தொடர்கள்
புத்தக விமரிசனம்
“பெண்ணதிகாரம்” நூல் அறிமுகம் -மரியா சிவானந்தம்

20240605161602440.jpg

பத்மா அமர்நாத் ... விகடகவி வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் .

கடந்த 27 வாரங்களாக "பெண்களுக்கான சுய அதிகாரம்" என்ற தலைப்பில் அவர் எழுதி வந்த கட்டுரைத் தொடர் வழியாக நம்முடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டவர் . பத்மா அமர்நாத் எழுத்தாளர் , பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் பெண்ணியவாதி . மின்னிதழ்கள் மற்றும் வலைப்பூக்களில் தன் ஆளுமை மிக்க எழுத்துடன் வலம் வருபவர் . பெண் விடுதலை ,பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சுயசார்பு ஆகிய சொற்களுக்கு புதிய வெளிச்சத்தில் புதிய பொருளைக் கூறுபவர் .

20240605162102687.jpg

சமீபத்தில்அவர் எழுதி , வெளி வந்துள்ள புதிய நூல் "பெண்ணதிகாரம் " புழுதி இதழின் சிறப்பிதழுக்காக பத்மா செய்த நேர்க்காணல்களின் தொகுப்பு . இன்றைய காலக்கட்டத்தில் பல தளங்களில்,பல துறைகளில் இயங்கும் சாதனைப் பெண் ஆளுமைகளை இவர் நேரிலும் ,இணைய வழியிலும் சந்தித்து 'பெண்ணியம் 'தொடர்பான அவர்தம் கருத்துக்களைக் கேட்டு தொகுத்து அளித்த நூல் 'பெண்ணதிகாரம் "

இவர் நேர்க்காணல் செய்த ஆளுமைகள் அனைவரும் நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் தாம். அ.வெண்ணிலா , திலகவதி ஐபிஎஸ், பர்வீன் சுல்தானா, லீனா குமரவேல், ரோகிணி , நிவேதிதா லூயிஸ் ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் என்று நாடறிந்த பெண்கள் உட்பட , இங்கு உள்ளம் திறந்து உரையாடுபவர்கள் அனைவரும் தத்தம் துறையில் சாதித்தவர்கள் .

இவர்களின் நேர்க்காணல்களைப் படிக்கும் போது பத்மா அமர்நாத் அவர்களின் உழைப்பு தெரிகிறது .பேட்டி தருபவரின் சுய அறிமுகத்துடன் தொடங்கும் நேர்க்காணலில் அவர்கள் கடந்து வந்த பாதை நம் கண் முன் விரிகிறது . சாதாரண பின்னணியில் இருந்து வந்து அசாதாரண காரியங்களை சாதித்த இவர்கள் சந்தித்த சவால்களும் அவற்றை மனோதிடத்துடன் எதிர் கொண்ட அவர்தம் உள்மன ஆற்றலும் நம்மை பிரமிக்க வைக்கிறது .

பெண்கள் கல்லூரி சென்று படிக்காத அந்த கால கட்டத்திலேயே திலகவதி ஐபிஎஸ் படித்து பட்டம் பெற்றதுடன் , தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் ஆக தன்னை உயர்த்திக் கொண்ட கதை சிலிர்க்க வைக்கிறது . பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்ட முடியாத காட்டுயிர் புகைப்படக்கலையில் ( Wildlife photography )சாதனை செய்து வரும் அனிதா , கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வெளி வரும் வழியாக இந்த துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார் .கலைத்துறையில் இருந்துக் கொண்டே சமூகப் பார்வையுடன் செயலாற்றும் நடிகை ரோகிணி ,'குரலற்ற பெண்களின் குரலாக ஒலிக்கும்'மது சரண் வேல் ஐக்கிய நாடுகளின் இந்திய தொழிலதிபர்களின் தூதர் என்று நம்முடன் பேசும் பிரபலங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது .

ஒரே மேடையில் அத்தனை சாதனை மகளிரையும் சந்தித்து கை குலுக்கிய உணர்வு நமக்கு ஏற்படுகிறது . நேர்க்காணல் செய்த பத்மா மிக கவனமாக ,நுணுக்கமான கேள்விகள் முன் வைக்க பேட்டி கொடுப்பவரின் பதில் அனாயசமாக பறந்து வருகிறது . தங்கள் அனுபவங்களை எவ்வித பாசாங்கும் , மேல் பூச்சும் இன்றி வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்கிறார்கள். சமூக மேம்பாட்டுக்காக தங்கள் பங்களிப்பை அவர்கள் பட்ட சிரமங்களை, எதிர் கொண்ட இடையூறுகளை சொல்லும் பாங்கு போற்றுதலுக்கு உரியது.

ஒவ்வொரு நேர்க்காணலின் இறுதியில் வைக்கப்படும் பொது கேள்வி அறிவார்த்தமாகவும் , பெண்களின் சுய சார்பு,சுய அதிகாரம் , பெண்ணதிகாரம் குறித்தே வைக்கப்படுகிறது . அதற்கான பதிலை ஒவ்வொருவரும் தம் பார்வையில் தருகிறார்கள் . பெண்ணியம் பற்றிய இன்று நிலவும் கருத்துக்களை மறு பரிசீலனை செய்வதாகவே அவை அமைகிறது .ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் பெண் சுய அதிகாரம் பற்றி கூறும் ஏழு கருத்துக்களும் பொன் எழுத்தில் செதுக்கி வைக்க கூடியவை மட்டுமல்ல பெண்கள் அனைவரும் தங்கள் உள்ளத்தில் பொறித்துக் கொள்ள வேண்டியவை .

பெண் உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் மட்டும் அல்ல ,எதிர்க்குரல் கொடுப்போரும் படிக்க வேண்டிய நூல் இது. இந்த சாதனைப் பெண்மணிகள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல , வாழ்க்கையால் நமக்கு வழி காட்டுகிறார்கள், ஊக்கம் தருகிறார்கள் . "எங்களால் முடிந்தது , உங்களால் ஏன் முடியாது ?" என்று கேள்வி கேட்கிறார்கள் .

இச் சாதனைப் பெண்கள் சமூகத்தில் விதையாக புதைந்து , வீறு கொண்டு முளைத்து ,கிளைப் பரப்பி , விழுதுகள் இறக்கி ஆலமரமாக தழைத்து நிற்பவர்கள் . இவர்தம் நிழலில் பெண் உலகம் இளைப்பாறலாம், இன்னும் பல விருட்சங்களாக உருவெடுக்கலாம் .

புத்தகத்தின் வடிவமைப்பு , அணிந்துரைகள் , கோட்டோவியங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது , படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. நூல் முழுவதும் நிறைய ஆங்கிலச் சொற்கள் இருப்பது நெருடலாக இருக்கிறது. முழுமையாக தமிழ்ப்படுத்தி இருந்தால் சாதாரணர்களையும் இந்த எழுத்துக்கள் சென்றடையும் என்பது என் கருத்து .

வாழ்த்துக்கள் பத்மா அமர்நாத் . பெண்களுக்கான உங்கள் எழுத்து வேள்வி நற்பயனைத் தரும் .

பெண்கள் வசம் ஆட்சியும் ,அதிகாரமும் வந்து சேரும் , 'பெண்ணதிகாரம்' அதற்கான வித்தாக அமையும் .