தொடர்கள்
அரசியல்
அமெரிக்க துணைஅதிபர் வேட்பாளரின் இந்திய மனைவி ! -மாலா ஶ்ரீ

20240620001245171.jpg

அமெரிக்காவில் இந்தாண்டு நடைபெறும் அதிபர், துணை அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், துணை அதிபர் பதவி வேட்பாளராக ஜே.டி.வான்ஸ் (ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்) ஆகிய இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. விரைவில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த துணை அதிபர் வேட்பாளரான ஜே.டி.வான்ஸ், ஏற்கெனவே ‘ஹில்பில்லி எலிகி’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆரம்ப காலங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை அதிகளவு விமர்சித்த ஜே.டி.வான்ஸ், தற்போது தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த உஷா சிலுக்குரி என்ற பெண்ணை சட்டக்கல்லூரியில் முதன்முதலாக சந்தித்துள்ளார். பின்னர் உஷாவையே ஜே.டி.வான்ஸ் திருமணம் செய்துள்ளார்.

20240620001412531.jpeg

தற்போது ஜே.டி.வான்ஸ்-உஷா சிலுக்குரி தம்பதிக்கு 6 வயதான இவான், 4 வயதான விவேக் என்ற 2 மகன்களும், ஒரே மகளான 2 வயது மிராபெல் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். குடியரசு கட்சி சார்பில் ஜே.டி.வான்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன், கடந்த சில நாட்களுக்கு முன் இத்தம்பதி ஒரு அமெரிக்க தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்து உள்ளனர். அப்போது ஜே.டி.வான்ஸ் கூறுகையில், ‘‘நான் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். எனினும், நான் ஞானஸ்நானம் பெறவில்லை. ஆனால், எனது கிறிஸ்தவ மதநம்பிக்கை மற்றும் தேடல்களை மனைவி உஷா ஊக்குவித்து ஆதரித்தார். எனினும், அவர் இந்துமத குடும்ப பின்னணி கொண்டவர். இதற்கு மனைவி உஷாவின் பெற்றோர்கள்தான் முழுக் காரணம்!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனைவி உஷா கூறுகையில், ‘‘எனது பெற்றோர் இந்துக்கள். அதுவே எங்களை (ஜே.டி.வான்ஸ்-உஷா தம்பதி) 3 குழந்தைகளுக்கும் நல்ல பெற்றோராகவும், நல்ல மனிதர்களாகவும் மாற்றியது. அவற்றை எனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்தேன். உண்மையில், எனது கணவர் ஜே.டி.வான்ஸ் எதையோ தேடுகிறார் எனத் தெரியும். இதுதான் அவருக்கு சரியானதாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். நாங்கள் இருவேறு மத நம்பிக்கையில் வாழ்ந்தாலும், எங்களது 3 குழந்தைகளையும் அவர்களின் இயல்புக்கேற்ப மத விஷயங்களைப் பின்பற்ற அனுமதிக்கிறோம். இதற்கு பதில் என்னவென்றால், நாங்கள் இருவரும் வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருப்போம்!’’ என்று சிரித்தபடி உஷா கூறியுள்ளார்.