தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் நகரில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருத்தலத்தில் முருகன் கந்தஸ்வாமியாய் வள்ளி தெய்வானையுடன் நமக்கு அருள்புரிகின்றார். பத்தாம் நூற்றாண்டில் இந்தக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சிவபெருமானின் சேய் ஆன முருகப் பெருமான் இங்கு அருள்பாலிப்பதால் சேயூர் என்ற பெயர் நாளடைவில் மருவி செய்யூர் என்று ஆனது. இதனால் இங்கு வணங்குபவர்களுக்குச் சேய் வரம் நிச்சயம் என்கிறார்கள்.
இந்த திருக்கோயிலைச் சுற்றி 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே ஒரு வேதாள கணம் எனும் கணக்கில் 27 வேதாளங்களுக்கான தனிச்சன்னிதி அமைக்கப் பெற்றுள்ளது. வேதாளம், பூதம் என்றாலே தீயசக்திகளாகக் கருதுவது தான் வழக்கம். ஆனால் உலகில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக, தங்களின் விருப்பங்கள், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேற வேதாளங்களுக்குப் பூஜை செய்து வழிபடும் வழக்கம் இக்கோயிலில் மட்டுமே உள்ளது.
சிவகணங்களாக விளங்கும் இவ்வேதாளங்கள் சூர சம்ஹார யுத்தத்தில் முருகப் பெருமானுக்கு உடனிருந்து தொண்டாற்றும் பேறு பெற்றவர்களாவர், கந்தர் அனுபூதியில் “வேதாள கணம் புகழ் வேலவனே” என்று அருணகிரி நாதர் பாடியதற்கேற்ப அமைந்த திருத்தலம் இது என்றே சொல்லலாம். இதைத்தவிர அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்.
அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த கந்தஸ்வாமி பெருமானைப் போற்றி சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர் கலம்பகம் ஆகியவை இயற்றியுள்ளார். மற்றும் சேறை கவிராயப்பிள்ளை என்பவர் சேயூர் முருகன் உரை, முருகதாஸ ஸ்வாமிகள் சேயூர் முருகன் பதிகக்கோவை எழுதியுள்ளார்கள். சிவப்பிரகாச சுவாமிகளும் நெஞ்சுவிடு தூது என்ற நூலை எழுதியுள்ளார்.
ஸ்தல புராணம்:
புராணங்களின்படி, முருகப்பெருமான், சிக்கலில், பார்வதி தேவியிடம் இருந்து சூரபத்மனை அழிப்பதற்காக வேல் வாங்கி, திருச்செந்தூரில் போரிட்டார். இந்தப் போரின்போது, சிவனின் பூத கணங்களும் போரில் ஈடுபட்டன. முருகப்பெருமான் சூரபத்மனையும் அவனது மகன் இரண்யனையும் வதம் செய்ததால் தோஷம் ஏற்பட்ட முருகப் பெருமான் இந்த தலத்திற்கு வந்து, தனது தந்தை சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தார். முருகன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம், சோமநாதர் என அழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் செய்ய நினைத்தார். அவருடன் இந்த தலத்திலேயே தங்க விருப்பம் கொண்ட பூத கணங்கள், பக்தர்கள் தங்களை வழிபட அருள் செய்ய வேண்டும் எனப் பைரவரிடம் வேண்டின. பூத கணங்களின் (வேதாளங்களின்) கோரிக்கைகளை ஏற்ற பைரவரும் அவைகள் இங்கு வழிபாட்டிற்கு உரியவையாக இருக்க அருள் செய்தார்.
இங்கு 27 பூதகணங்கள் 27நட்சத்திரங்களுக்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளன. சிவபெருமான் அவரது மகனால் (தமிழில் சேய்) வழிபட்டதால் , அந்த இடம் சேயூர் என்று அழைக்கப்பட்டது. பின், நாளடைவில் மருவி செய்யூர் என்று ஆனது.
ஸ்தல வரலாறு:
இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது என்பது கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகின்றது. இதனை வளவன் என்ற சோழ மன்னன் ஆளப்பட்டதால் இந்த இடம் வளவபுரி என்று அழைக்கப்பட்டது. அருணகிரிப் பெருமானும் 'வளவாபுரி வாழ் மயில்வாகனப் பெருமாளே' என்று இப்பெயரினைக் கொண்டே திருப்புகழில் போற்றியுள்ளார். 15ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகள்,ஆண்ட அரசர்களின் அலுவலகத்தில் முஸ்லிம்கள் பணியமர்த்தப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. முஸ்லீம்களால் கோயிலுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மீனாட்சி அம்மன் சந்நிதி 1937 ஆம் ஆண்டில் ஒரு பக்தரால் கட்டப்பட்டுள்ளது.
