தொடர்கள்
கதை
ஜருஹண்டி, ஜருஹண்டி ! -ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20240620001656540.jpeg

“என்ன கோபாலன் திருப்பதிக்கு வரேயா? “என்று கோபாலன் வீட்டுத் திண்ணையில் உக்கார்ந்து கொண்டே கேட்டார் வரதராஜன்.

“திருப்பதிக்கு வரணும் தான் ஆசை. ஆனா பிராப்தம் இருக்கனுமே.!”

“பிராப்தம் வந்துடுச்சன்னு நினைச்சுகோ ‘.

“என்ன சொல்றே வரது!”

“பத்து நாள் திருமலை வாசம் பெருமாள் சேவை. தங்கும் இடம் ,சாப்பாடு எல்லாமே .ஃப்ரீ“

“வாலண்டியர்ஸ் நிறையப் பேரை தேவஸ்தானம் கூப்பிட்டு இருக்காங்க. அவர்கள் வேலை லட்டு கொடுக்கிற கவுண்டர் இடத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது.,

அன்னதான கூடம்,மற்றப்படிபெருமாள் சேவிக்கிற இடத்தில் தன்மையாகப் பேசி, வரும் பக்தர்களை “ ஜருகண்டி ஜருகண்டி “ என்று பேசி அனுப்பணும். ; இப்படி எல்லா இடத்திலேயேயும் மாத்தி மாத்தி, பத்து நாளைக்கு வேலை செய்யணும். “

“ஏற்கனவே நம்ம காலனியில் இருந்து எட்டு பேர் தயாராக இருக்கோம். ஒன் ஞாபகம் வந்தது. அதான் சம்மதம் கேட்க வந்தேன்.”

இவர்கள் பேச்சை கேட்ட ருக்மணி ,கோபாலன் மனைவி கையில் கொண்டு வந்த காஃபியை கொடுத்துக் கொண்டே “நானும் வரலாமா?”

“பேஷா வரலாம். தேவஸ்தானத்தின் சட்ட விதிகள் உட்பட்டு தான் நீங்க இரண்டு பேரும் இருக்கேள்”.

“இது ஆடி மாசம் கல்யாணம் சமையல் ஆர்டர் ஏதும் இருக்காது ஒங்களுக்கும் வேலை இருக்காது .”

“விசராந்தியா பெருமாள் தரிசனம் கொடுத்து வைக்கணும்.”

“ஆமாம் வரது !நீ சொல்றதும் சரிதான். கல்யாண வேலைக்குப் போற ,நாங்க இரண்டு பேரும் ஒன் புண்ணியத்தில் கிளம்பத் தயாரா இருக்கோம்”.

கோபாலன் சரி,ருக்மணியும் சரி, திருமலைக்குப் போய் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு.

அவன் சின்னக் குழந்தையா இருந்தப்ப ,எல்லோர் வீட்டுக்கும் திருப்பதி கிளம்பறேன்னு சொன்னதும், அவர்கள் கொடுக்கும் நிதி உதவியில், திருமலைக்கு அப்பா அம்மாவுடன் நடந்து போயிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது

அதற்குப் பிறகு ஓரிரு முறை மனைவியுடன் போய் விட்டு வந்ததோடு சரி..

இப்ப அப்படி இல்லை! ஆட்டோ பஸ் ,கார் என்று ஏகப்பட்ட வாகன வசதிகள். மேலே போகப் போகப் பிரமாண்டமான அனுமன் ,கீதா உபதேசம் செய்யும் கண்ணன் ,அர்ஜுன் சிலைகள் ரம்மியமான பார்க் எல்லாம் பார்க்கலாம். அதே சமயம் சன்னதியில் அலை மோதும் கூட்டத்தில் இடிபட்டு ,மணிக்கணக்காகக் காத்திருந்து அரை நிமிசம் கூடப் பெருமாளை கண் குளிர சேவிக்க விடாமல் ஜருகண்டி ஜருகண்டி என்று விரட்டுவதும் ,லட்டுப் பிரசாதம் வாங்குவதும் மனதை விட்டு அகலாத அனுபவங்கள்.

