தொடர்கள்
சினிமா விமரிசனம்
கல்கி 2898 AD -தில்லைக்கரசிசம்பத்

2024060510595659.jpg

படத்தின் துவக்கமே சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் மகாபாரத கதையில் ஆரம்பித்து கிபி 2898 ல் காசி நகரத்தில் வந்து நிற்கிறது. அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன் காசி விஸ்வநாதர் கோயிலில் சிலையோடு சிலையாக 6000 வருடங்களாக அங்கே உட்கார்ந்திருக்கிறார். காசியில் நமது ஹீரோ பிரபாஸும் கால பைரவராக அங்கே அனாதையாக பிறந்து வளருகிறார். தன்னை வளர்த்த தந்தையையே ( துல்கர் சல்மான்) போட்டுக்கொடுத்து பக்கா சுயநலவாதியாக வலம் வரும் பைரவனுக்கு அணையாத ஒரு ஆசை, வானத்தில் தலைக்கீழ் பிரமீடாக மிதக்கும் காம்ப்ளெக்ஸ் எனும் பெரும் நகரத்திற்கு குடி போக வேண்டும் என்பதே.! கீழே கடல்,ஆறு , குளங்கள், மரங்கள்,புல், பூண்டு என அனைத்தும் அழிந்து, மழையே காணாமல், செவ்வாய் கிரகத்தை போல வெறும் செம்மண் உருண்டையாக பூமி வெப்பத்தில் உருக, அவ்விடத்தில் கஷ்டப்படும் ஏழைமக்களும், ஏய்த்து பிழைப்பவர்களும் ஒருவரையொருவர் பிய்த்து பிடுங்கி வாழும் நிலையில், மேலே காம்ளக்ஸிலோ மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், பூத்தும், காய்த்தும் குலுங்கும் பழ மரங்கள், பச்சை பசுமைக்கு குறைவில்லாமல் முத்தாய்ப்பாக பெரும் கடலொன்று பிரமீட்டின் உச்சியில் அலையடித்து இந்திரஜாலத்தில் ஜொலிக்க, செல்வந்தர்கள் தத்தம் ஜோடியுடன் சந்தோஷமாக உலா வருகிறார்கள். அம்பானியின் ப்ரீவெட்டிங் கொண்டாட்டங்கள் போல் தினமும் ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படும் இந்த காம்ப்ளக்ஸுக்கு தலைவர் கமல்ஹாசன், சிரஞ்சீவியாக பல காலமாக வாழ்கிறார். மரணம் இல்லாத வாழ்விற்காக கர்ப்பிணி பெண்களின் பனிகுட நீரை சிரிஞ்சில் எடுத்து தன் உடம்பில் சும்மா “சிங்காரி சரக்கு நல்ல சரக்கு” என கும்மென்று ஏற்றி ஜம்மென்று ஆயுளையும் நீடித்துக் கொள்கிறார். இதற்கு இளங்குமரிகள் வேண்டும் என்பதால் காம்ப்ளக்ஸின் ஆட்கள் கீழே பூமிக்கு சென்று ‘யூனிட்ஸ்’ என்ற பணத்தை பேராசையுள்ள ஏழை தந்தைகளுக்கு கொடுத்து மகள்களை காம்ப்ளக்ஸுக்கு கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பெண் தீபிகா படுகோனே. அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் , தனது குழந்தை கொல்லப்படாமல் இருக்க அங்கிருந்து தப்பிக்கிறார். காசியை விட சற்று மேம்பட்ட நிலையில் உள்ள ஊர் ஷம்பாலா. செம்மண் காசிக்கும் இந்த ஊருக்கும் ஒரு வித்தியாசம் வெள்ளையாக இருக்கும் ஷம்பாலாவில் பிரமாண்டமான ஒரு ஆலமரம் எக்ஸ்ட்ராவாக இருக்கிறது. கடவுளே வந்து சீக்கிரம் பிறக்கப்போகிறார் என்பதை ஷம்பாலா மக்களும் முன்னமே அறிந்து, தீபிகாவின் வருகைக்காக காத்திருக்க, நடுவில் வந்து சேரும் அஸ்வத்தாமனின் பாதுகாப்பில் தீபிகாவும் ஷம்பாலாவுக்கு பத்திரமாக வந்து சேர்கிறார். பின்னாடியே காம்ளக்ஸ் ஆட்களும் மோப்பம் பிடித்து ஷம்பாலா வர, அவர்களுக்கு உதவினால் காம்ப்ளக்ஸில் நிரந்திர இடம் கிடைக்கும் என்ற ஒப்பந்தத்தில், பைரவனான பிரபாஸும் தீபிகாவை பிடிக்க முயற்சி எடுக்க பின் என்ன ஆகிறது என்பது தான் இங்கே கதை. Mad Max என்ற ஆங்கில படத்தை அப்பட்டமாக காப்பியடித்து காசி நகரம் என காண்பிக்கப்படுகிறது. அதே போன்ற வாகனங்கள், கதாபாத்திரங்கள்.. பாலைவன சண்டைகள்.

புது டெக்னாலஜிகள் ஆளும் கிபி2898 ல் பழைய புராண கதாப்பாத்திரங்களும் மக்களோடு மக்களாக ஒன்றாக பழக, Mad Max வாகனத்தில் வானத்தில் பறக்கும் பிரபாஸை காசியை காக்கும் காவல் தெய்வம் காலபைரவர் என சிலர் கும்பிடுவதும், தபஸ்வனத்தின் முனிவர்களின் தர்மபத்தினி போன்று உடையணிந்த ஷோபனா ஆங்கிலத்தில் கட்டளையிடுவதும் பார்வையாளர்களுக்கு சிறிது குழப்பமாக இருக்கிறது.

