தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 16 "ரேடியோ பல்புகள்" - மோகன் ஜி


20240605135009899.jpg

வானொலியில் ஒலிபரப்பாகும் நம் குரலை நாமே கேட்பது ஒரு வியப்பான அனுபவம் தான். நாம் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இருந்தாலும், நாம் பேசியதை நாமே கேட்கும் போது, நம் குரலே நமக்கு வித்தியாசமாக ஒலிக்கும்.

ஆனாலும், துறைவாரியாக பல்புகள் வாங்குவது எனக்குப் புதிதில்லையாதலால், வாங்கிய வானொலி பல்புகள் சிலவற்றை உங்களுக்காக எரிய விடுகிறேன்.

ஒரு சின்ன சீரியல் பல்பு

20240605135125388.jpg

எத்திராஜ் சாரும், ஞான சேகரன் சாரும் எங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆறுபேரை பாடல் ஒன்றைப் பயிற்றுவித்து, புதுவை வானொலி கூட்டிப் போனார்கள்.

அந்தப் பாடல் 'வைஷ்ணவ ஜனதோ'வோ, 'பாரத சமுதாயம் வாழ்கவே!'வோ என்று குழப்பம் இப்போது. குஷியாகப் போய் பாடிவிட்டு வந்தோம். ஊரெல்லாம் ரேடியோவில் பாடியதைச் சொல்லிவிட்டேன். ஒலிபரப்பாகும் தேதியை பிறகு சொல்வதாகவும் டமாரம் அடித்து விட்டேன்.

மூன்று நாள் விடுமுறைக்குப்பின் பள்ளி திறந்தவுடன், ஞானசேகரன் சாரிடம் ஒடினேன். எப்போது எங்கள் பாட்டை ஒலிபரப்புவார்கள் என்று கேட்டேன்.

''சாம்பிராணி! அடுத்த நாளே அதை ரேடியோல போட்டாங்களே! அன்னைக்கே ரேடியோ ஸ்டேஷன்ல வச்சு உங்களுக்கெல்லாம் சொன்னேனே! அப்போ எங்கயோ பராக்கு பார்த்துவிட்டு இப்போக் கேளு! மட சாம்பிராணி!" என்று புகைய விட்டார்.

"போகட்டும் போ! நாம் அதைக் கேட்டிருந்தாலும் ஆறுபேர் சேர்ந்து பாடும்போது உன் குரல் தனியா தெரிஞ்சிருக்காது. உனக்கென்னடா சிங்கக்குட்டி!" என்று அப்பா சமாதானம் செய்தார்.

அந்தப் பாட்டை நீங்க யாராவது அப்போ கேட்டிருந்தா, இப்போ எப்படி இருந்தது எனச் சொல்லவும்!

ஒரு குண்டு பல்பு

2024060513523876.jpg

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள்.

மூன்றாம் வருடம். ஒரு ஞாயிறு காலை நண்பன் சேகர் விசுவநாதன் என் கல்லூரி விடுதி அறைக்கதவைத் தட்டி என்னை எழுப்பினான். சேகர் விசுவநாதனுக்கு என் வயது தான். படித்த துறைவேறு. ஆல் இண்டியா ரேடியோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தான்.

தீண்டாமை பற்றி காந்தி, அம்பேத்கார், விவேகாநந்தர் போன்ற ஐந்து ஆளுமைகளின் கருத்தைப் பற்றி ஐந்து கல்லூரி மாணவ மாணவிகள் தனித்தனியே பேசும் நிகழ்ச்சி.

ஒரு உரைக்கு, பத்து நிமிடங்கள். நான் பேச வேண்டியது ‘தீண்டாமை பற்றிய விவேகாநந்தரின் கருத்துகளை’ என்றான்.

நான் கல்லூரியில் ‘விவேகா ஸ்டடி சர்க்கிள்’ எனும் குழுமத்தின் செயலாளர்.

‘விவேகானந்தர் பற்றியா? கூப்பிடு மோகனை! ‘என்று திரிந்த கோவில் காளை! அன்று குறிப்புகள் எடுத்து அடுத்த நாள் காலையில் நான் பேச பதிவும் ஆனது. ரொம்ப நேர்த்தியாக வந்திருப்பதாய்ப் புகழ்ந்து சேகர் விசுவநாதனும் விலகினான்.