இப்ப அப்படி இருக்காது; நிறையத் தடவை பெருமாளை சேவிக்கலாம்; கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டே. என்று கோபாலன் நினைத்தார்.

ருக்மணி கிட்ட இப்படிச் சொல்லவும் அவளும் அதை ஆமோதித்துச் சந்தோஷப் பட்டாள்.

கோபாலனுக்குப் பூர்விகம் மன்னார்குடி பக்கம். அவன் அப்பா அந்தச் சின்னக் கிராமத்தில், அர்ச்சகர்.

கோயிலுக்குக் கூட்டம் அந்தக் கிராமத்தில் வராது. ஒரு வேளை பூஜை மட்டும் தான்.

பக்கத்தில் பத்து கிலோ மீட்டரில் இருக்கும் ஶ்ரீ ராஜகோபால ஸ்வாமி நித்தம் உற்சவம். கண்டுருளுகிறார்.. அதுவும் வெண்ணைதாழி உற்சவம் சேவிக்க எவ்வளவு மக்கள். கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஆனால் அதே பெயர் கொண்ட இந்தப் பெருமாளுக்கு, இங்கே ஒரு வேளை போஜனம்; அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில். கிடைப்பதே ஆபூர்வமாக இருக்கு.

அந்த ஒரு வேளை பிரசாதம் பெருமாளுக்குத் தளிமிசை செய்யக் கூட மிகவும் சிரம பட்டவர் கோபாலின் அப்பா.

தன் காலத்துக்குப் பிறகு தன் பையன் கோபாலன் இந்தக் கோயிலில் கைங்கர்யம் செய்வான் என்ற நம்பிக்கையில் பெருமாள் திரு வாரதன கிராமம்,ஆகம முறை அவனுக்குச் சொல்லி கொடுத்து இருந்தார்.

எஸ்.எஸ்.எல் சி படிப்பு முடிந்தவுடன் ,வேலை நிமித்தம் சென்னை வந்த கோபாலனுக்குச் சரியான வேலை கிடைக்காமல் போனது.ஜீவனத்துக்குக் கல்யாண வேலைக்குப் போனவர், அங்குக் காய்கறி நறுக்க வந்த ருக்மணியைக் கல்யாணம் செய்து கொண்டார்.

.அப்பா இறப்புக்கு போய் விட்டு வந்தவர். அப்புறம் கிராம பக்கமே போகவில்லை. பூர்வீக வீடு பின் பகுதி இடிந்த நிலையில்.

கோபாலன் ஊர் பக்கம் போகாததால் பக்கத்துக் கிராமம் அர்ச்சகர் தான் இந்தக் கோயிலையும் பார்த்து வருகிறார் ;ஆனாலும் அவரும் வயதானவர் தான். அவராலும் முடியவில்லை. தன்னால் முடியவில்லை வேறு ஆள் பார்த்துக்கொள்ளுங்கள் என்ற ஊர் பஞ்சாயத்தில் சொல்லி வந்தாலும் கோயில் அர்ச்சகர் வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமமாக இருந்தது.

அந்தக் கிராமத்தின் அக்ரஹாரத்தில் இருந்த வீடுகளை விற்று விட்டு நிறையப் பேர் மும்பை சென்னை பெங்களூரு என்று புலம் பெயர்ந்த நிலையில், இப்போது இரண்டு ஸ்மார்தா வீடும்,சிவன்கோயில் பூஜை செய்யும் குருக்கள் வீடு மட்டுமே மிஞ்சி இருந்தன.

குருக்கள் மாமியும் ,மற்ற இரண்டு ஸ்மார்த்த குடும்பமும் பெருமாள் கோயிலுக்குத் தீபம் ஏற்றி வருகின்றனர்.

.கோபாலனுக்குத் தன் சொந்த கிராம பெருமாள் மீது அலாதி பிரியம் உண்டு. ஆனாலும் போக முடியாத சூழ்நிலை.