நல்ல விறுவிறுப்பாக செல்லக்கூடிய கதையில் படத்தின் ஆரம்பத்தில் வரும் தேவையில்லாத நீளமான பிரபாஸின் சண்டைக்காட்சி அலுப்பை ஏற்படுத்துகிறது. கடவுள் ஏன் பிறக்கவேண்டும். அப்படியே அவதாரமாகவே பிரசன்னம் ஆகி இந்த உலகையும் நல்லவர்களையும் காக்க கூடாதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. காமெடி என்ற பெயரில் வரும் வசனங்கள் சத்தியமாக சிரிப்பே வரவில்லை. படத்தின் மிகப்பெரிய ஹைலைட் அஸ்வத்தாமனாக வரும் அமிதாப்பச்சன்தான். என்ன இருந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட் அல்லவா! 81 வயதில் தூள் கிளப்புகிறார் மனிதர். பிரபாஸின் கதாபாத்திரம், ஹாரிசன் ஃபோர்ட்டின் ஸ்டார்வார்ஸின் Han Solo போல், தன்நலனையே முன்னிருத்தி, சுயநலத்துடன் வில்லன்களுக்கு sidekickக்காக செயல்பட்டாலும் எதிர்பாரா நேரத்தில் உள்ளிருக்கும் நியாயவாதி வெளிவர ஹீரோவாக மாறுகிறார் பிரபாஸ்.

தீபிகா அழகாக இருக்கிறார், மிக அருமையாக நடிக்கிறார். மற்றபடி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். பசுபதி கூட வருகிறார். 15 வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட இன்னும் இளமையாக இருக்கிறார்.

கர்ப்பத்தில் இருந்த சிசுவை கூட கொல்ல துணிந்த அஸ்வத்தாமனுக்கு கிருஷ்ணர் கொடுத்த சாபமே மரணமில்லாத வாழ்வு. அதே அஸ்வத்தாமன் எதற்காக மீண்டும் கடவுள் அவதரிக்க தீபிகாவின் கர்ப்பத்தை காக்க வருகிறார் என்பது தெரியவில்லை. படம் கடவுள் பிறக்காமலேயே முடிவதால் இறுதியில் “தொடரும்” என்று போடுகிறார்கள். இயக்குநர் நாக்அஷ்வின் இரண்டாம்பாகம் வருவதற்கு இன்னும் 3 வருடங்களாகும் என சொல்லியிருக்கிறார். நெட்ஃபிளிக்ஸ் அமேசான் புண்ணியத்தில் இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்கள் எல்லாம் அத்துபடியான இக்காலக்கட்டத்தில்,கல்கியில் சில ஹாலிவுட் படங்களின் அப்பட்டமான காப்பி, பேஸ்ட் பார்வையாளர்களை வெறுப்பேற்றுகிறது. குருஷேத்திர போரின் நடுவே கிருஷ்ணர் நிற்கும் காட்சியும், சில போர் காட்சிகளும் “வாவ்” சொல்ல வைக்கிறது.

மகாபாரதம், புராணகதாப்பாத்திரங்கள், Alita Battle Angel ,Mad Max ,Starwars திரைப்படங்கள், கிபி 2898 பூமியின் கற்பனையான புது யுக தொழி்நுட்பங்கள் எல்லாம் கலந்துக்கட்டி ஒரு மாதிரி கொடுத்திருக்கிறார்கள். இயக்குனரின் புது முயற்சி என்பதால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இப்படத்தை பார்க்கும் போது

நிஜமாகவே உலகத்தின் எதிர்காலம் கிபி 2898ல் இப்படி தான் மாறிவிடுமோ என்று சிறிது பயம் உண்டாகிறது. கதைப்படி வானத்தில் மிதக்கும் காம்ளக்ஸ்காரர்களுக்கு கீழ்தட்டுமக்களின் உதவி தேவைப்படும் நேரத்தில் அவ்வப்போது காசுக்கொடுத்து பணியாளர்களாக உபயோகித்து பிறகு துரத்திவிடுகிறார்கள். அவர்களிக்கிடையே உள்ள தூரமோ நினைத்தாலும் எட்ட முடியாத அளவிற்கு வானத்திற்கும் பூமிக்குமாக இருக்கிறது. நம் நிகழ்காலத்திலும் கஷ்டப்படும் ஏழைநடுத்தரமக்களுக்கும், சொகுசு வாழ்க்கையில் திளைக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி சமீபக்காலங்களில் அதிகம் அதிகரித்து கொண்டே வருகிறது .

Artificial Intelligence வேறு இங்கே பிரமாண்டமாக எழுச்சிப்பெற்று உலகை ஆள ஆரம்பித்துவிட்டது. வருங்காலத்தில் மனித சக்திக்கு மாற்றாக முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டால், சாமான்ய மக்களின் உழைப்பும், உதவியும் மொத்தமாகவே தேவையில்லை என்ற நிலை வந்தால் சக்திப்படைத்தவர்கள், கீழ்மட்ட மக்களை முற்றிலும் கைக்கழுவி விடுவார்கள் என்பது நிச்சயம். பின் அவர்களின் நிலை என்னவாக மாறும் என்பது தெரியவில்லை. கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கடவுள் அவதரித்து வில்லனை ஒழித்து விடுவார். நிஜத்தில் எந்த அவதாரம் பிறந்து உலகை காப்பாற்ற போகிறார்?!