ஸ்தல அமைப்பு:
கந்தஸ்வாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த செய்யூர் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலின் நுழைவாயிலுக்குக் கோபுரம் கிடையாது . இந்த கோயில் தெற்கு நோக்கியும், அதன் மூலஸ்தானம் கிழக்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் கிழக்குப் பகுதியில் மற்றொரு நுழைவாயில் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கர்ப்பகிரகத்தில் மூலவர் கந்தஸ்வாமி வள்ளி-தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இருபுறமும் சுவீரன், சுஜனன் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.
கோவிலின் பிரதான வாயிலில் நுழைந்ததும் வெளிப்பிரகாரம் காணப்படுகிறது. இந்த வெளிப்பிரகாரத்தில் இருந்து முன் மண்டபத்தில் நுழைந்ததும், இடப்புறத்தில் ஸ்ரீ சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறை இருப்பதையும் காணலாம். இச்சன்னதியின் முன் நந்தி தேவரும், இருபுறம் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர்.
தெற்கு வாயில் மூலமாக உட்பிரகாரத்தை அடைந்து முருகனைத் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தை நோக்கியவாறு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், மயில் வாகனம் மற்றும் துவஜ ஸ்தம்பம் ஆகியவற்றைக் காணலாம். துவஜ ஸ்தம்பத்திற்குப் பின்னால் ஒரு உயரமான கல் தீப ஸ்தம்பமும் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூன்று நாட்கள் இந்த தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. கிழக்கு வாயிலின் மூலமும் நாம் உட்பிரகாரத்தையும், தீபாராதனை மண்டபத்தையும் அடையலாம். கருவறை வெளிப்புறத்தில் இருபுறங்களிலும் முறையே துவார கணபதியும், துவார லட்சுமியும் காட்சி தருகின்றனர். கந்தஸ்வாமிக்கு முன்னால் 5 அடி உயரக் கல்லாலான வேல் அமைந்துள்ளது.
நிருத்ய ஸ்கந்தா, பிரம்மா சாஸ்தா, சிவ குருநாதர், பால ஸ்கந்தா மற்றும் புலிந்தர் ஆகிய கோஷ்ட மூர்த்திகள் கருவறைச் சுவரைச் சுற்றி அமைந்துள்ளன. மேலும் சிவத்தலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் ஆலயத்தில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியன் குஹா சூரியன் என்று அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய கோபுர வாசல் வழியாகத் தீபாராதனை மண்டபத்திற்குள் பிரவேசிப்போருக்குத் தரிசனம் தர ஆறுமுக சுவாமியும் அமர்ந்துள்ளார். வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப்படுகின்றன. துவஜஸ்தம்பத்தின் வடக்குப் பகுதியில் மயில் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தெற்கு நோக்கிய வள்ளி மற்றும் தேவசேனா சந்நிதிகள் தனித்தனியாக உள்ளன. இருவரும் அந்தந்த சன்னதிகளில் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். மயில் மண்டபத்தின் முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளது. 1947-ஆம் ஆண்டுவரை இம்மண்டபத்தில் திருவிழாக்களின்போது சகலவிதமான வாத்திய கருவிகளும் இசைக்கப்பட்டதுடன் நடன நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்கு பின்னால் நவக்கிரகங்களுக்கு எனத் தனி சந்நிதியும் உள்ளது. இப்புண்ணிய தலத்தில் அருணகிரி நாதருக்குச் சிலையும், அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுகின்றன.
இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூதகண வேதாளங்கள் அமைந்திருப்பது ஒரு இன்றியமையாத தனிச்சிறப்பாகும். இந்த வேதாளங்கள் அனைத்தும் பைரவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஸ்தல தீர்த்தம் செட்டிக்குளம். இது கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது.
ஸ்தல விருட்சங்கள் வன்னி மற்றும் கருங்காலி மரம்
ஸ்தலச் சிறப்பு:
சிவதலங்களில் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக
விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்(விஷ்ணு), பிரம்மா, துர்க்கையைத் தான் காண முடியும். ஆனால் இந்த கோவிலில், இந்த தெய்வங்களுக்குப் பதிலாக முருகப்பெருமானின் ஐந்து வெவ்வேறு வடிவங்கள் உள்ளன .
