தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 18 -பித்தன் வெங்கட்ராஜ்

20240620183551803.jpeg

வானம் எனக்கொரு போதிமரம்!

நாளும் எனக்கது சேதிதரும்!

-கவிப்பேரரசு வைரமுத்து

ஓர் அற்புதமான படத்தைப் பூமிக்கு சமீபத்தில் அனுப்பியுள்ளது நாசாவின் 'ஜேம்ஸ் வெப் வானியல் தொலைநோக்கி' (James Webb space telescope). பார்ப்பதற்கு ஒரு பென்குயினும் அதன் முட்டையும் அருகருகே காணப்படுவது போன்ற அப்படத்தில் இரண்டு விண்மீன் மண்டலங்கள் (Galaxies) ஒன்றோடொன்று மோதிக்கொண்டு, பின் பல நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டிருப்பது போன்று காணப்படுகின்றது. விண்ணுக்கு அனுப்பி ஈராண்டுகள் நிறைவு செய்வதைக் கொண்டாடும் விதமாக அந்த தொலைநோக்கி இந்த அரிய படத்தைப்பதிவு செய்துள்ளது

20240619153918420.jpg

இந்நிகழ்வு இப்போதிருந்து சுமார் 25 மில்லியன் முதல் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவிக்கிறது நாசா. காலத்தைக் கடந்து பார்த்து, பல அற்புதமான படங்களை நமக்குப் பகிர்ந்துகொண்டிருக்கும் இந்த ஜேம்ஸ் வெப் வானியல் தொலைநோக்கிதான் நமக்கு இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தை வெகுவிரைவில் காட்டப்போகிறது என்று அறிவியலாளர்கள் பெரிதும் நம்புகின்றனர். நானும்தான்.

இந்த அண்ட வெளியில் பூமியைத் தாண்டி இருக்கும் மற்ற கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றி ஆராய்வது வானியல் என்றால், இந்தப் பிரபஞ்சம் அல்லது அண்டம் எப்படித் தோன்றியது என்பது குறித்து ஆராய்வது பிரபஞ்சவியல் அல்லது அண்டவியல் ஆகும். குறிப்பாக இந்த அண்டவியல் என்னும் ஆய்வுத் துறை அண்மையில் 17ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டது. அதாவது, 17ஆம் நூற்றாண்டில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகள் நடக்கத் தொடங்கின.

ஆனால், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கீழ்க்காணும் இந்தத் திருவாசகப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்'

-திருவாசகம் - திருவண்- வரிகள்: 1-6

இந்த அண்டமானது அளவிலடங்காத பெரியதாயும், அற்புதமான காட்சியாயும், ஓர் உருண்டையான ஒளிக்குவியலாயும் இருக்கிறது. அதில் நூற்றொரு கோடிக்கும் மேலாக எண்ணிலடங்காத கோளங்கள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன என்கிறார் மாணிக்கவாசகர். மேலும், வீட்டினுள் நுழையும் சூரிய ஒளியில் காணும் சிறு துகள்போலத்தான் இவ்வண்டத்தில் ஒவ்வொரு கோளமும் என்கிறார்.

பொதுவாகவே, மேற்குநாடுகளில் வானியல் ஆய்வுகள் அறிவியல் ரீதியாகத் தொடங்குவதற்கு முன்னரே நம் தமிழகத்தில் வான் பற்றிய அறிவு இருந்தது எனலாம். அந்திக்குப் பிறகு பாக்கியலட்சுமியோ, பிக் பாஸோ, ஐபிஎல்லோ இல்லை அந்நாளில். இரவில் வானத்தை வெறுங்கண்களால் பார்த்தே வானியல் அறிவுபெற்றிருந்தனர் நம் முன்னோர்.

சந்திரனில் நிறையப் பள்ளங்கள் இருக்கின்றன என்று வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்தனர்.

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. -குறள் 1117.

