கர்நாடக மாநிலத்தில் கன்னட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 50%-75% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு இந்த சட்ட வரைவில் இருந்தது! மிக கடுமையான எதிர்ப்புக்கு பிறகு, இந்த வரைவு இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது!
சரி, மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுரிமை வழங்குவதில் என்ன சிக்கல்? இதை ஏன் பலரும், முக்கியமாக தனியார் நிறுவன முதலாளிகள் எதிர்க்கின்றனர்? பொது மக்கள் மத்தியில் என்ன கருத்து நிலவுகிறது? அது போக, நம் அரசியல் சட்ட அமைப்பின் படி இது செல்லுபடி ஆகுமா? இப்படி பல பல கேள்விகள்!
இதற்கு முன் வேறு சில மாநிலங்களும் (உ: ஆந்திரா, ஹரியானா) இதனை ஒத்த சட்டங்களை இயற்ற முயன்று தற்போது வழக்குகள் பல நிலைகளில் நடந்து வருகின்றன! பொதுவாக இது பாரத நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகவே கருதப்பட்டு வருகிறது! இந்த நாட்டின் குடி மகனாக எந்த மாநிலத்திலும் வேலை பார்ப்பது நமது உரிமை. அது போலவே தனியார் நிறுவன உரிமைகளை இது போன்ற முயற்சிகள் மீறுவதாகவே உள்ளன!
சட்டம், அரசியல் அமைப்பு இவை ஒரு பக்கம் இருக்கட்டும்! மண்ணின் மைந்தன் யார் என்று எப்படி நிர்ணயம் செய்வது? உதாரணமாக இந்த கன்னட அரசின் வரைவில் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தவராக அல்லது கர்நாடக மாநிலத்தில் குறைந்தது 15 வருடங்கள் வாழ்ந்தவராக இருந்து அரசு நடத்தும் ஒரு தேர்வில் கன்னட மொழியில் தேர்ச்சி பெற்றால் அவர் கன்னட மாநிலத்தை சேர்ந்தவர் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இது எந்த அளவிற்கு சரியாக இருக்கும்? நம் சுய அடையாளங்களை நிர்ணயிக்க சில வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி அமையும் இந்த மாநில அரசுகளுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது? நாளை வேறு ஒரு அரசு வந்து 15 க்கு பதில் 25 வருடங்கள் என்று மாற்றி அமைக்காது என்று என்ன நிச்சயம்? முன்பே தமிழ் புத்தாண்டு தேதியில் குண்டு விளையாடிய கயவர்கள் கூட்டம் தானே இவர்கள் எல்லோரும்? தொன்று தொட்டு வரும் கலாச்சார உணர்வுகளுக்கும், சமூக, தனி நபர் அடையாளங்களும் புது சாயம் பூசுவதுற்கு இவர்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது?
அது போகட்டும்! கன்னட மொழி ஒன்று தான் அந்த மாநிலத்தின் மொழியா? கர்நாடக எல்லைக்கு உட்பட்டு இருக்கும் பல ஊர்களில் தெலுங்கு மற்றும் சொல்லப்போனால் எழுத்து வடிவு இல்லாத ஆதி மொழிகள் பேசும் பழம் குடி மக்கள் இருக்கின்றனர். அவர்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை என்று இந்த அரசுகள் முடிவு செய்தால் அது எவ்வளவு அபத்தம்!
தமிழன், கன்னடிகா, மலையாளி போன்ற இவை நமது தனி மனித அடையாளங்கள்! இந்தியன் அல்லது பாரத நாட்டு பிரஜை என்பது நம் பொது அடையாளம்! இவை உளப்பூர்வமான உணர்வுகள்! இன்று தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான தெலுகு பேசும் மக்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?
ஐநூறு - ஆயிரம் வருட காலம் முன்பு இந்த பகுதிகளில் குடியேறி மண்ணுடனும், மக்களுடனும் கலந்து தமிழ் கலாச்சாரத்தையும் தங்கள் இனம், மதம், மற்றும் தொன்மை சார்ந்த அடையாளங்களையும் விட்டுவிடாமல் நம் சமூகத்தில் இரண்டறக்கலந்து வாழ்ந்து வரும் பல லட்சம் மக்களை நாளை முதல் நீங்கள் தமிழர்கள் இல்லை என ஒதுக்கி வைக்க முடியுமா? மொழி வாரியாக மாநிலங்களை பிரித்தது சிறந்த மேலாண்மை செய்யவே அன்றி மொழியின் பெயரால் சமூகத்தை துண்டாட இல்லை என்ற அடிப்படை உண்மை இந்த அரசியல் வாதிகளுக்கு எப்போது புரியும்? இவர்களின் தூண்டுதலால் நம்மை போன்றவர்களில் சிலர் நம் பக்கத்து வீட்டுக்காரர்களை அந்நியர்களாக பார்க்க விழைவது என்ன நியாயம்?
ஏற்கனவே மதம், சாதி, இனம் என்று பிரித்துப் பிரித்து பிரிவினை நெருப்புக்கு தீனி போடும் இந்த காலத்தில் இப்படி மண்ணின் மைந்தர்கள் என்ற புது அடையாளம் கற்பித்து மேலும் பிரிவினையை தூண்டும் சக்திகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் யாராக இருந்தாலும் சற்றே நிதானித்து தங்கள் நிலையை சீர் தூக்கி பார்க்க வேண்டும்!
ஆனால் இந்த பிரிவினை அரசியலில் குட்டை குழப்பி வோட்டு மீன் பிடிக்கும் இவர்கள் திருந்துவார்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை. ஆக, இதற்கான விடையும் விடிவும் நம் கைகளில் தான் இருக்கிறது! இனிமேலேனும் மொழி, இனம், மதம், சாதி என்று நமக்குள் பிரிவினை விதை தூவும் இந்த அரசியல் முறைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் மற்றும் பாரத சமூகம் பெரும்பாலும் எல்லோரையும் ஏற்று, வரவேற்று, ஏணியேற்றி தானும் உடன் வளர்ந்த சமூகமாகவே இருந்திருக்கிறது! அந்த சமூக எண்ணம் இப்படிப்பட்ட தரம் குறைந்த அரசியல் விளையாட்டுகளை புறம் தள்ளும் என்று ஒரு பக்கம் நம்பிக்கை இருந்தாலும், தீயாய் வளர்ந்து வரும் துவேஷ உணர்வுகள் மேலோங்கி விடுமோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது! நம் மட்டில் நாம் சரியாக சிந்தித்து நடப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? யாம் அறியோம் பராபரமே
Leave a comment
Upload