இங்கேயே சரியான வருமானம் இல்லாத போது அங்குப் போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது?. சம்பாதித்த பணத்தில் ஒரே பெண்ணை நல்ல மாப்பிள்ளைக்குகு டெல்லியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்த கையோடு இந்தக் காலனியில் சொற்ப வாடகைக்கு இருந்து வருகிறார்.

“மறுநாள் காலை பத்து மணிக்கு கிளம்ப வேண்டும்.ஒங்க இரண்டு பேருக்கும், நான் டிக்கெட் எடுத்துள்ளேன். துணி மணிகளைப் பேக் பண்ணி ரெடியா இருங்க “

என்று சொல்லிவிட்டுப் போனார் வரது.

இதோ திருமலைக்குப் போயாகி விட்டது. இவர்கள் அதிர்ஷ்டம் இரண்டு பேருக்கும் முதல் நாளேசன்னதியில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் வேலை .

கூட்டம் கண்களை மறைக்க எம்பி எம்பி சேவிக்க முயற்சிக்கிறார் கோபாலன். இதென்ன ஆச்சர்யம் .நெடிய உருவமான ஶ்ரீனிவாச பெருமாள் தெரியவில்லையே?

இவ்வளவு நேரம் “ஜருகண்டி ஜருகண்டி “என்று சொல்லிக்கொண்டு இருந்த சத்தம் கேட்கவில்லையே?. சுற்றிலும் சேவார்த்திகள் கூட்டமும் “ கோவிந்தா கோவிந்தா” என்ற இரைச்சலும் காண வில்லையே.?!

திருமலை கர்ப்ப கிரகமாகத் தெரியவில்லை; கோபாலன் கண்ணுக்கு.ஆனால் தனக்கு இருண்ட கர்ப்பக் கிரஹம். மின் மினி பூச்சி மாதிரி ஒரே விளக்கு. நறுமணத்துக்குப் பதில் வெளவால் புழுக்கைகளின் நாற்றம்; .இவர் திருமலை ஶ்ரீனிவாசன் இல்லை !இல்லை!

அப்போ இது யாரு? பொறி தட்டிய உணர்வு.கோபாலா! கோபாலா! என்னை மன்னிச்சிடு! மன்னிச்சிடு!

நான், நாளைக்கே உனக்குக் கைங்கர்யம் செய்ய வரேன்.!உடம்பெல்லாம் இனம் புரியாத சிலிர்ப்பு. திடீரென எழுந்து கொண்டார். முகத்தில் பதட்டம் தெரிந்தது.

“என்னங்க ? என்ன ஆச்சு ஒங்களுக்கு.?”

அந்த அதிகாலையில் நடந்த விபரத்தை ருக்மணியடம் சொன்னார் கோபாலன்.

“கஷ்டமோ நஷ்டமோ நாமே சொந்த கிராமத்துக்குப் போவோம்.நிச்சயம் கோபாலன் படி அளப்பார்.”

விடிந்ததும் விடியாத பொழுதில், வரதுவிடம் நடந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு, கிராமம் சேரும் போது மாலை 5 மணி ஆகி விட்டது.

தன் பூர்வீக வீட்டை சுத்தம் செய்கிற வரைக்கும், இரண்டு நாள் ஒங்க வீட்டில் தங்கி கொள்கிறேன் ,என்று சிவன்கோயில் குருக்களிடம் சொல்லிவிட்டு,

தீர்த்தமாடி வேஷ்டி உடுத்தி திருமண் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் போன கோபாலன் ,” கோபாலா என்னப்பனே” என்று சாஷ்டங்கமாகச் சேவித்து விட்டுக் கண்களை மூடி திறந்தார்.

.அங்கே …..

நின்ற கோலத்தில் பெருமாள் ஶ்ரீனிவாசன்சேவையானார் !.

ஆனால் இது என்னஆச்சர்யம் !

இங்கே சேவையாவது திருமலை ஶ்ரீனிவாசன் அல்லவோ!. கோபாலன் உடலில் ஒரு புல்லரிப்பு .

இப்போது.”ஜருகண்டி ஜருகண்டி “என்கிற சப்தம் துல்லியமாகக் கேட்டது. கோபாலனுக்கு…..