என்று பாடினார் வள்ளுவர். அந்த நிலாவில்கூட நிறையப் பள்ளங்கள் உண்டு. காதலியின் முகத்தில் சிறு மறுகூடக் கிடையாது என்பது பொருள்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் Geocentric theory எனும் புவிமையக் கோட்பாட்டை முன்வைத்தார் தாலமி. அதன்படி, பூமி நிலையானது. சூரியன் உட்பட மற்ற கோள்களனைத்தும் பூமியைச் சுற்றிவருகின்றன என்றார்.

20240619154420526.jpg

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தைச் சேர்ந்த நம் வள்ளுவர் 'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' என்றார். உலகம் சுழல்கிறது என்று முதலில் கூறியவர் நம் வள்ளுவர்தான். (கலிலியோ சொன்னது 17ஆம் நூற்றாண்டு)

இப்படி, நம் சங்க இலக்கியப் பாடல்கள் நெடுகிலும் நம் தமிழர்களின் வானியல் மற்றும் அண்டவியல் அறிவு கொட்டிக் கிடக்கிறது.

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'ஹெய்ன்ரிச் வில்ஹெல்ம் ஒல்பர்ஸ்' என்னும் ஜெர்மானிய வானியல் ஆய்வாளர் சொன்ன ஒரு கூற்று 'ஒல்பர்ஸ் முரண்' (Olber's paradox) என்று அழைக்கப்படுகிறது. அது என்னவென்றால், 'நமது பிரபஞ்சம் நிலையானதும் சீரானதும் மற்றும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கொண்டதும் என்றால், இரவில் நாம் பூமியிருந்து பார்க்கும்போது வானம் இருட்டாக இல்லாமல் வான்முழுதும் துளி இடைவெளியுமின்றி நட்சத்திரங்கள் நிறைந்து மிகுந்த ஒளியுடன்தான் இருக்கவேண்டும்' என்பதாகும்.

அப்படியே கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலைப் பார்ப்போம்.

'இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று

வானம் மீன்பல பூப்பின் ஆனாது

ஒருவழிக் கருவழி யின்றிப்

பெருவெள் என்னில் பிழையாது மன்னே'

-புறம் 129- வரிகள்: 6-9

ஆய்அண்டிரன் என்னும் மன்னனின் கொடைத்தன்மை இவ்வரிகளில் கூறப்பட்டுள்ளது. வானத்தில் சிறிது கறுமையும் இல்லாமல் பல வீண்மீன்கள் தோன்றி ஒரு பேரொளியாகி அந்த இரவுவானத்தை வெண்மையாக்கினாலும், அந்த விண்மீன்களின் எண்ணிக்கைகூட இரப்போர்க்கு அவன் கொடுத்த யானைகளின் எண்ணிக்கைக்கு ஈடாகாது என்கிறார் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

Olber's paradox சொல்லிய காட்சியும், நம் புலவர் காட்டிய காட்சியும் ஒன்றுதானே!

20240619154332296.jpg

இந்த முரணுக்கான பதிலை, புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர் ‘எட்கர் ஆலன் போ’, 'பிரபஞ்சம் விரிவடைகிறது. அதனால், அந்த நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்தடைவதில் தாமதம் ஏற்படுகிறது' என்று கூறி முடித்துவைத்தார். இதே பிரபஞ்ச விரிவைத்தான் திருவண்டப்பகுதியில் மாணிக்கவாசகர் சொன்னதை மேலே பார்த்தோம்.

ஆக, 19ஆம் நூற்றாண்டு அறிவியல் சிந்தனையான Olber's paradox ஐ சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தன் கற்பனையில் கண்ட நம் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்க்கும், அண்டவிரிவை ஒன்பதாம் நூற்றாண்டிலேயே சொன்ன மாணிக்கவாசகருக்கும் ஒரு தமிழ் முத்தம் தந்தோம்.

அவர்கட்கும் நமக்கும் யாவர்க்கும் வான்நிறைந்த ஒளியாய் விரிவடைந்துகொண்டே இருக்கும் நம் தமிழுக்கு இது பதினெட்டாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.