தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! -  புதுவை ரா. ரஜனி  ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன் 13. கடைசி வாரம்.

20240606075044122.jpg

சுப்புசாமியும் ரஹ்மானும் ஸ்டுடியோ அறையில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'டொக்...டொக்...!'

பி. ஏ. கதவை நாசூக்காய் தட்டிவிட்டு, உள்ளே வந்தார்.

"சார், மணி சார் வந்திருக்காங்க...!"

"நம்ம டைரக்டர் வந்திருக்கார்...!" என்றபடி ரஹ்மான் அவரை வரவேற்க வாசலுக்குச் சென்றார்.

தன்னைக் குறித்த குறிப்புகளையே அறியாதவர் சுப்புசாமி. மணிரத்னம் குறித்து எப்படி அறிவார்? 'யாரோ மணி என்ற டைரக்டர் வருகிறார்' என்று முடிவு செய்து கொண்டு, மூக்கை நிமிண்டி விட்டுக் கொண்டார். மூக்கோ செல்லமாய் "வேண்டும் வேண்டும்!" என்று கேட்டது. மூக்கதனைத் தடவியபடி ஜிப்பாவிலிருந்து பொடி டப்பியை எடுத்தார், திறந்தார், இழுத்தார்.

"ஹ... ஹ...ஹா...அக்... சூ...!"

"என்ன மியூசிக் போர்ட் ஆன்லே இருக்கா?" என்று கேட்டபடி நுழைந்தார் மணிரத்னம்.

"ஓ, தட் ஈஸ் சம்திங் ஆஸம்...நீங்க ஓகே சொன்ன சவுண்ட் என்ஜினியர் மிஸ்டர் சுப்புசாமி. ஏ சவுண்ட் பார்ட்டி ஃபிரம் சென்னை, மணி சார்...!"

கொஞ்சமாய் சிரித்து, குறுந்தாடியைச் சொரிந்துகொண்ட டைரக்டர், "ஓ, நைஸ் டூ மீட் யூ...!" என்றார்.

தாத்தா கை குலுக்கினார்.

'என்னைப் பார்த்து பலர் புல்லரித்துக் கொண்டிருக்க, இந்தப் பெரியவர் என்னைப்பற்றி அறியாது... தன்னை அறிந்தவர் போலும்...!' என்று மணிரத்னம் எண்ணினார்.

ரஹ்மான் தான் ரெக்கார்டிங் செய்த பாடலைப் போட்டுக் காட்டினார். பாதி பாடலைக் கேட்ட டைரக்டர், "வெரி இண்ட்ரஸ்டிங். மியூசிக் அண்ட் ஸ்பெஷல் எஃபெக்ட் ஃபெண்டாஸ்டிக். பட், ஸ்ருதி ஹாசன் சீம்ஸ் டூ பீ மாடர்டன். ஹீரோயின் திருநெல்வேலி. கசகஸ்தான்லே தீவிரவாதிங்ககிட்டே மாட்டிக்கிறா. எனக்கு கொஞ்சம் நேடிவிடி வேணும்...!"

"தேர் யூ ஆர்...! கவலை வேண்டாம். எங்களிடம் ருக்குமணி என்ற பாடகி இருக்கிறார். அவரைப் பாட வைத்து விடுகிறேன்...!"

"ஸ்ருதி தவறாக எண்ணிவிடக் கூடாது...!"

"நோ பிராப்ளம். ஆல்பத்தில் சேர்த்து விட்டால் போகிறது...!" என்றார் ரஹ்மான்.

*****

தாத்தா வாழ்க்கையில் செய்த ஒரே உருப்படியான காரியம் என்று நினைத்தான் குண்டு ராஜா.

தன் ருக்கு பாடகியாய் ஆகிவிட்டாள்!

ரெக்கார்டிங் தியேட்டருக்கு கீதாப்பாட்டியை அழைத்து வந்ததுதான் மிகத் தவறாகப் போயிற்று.

அவள் கேட்ட இரண்டு முக்கியமான கேள்விகள் பின்வருமாறு:

1."என்னடா கருமப் பாட்டு இது? கொல்லைப் பக்கம் போகிறப்போ முக்குற மாதிரி?"

