“The most beautiful things in life cannot be seen or touched. They must be felt with the heart.” –
Helen Keller
வாழ்வின் உன்னதமானவற்றையும், அழகான நினைவுகளையும், மனதார உணர்ந்துப் பார்க்க வேண்டும் என்கிறார் ஹெலன் கெல்லர்.
சென்றக் கட்டுரையில், குறைவானப் பொருட்களுடன் பயணிப்பதைக் குறித்துப் பார்த்தோம். பொருட்களின் மீது உள்ள மோகம், பார்த்தவற்றை எல்லாம் வாங்கத்தூண்டும்.
நீங்கள் கையாளக்கூடியதை விட, தேவைக்கு அதிகமான பொருட்களுடன் போராடும்போது, இப்படிப்பட்ட மன அழுத்தம் ஏற்படும். உண்மையில் முக்கியமானவற்றையும், தேவையில்லாதவற்றையும் பிரித்துப் பார்க்க முடியாத சூழலில் சிக்கிக் கொள்வோம்.
இது தான் நாம் வாழும் அதிகபட்ச கோட்பாடு நிலை (maximalism).
தொடர்ந்து சில ஆண்டுகள், உலக பணக்காரப் பட்டியலில் இடம் பிடித்தவர், ஸ்டீவ் ஜாப்ஸ். சகல வசதிகள் இருந்தும், குறைந்தபட்சக் கோட்பாடைப் பின்பற்றுபவர். அன்னை தெரசா, உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்ற பெண்மணி. அவருக்கு வேண்டியப் பொருட்களைக் குவிக்க, உலக நாடுகள் காத்திருந்தன. அவர் மறைந்தபோது, விட்டுச்சென்றவை - பலமுறை உபயோகிக்கப்பட்ட ஒரு புடவை, ஒரு சால்வை, ஒரு பழைய பை மற்றும் ஒரு ஜோடி தேய்ந்த செருப்பு மட்டுமே. அதேபோல, உடமைகள் அதிகம் இல்லாத மாமனிதர், மகாத்மா காந்தி.
நம்மிடம் உள்ள பொருட்களினால் மட்டுமே நம் மதிப்பு உயராது. அவ்வாறு பொருட்களைக் கொண்டு மதிப்பிடுபவரைப் பற்றி நாம் எண்ணிப்பார்ப்பது வீண். அதிக அளவில் சேர்த்து வைத்த, தேவையற்றப் பொருட்களைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் நம் நேரத்தையும், சக்தியையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். விளைவு, நமக்கு உதவ வேண்டிய விஷயங்கள், நம்மை ஆள்கின்றன.
மினிமலிசம் மூலமாக ஏற்படும் இந்த மறுசீரமைப்பு, வாழ்க்கை முறையிலும் நம் கண்ணோட்டத்திலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைப் பருவத்தை நினைத்துப் பாருங்கள். அறை சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை, ஒழுங்குப்படுத்தவில்லை என்று, பெற்றோர்கள் நம்மைக் கண்டித்திருப்பார்கள். ஆனால் எப்படி ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை நம் பெற்றோர்களில் எத்தனைப் பேர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? எத்தனை பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது?
மினிமலிசத்தை எப்படி வரையறுப்பது? மினிமலிசத்தின் சரியான வரையறையைக் கொண்டு வருவது கடினம். ‘குறைந்தபட்சம்’ என்று ஒரு வரையறை இருக்கவேண்டும். இன்றியமையாதது என்ன, என்பதை அறிந்திருக்க வேண்டும். வைத்திருக்கும் உடைமைகள், உண்மையிலேயே முக்கியமானவையாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை.
வெவ்வேறு மக்களின் வாழ்க்கைச் சூழல் வெவ்வேறாக இருக்கும். முக்கியமான விஷயங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பொருட்களை குறைக்கும் செயல்முறையும் மாறுபடும். எனவே ஒரு நபரை குறைந்தபட்சவாதியாக ஆக்குவது எது என்ற கேள்விக்கு, சரியான பதில் ஏதும் இல்லை.
ஆனால், பொருட்களைக் குறைக்க, சில வழிமுறைகளைக் கையாளலாம்.
இணைந்திருங்கள். அடுத்தக் கட்டுரையில் தொடர்ந்துப் பேசுவோம்.
Leave a comment
Upload