விநாயகப் பெருமானுக்குப் பதிலாக நிருத்த ஸ்கந்தன் (நடன முருகன்) இருக்கிறார்.
தட்சிணாமூர்த்திக்குப் பதிலாக சிவகுரு நாதர் (சிவத்தைக் கற்பிப்பவர்)
லிங்கோத்பவர்(விஷ்ணு) பதிலாகப் பால ஸ்கந்தா (குழந்தை சண்முகர்)
பிரம்மாவுக்குப் பதிலாகப் பிரம்மா சாஸ்தா (பிரம்மாவிலிருந்து உருவாக்கப்பட்டவர்)
மற்றும் துர்க்கைக்குப் பதிலாக புலிந்தர் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) இடம் பெற்றுள்ளனர்.
இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குஹா சூரியன் என்று அழைக்கப்படுகிறார். கோயிலினுள் இடதுபுறத்தில் பிரதான கணபதியைத் தரிசிக்கலாம். பொதுவாகக் கணபதியின் மேற்கரத்தில் பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்கள் காணப்படும். ஆனால், இங்கு இடது மேற்கரத்தில் ஜபமாலையுடன் அவர் வீற்றிருக்கிறார். கணபதி சந்நிதிக்குள் ஒரு சிறிய அறை உள்ளது. முற்காலத்தில் சித்தர் ஒருவர் அந்த அறையில் மரகதலிங்கத்தை வைத்து முறையாக வழிபட்டதாகவும், அந்த மரகதலிங்கம் இருந்த இடத்தில் தற்போது ஒரு அணையா விளக்கு ஏற்றப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. இந்த விளக்கை வெளிப்புறத்திலிருந்து ஒரு சிறிய துளை வழியாகக் காணமுடிகிறது.
வேண்டுதல் நிறைவேற வேதாள பூஜை:
இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ள 27 வேதாளங்களும்(பூதகணங்கள்) 27 நட்சத்திரங்களுக்குரியவை ஆகும். இந்த வேதாளங்கள் அனைத்தும் பைரவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவை. அதனால் பைரவருக்கு உரியத் தேய்பிறை அஷ்டமியின் போது, பக்தர்கள் தங்கள் நட்சத்திரத்தை (பிறந்த நட்சத்திரம்) குறிக்கும் வேதாளத்தை வணங்குகிறார்கள். செவ்வரளி மலர்களால் வேதாளத்திற்குச் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. இறுதியாகப் பைரவருக்கு 8 விதமான மலர்களால் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது. பைரவர் வேதாளத்தின் அதிபதியாகக் கருதப்படுவதால், இந்த நாள் பைரவர் வழிபாட்டிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நாளில் பைரவர் மற்றும் வேதாளங்களை வழிபட்டால், பைரவர் முருகப்பெருமானுக்குத் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பார் என்றும், முருகப்பெருமானும் தம் விருப்பங்களை நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இப்பூஜை மூலம் பயனடைந்தோர் அநேகர். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பல மக்கள் இக்கோவிலை நாடி வருவதே இதற்கு ஒரு நல்ல சான்றாகும்.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டி-சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், கார்த்திகை பைரவாஷ்டமி, தைப்பூசம், பங்குனி உத்தர திருக்கல்யாணம், ஆகியவை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.
தேய்பிறை அஷ்டமி அன்று மாலை 'வேதாள பூஜை' விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்குப் பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
செய்யூர் கந்தசாமியை மனம் உருக வேண்டினால் நோய் நொடிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்தில் முன்னேற்றம், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுதல், திருமணம் குழந்தைப் பேறு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் ஒரு பிரார்த்தனை சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் மிகச் சிறந்த பரிகார ஸ்தலமாக இது விளங்குகிறது. தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பக்தர்கள் இங்குள்ள முருகனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும். கோயில் நேரங்கள் திருவிழாவிற்கு ஏற்ப மாறுபடும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
செய்யூர் கந்தஸ்வாமி திருக்கோயில் மதுராந்தகத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. செய்யூரில் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் கோயில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து நேரடியாக செய்யூருக்குப் பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து கிழிக்குக்கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூரைத் தாண்டி எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டால், மூன்று கி.மீ. தொலைவில் செய்யூரை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு..
சேய் வரம் அளிக்கும் (சேயூர்) செய்யூர் முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/E03fzBhBX7Y?si=2_MMQb-Q9ABw0Qhk
Leave a comment
Upload