எங்கள் கல்லூரியின் தலைவராக இருந்த இராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி அமிர்தானந்தருக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தேன். என் வளர்ச்சியில் அக்கறை காட்டி என்னை செதுக்கியவர் அவர்.

என் வானொலி உரை ஒலிபரப்பாகும் நேரத்தை அவருக்குச் சொல்லி அதைக் கேட்குமாறு கேட்டுக் கொண்டேன். எதைப் பற்றி என்று அவர் கேட்டபோது, அதை மட்டும் நான் சொல்லவில்லை.

ஒலிபரப்பானதை நண்பர்கள் விடுதி வளாகத்தில் அமர்ந்து கேட்டோம். சுவாமிஜியும் டிரான்ஸிஸ்டரை வரவழைத்து, அவர் அறையில் கேட்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன், சுவாமிஜி மகராஜின் பாராட்டை எதிர்பார்த்துப் போனவனுக்கு, அவருடைய இறுக்கமான முகம் ஏமாற்றம் அளித்தது. நான் பொறுப்பற்று நடந்து கொண்டதாகக் கடிந்து கொண்டார்.

தீண்டாமை போன்ற நுண்மையான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப்போய், சற்று தவறாகப் பேசிவிட்டால், அது பிரச்னை ஆக வாய்ப்பு அதிகம் என்பது அவர் நிலைப்பாடு.

'நான் பேசியதில் ஏதும் தவறான பகுதி இருந்ததா?'என வினவியபோது, இல்லை என்றார். ஒருவேளைத் தவறாக ஆகியிருந்தால் என்ன செய்வது என்பதாக அவர் ஆதங்கம் இருந்தது.

அதுவும், தயாரித்துப் படிக்காமல் குறிப்புகளை மட்டும் வைத்து, நேரடியாக உரையாற்றிய என் செயலை அவர் ஏற்கவே இல்லை. ‘பேசுமுன் தன்னிடம் சொல்லியிருக்கலாமே’ என்று ஆதங்கப்பட்டார்.

முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு வந்து விட்டேன். அடுத்த ஒரு வாரம் என்னை சமாதானம் செய்வதிலேயே அவர் நேரம் சென்றது.

பிறகு விடுதியில் ஒரு கூட்டமொன்றில் நான் அண்மையில் வானொலியில் பேசியதைப் பாராட்டி, என்னை ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். திட்டு வாங்கியது எனக்கு மட்டும்தானே தெரியும்?!

ஒரு டியூப் லைட்டு

20240605135448528.jpg

கடலூரில் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ‘நான் ரசித்த இலக்கியக் காட்சிகள்’ என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் பல்வேறு அழகிய கட்டங்களைப் பற்றி புதுச்சேரி வானொலியில் பேசும் வாய்ப்பமைந்தது.

சில நாட்கள் கழித்து, அங்கு பணியாற்றிய சுந்தர ஆவுடையப்பன் சாரிடமிருந்து ஒரு கடித உறை வந்தது. என் சொற்பொழிவுக்கான சன்மானத்துடன், உறை பிரிக்காமல் வானொலி நிலையத்திற்கு தபாலில் வந்த இன்னொரு கடிதமும் இருந்தது. அதன் மேலே, என் பெயரோடு, நான் உரையாற்றிய நிகழ்ச்சி விவரங்கள் குறிப்பிடப் பட்டிருந்தது.

அட! அது வாசகர் கடிதம்!. மூன்று பக்கத்துக்கு என் பேச்சை அலசிப் பாராட்டிய கடிதம். கேட்டு இன்புற்றாராம்! கடிதத்தின் கடைசியில் இருந்த பின்குறிப்பை மட்டும் உங்களுக்கு சொல்லலாமா என யோசிக்கிறேன்.

பிஏ படித்த தன் மருமகனுக்கு, ஒரு நல்ல வேலை இருந்தால் ஏற்பாடு செய்து தரும்படியும், அந்தப் பிள்ளையின் வாழ்வில் விளக்கேற்றும்படியும் அதில் வாசகர் முகவரியோடு கட்டளையிட்டிருந்தார்.

என் நண்பர் இறையன்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு கேலிசெய்தார்.

"மோகன் சார்! ஒரு வேலைக்காக எதையெல்லாம் கேட்டு இன்புற வேண்டியிருக்கு நாட்டில்!!"

20240605135523207.png