2."ஏண்டி ருக்கு, பாடினாயே பணம் கொடுத்தானாடி...?"

அவளை அப்படியே பொட்டலம் கட்டிக் கொண்டு வராத குறையாக அள்ளிக் கொண்டு வெளியே வந்த குண்டு, ஓர் ஆட்டோக்காரன்வசம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையில், உலக இயக்குனர் மணிரத்னம் வெளியிட, முதல் பாடல் வெளியிடப்பட்டது!

பாடலைப் பற்றி, பிரத்யேக இசை பற்றி, ருக்குவின் முதல் பிரசவம்... மன்னிக்கவும் பிரவேசம் பற்றி புகழ் மாலைகள். மேடையில் ரஹ்மான், சுப்புசாமி, ருக்குமணி ஒளி வெள்ளத்தில்...!

தொட்டி, பட்டியெங்கும் இசைப்புயலின் 'அக்சூ' பாடல் பிரசித்தி அடைந்தது...!

*****

பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தில் மாதாந்திர ஸ்பெஷல் நிகழ்ச்சியில்...

இசைஞர் சுப்புசாமி மற்றும் பாடகி ருக்குமணி ஆகியோரைக் கவுரவிக்கும் நிகழ்ச்சியை செகரட்டரி அகல்யா சந்தானம், பொறாமைக் கிழவி ஶ்ரீமதி கண்ணாம்பாள் தூண்டுதலின்பேரில் அமர்க்களமாய் ஏற்பாடு செய்திருந்தாள்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிட (தொலைக்க) கோமு வர வேண்டி வந்தது. அதைக்கூட பாட்டி சகித்துக் கொண்டாள். பாராட்டு மழையில் தாத்தாவை நனைய வைப்பதுதான் படு சிரமமாக இருந்தது.

*****

இரவு.

"ஏ புள்ள கருப்பாயி...

உள்ள வந்து படு தாயி...!" என்று பாடிய சுப்புசாமி, "ஆஹா, ரஹ்மான் தம்பி எவ்வளவு அருமையா ஒரு பாட்டை போட்டிருக்கிறார்!" என்றார்.

"போதுமே உங்க அறிவு? இது ரஹ்மான் பாட்டு இல்லை. எஸ். ஏ . ராஜ்குமார் இசையமைத்த பாடல்...!" என்றாள் கோமுப்பாட்டி.

"தெரியும்டி கிழவி. உன்ன சும்மா டெஸ்ட் பண்ணி பார்க்கறதுக்காக மாத்திச் சொன்னேன்...!" என்ற தாத்தா, "பார்த்தாயா... என் சபதத்தில் நான் ஜெயிச்சிட்டேன். உன் வாயாலே என்னை இன்னைக்கு புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளி விட்டாய்...!" என்றார்.

"வேற வழி? இட் இஸ் மை பேட் டைம். உங்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? உங்களுக்கு சுக்கிர திசை அடித்துக் கொண்டிருக்கிறது. பாவம் ரஹ்மானை நீங்கள் ஆட்டி வைக்கிறீர்கள்...!"

தாத்தாவின் செல்போன், "ஒட்டகத்தைக் கட்டிக்கோ...!" என்றது.

"சைலண்ட்ஸ் பிளீஸ். இசைப்புயல் லைன்ல இருக்கார். சொல்லுங்க தம்பி. இசையில் ஏதாவது ஐயமா?" என்றார் மிடுக்காக.

மறுமுனையில் ரஹ்மான் ஒரு சந்தோஷச் செய்தியைச் சொன்னார்.

"ஓ அப்படியா! இண்டர்நேஷனல் கோல்டன் குளோப் விருதா? நம்ம பாட்டுக்கா? அருமை... அருமை...!" என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த கணவரின் வார்த்தைகள் கோமுவின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதாக இருந்தது. இருந்தாலும், தன் ஆளிடமும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள் பாட்டி.

(அட்டகாசம் முடிந்தது)