தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம் -16 - பொன் ஐஸ்வர்யா

20240604181432661.jpg

பொருளாதார வளமும், சட்டம், ஒழுங்கும்

அமெரிக்காவை தங்கள் கனவு தேசமாகக் கருதி உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குடிபெயர்கின்றனர். இவ்வாறு அந்நாடு உலக மக்களை கவர்ந்து இழுப்பதற்குக் காரணம் அதன் பொருளாதார வளமே .

அமெரிக்க பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரமாகும் (Mixed Economy). நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் ஒரு சுதந்திர சந்தையாகவும் (Free Economy) சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஓய்வூதிய பலன்கள் போன்றவை கட்டளை பொருளாதாரமாகவும் (Command Economy) கையாளப் படுகிறது.

அமெரிக்க பொருளாதார மாதிரியின் செயல்திறன், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை வழங்குகின்ற ஆற்றல் இவை அனைத்திலும் மிகச்சிறந்த பலன்களைக் தருவதால் மக்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக வசதிகள் சிறப்பான முறையில் கிடைக்கின்றன.

சுவரை வைத்தே சித்திரம் எழுத முடியும் என்ற பழமொழிக்கு எற்ப நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், விரிவு படுத்துவதிலும், நவீனப் படுத்துவதிலும் அமெரிக்கா மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் அமைந்துள்ள பெரிய, சிறிய நகரங்கள் அனைத்திலும் வானுயர்ந்த கட்டிடங்கள், நகரங்களை இணைக்க நன்கு பராமரிக்கப்பட்ட பல்வழிச் சாலைகள், நிலையான மின்சாரம், நவீன தொலைத்தொடர்பு வசதிகள், சுகாதாரமான தண்ணீர், மாசற்ற இயற்கை சுற்றுச்சூழல் என்று எல்லா அடிப்படை கட்டமைப்புகளும் உயர்தரத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகளால்தான் அமெரிக்கா எல்லா தொழில்நுட்பத் துறைகளிலும் உலகின் முன்னோடியாய் சிறந்து விளங்குகிறது.

20240604181537997.jpg

நாடு முழுவதிலும் பரந்துபட்ட கட்டமைப்புகளை உருவாக்க மிகுந்த மூலதனம் வேண்டுமல்லவா?. அது தாராளமாகக் கிடைக்கப் பெறுவதற்கு அனுகூலமான சூழலை அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள் ஏதுவாக்கித் தருகின்றன.

உருவாக்கபட்ட கட்டமைப்புகள் அனைத்தும், முதலுக்கு மோசம் வராத வகையில், மிகுந்த கட்டுப்பாடான சுய-நிலை வணிக மாதிரிகளாக (Self-Sustaining Business Models) அமைத்து செயல்படுத்துவதுதான் வெற்றிக்கான தனிச்சிறப்பு. வணிக நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒன்றுக்கொன்று சார்புடைய நிறுவனங்கள் தாராளமாய் வளரவும் , அரசுக்கு வருமான வழிகளும் பெருகவும் Use and Pay concept. உறுதி செய்கின்றன .

அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு கடுமையானதாகும். மக்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், விதிமுறைகள், சமூக வழிமுறைகள் எல்லாம் மிகவும் தெளிவாக எளிமையாக வகுக்கப் பட்டுள்ளன. கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆங்காங்கே தெளிவாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றை புரிந்து கொண்டு தவறாது பின்பற்றி எங்கும் எப்பொழுதும் கட்டுப்பாடுடன் நடப்பது ஒவ்வொருவரின் கடமை.

சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள், காவல் துறையால் கண்காணிக்கப் பட்டு தயவு தாட்சண்யமின்றி தணடிக்கப் படுகின்றனர். அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சட்டத்தை முழுமையாக மதித்து நடக்கின்றனர். இங்கு தவறு செய்து விட்டு தப்பிக்க சட்டங்களில் ஓட்டைகளும் இல்லை, தண்டனைகளைத் தளர்த்த/நிறுத்த தனிப்பட்ட எதேச்சையான அதிகாரங்களும் கிடையாது. தவறு செய்தால் உரிய தண்டனை உறுதி என்பதால் எல்லாம் திறம்பட இயங்குகின்றன.

அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் பிற நாட்டினரை விட மேன்மையானதாக இருப்பதற்கு இன்னொரு காரணம் அந்த நாட்டின் சிறந்த கல்வி முறையாகும். பள்ளிக்கல்வி மாணவர்களின் அடித்தளத்தை உறுதியாக அமைத்து விடுகிறது. கல்லூரிக் கல்வி அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் தொடர்புடைய தொழிற்கல்வியாக இருக்கிறது. எனவே மாணவர்கள் அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரிக் கல்வியை தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சியுற்று வெளியேறும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதாகிறது.

20240604181730366.jpg

அமெரிக்காவில் வேலைக்கு ஊதியம் மற்ற நாடுகளைவிட அதிகம். அமெரிக்க குடும்பங்கள் சுமார் 70 சதவீதம் சொந்த வீட்டில் வாழ்கின்றன. இங்கே ஒவ்வொருவரும் குறைந்தபட்ச புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் உழைத்தால்தான் உயர்வான வாழ்க்கை நடத்த முடியும் என்பது நாடறிந்த நடைமுறை. அப்படி இல்லையென்றால் வாழ்க்கை நடுத்தெருவில்தான் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்.

வல்லமை உள்ளோரே வாழ்வர்என்கிற உண்மை இங்கு உறுதிப்படுகிறது . ஒருவர் நிழலில் இன்னொருவர் உட்கார்ந்து வாழ்வதெல்லாம் இங்கு இயலாத காரியம். அவரவர் பிழைக்க அவரவர் உழைக்க வேண்டும் என்கிற தத்துவம் ஆழமாய் பதித்து விட்ட ஒன்று.

எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் காப்பீடு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். கார் வீடு மருத்துவம் என எதற்கும் இங்கு இன்சூரன்ஸ் கட்டாயம். அமெரிக்காவில் மருத்துவக் கட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்தது. உடம்புக்கு வந்தால் மருத்துவ செலவுகளை தனி நபரால் சமாளிக்க முடியாது. மருத்துவக் காப்பீடு இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும். மருத்துவர்கள் மருத்துவமனைகள் எல்லாம் மருத்துவக் காப்பீட்டு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..

20240604181937683.jpg

அவரவர் தேவைக்கேற்ப பாலிசிகளை தேர்வு செய்து கொள்கின்றனர். அதனால் சிக்கலில்லாத சிறந்த “ கேஷ்லெஸ் ட்ரீட்மெண்ட்” இங்கு சாத்தியம். ஒரு சாதாரண சிசேரியன் பிரசவத்திற்கு மருத்துவமனை பில் இந்திய ரூபாயில் மொத்தம் நாற்பது லட்சம் வரை வரக்கூடும். இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால் அதில் பெரும்பகுதியை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை எழுதி மருந்துச் சீட்டை நம் கையில் கொடுப்பதில்லை.அது நேரடியாக சி.வி.எஸ். போன்ற பார்மசிக்கு ஆன்லைனில் சென்றுவிடும். நாம் அருகில் உள்ள பார்மசிக்கு சென்று குறிப்பிட்டு மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

20240604181807855.jpg

தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடியாக தன்னை தக்க வைத்திருக்கும் அமெரிக்கா அதன் தலைசிறந்த பொருளாதாரக் கொள்கைகளாலும் அதை செயல்படுத்தும் உண்மையான உறுதியாலும் அறிவார்ந்த வல்லுனர்களை உலகின் எல்லா பகுதியில் இருந்தும் கவர்ந்து ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது

முற்றும்.

( இத்தொடரை எழுதியவர் திரு.பி.வி.கருணாநிதி, ITS , முதன்மை பொது மேலாளர் (ஓய்வு) , தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் ,BSNL)