தொடர்கள்
தொடர்கள்
தொடர்... சுப்புசாமியின் சபதம்...! -புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன் 7.

20240425071952132.jpg


அகல்யா சந்தானம் வாழ்க்கையில் பலமுறை அவமானப்பட்டிருக்கிறாள். ஆனால்... ஆனால்... இதோ சில நிமிடங்களுக்கு முன் நேர்ந்த அவமானம், எவர் பிளாக் அவமானம்!


சம்பிரதாய உசாவல்கள் முடிந்தபின் ரஹ்மான், "ப்ளீஸ் கம் டு மை ஸ்டுடியோ கேபின்...!" என்று பொதுவாகத்தான் அழைத்தார்.


அவர் முன்னே செல்ல, பின்னே கோமுப்பாட்டி தொடர எத்தனிக்கும் வேளையிலே தன் பின்னால் வந்த அகல்யாவைக் கையை காட்டி நிறுத்தினாள்.


"அகல்யா இப் யூ டோன்ட் மைண்ட் ப்ளீஸ் வெயிட் பியூ மினிட்ஸ். ஹேவ் டூ டிஸ்கஸ் சம்திங் அபௌட் அபிசியல் கான்ஃபிடென்ஷியல் டாக் வித் சர்... பேச்சு முடிந்ததும் நானே உங்களை உள்ளே அழைக்கிறேன்...!"


பாட்டியின் தோரணையான ஆணை, அகல்யாவை அப்படியே நிற்கச் செய்தது. எதுவும் பதில் தாராமல் அமைதியாக மறுபடியும் சோபாவில் அமர்ந்தாள்.
இசைப்புயலோடு தாமும் டிஸ்கஷனில் இருக்க வேண்டியதை இப்படி சடுதியில் தட்டிப் பறிக்கப்பட்டதை அவளால் தாங்க இயலவில்லை.


சென்ற அத்தியாயத்தில் பாட்டியின் கோல்டன் வேர்ட்ஸ்க்கு பணிந்து திருந்தியிருந்தவள் மனதினுள் மறுபடியும் சாத்தான் இரு கொம்புகளுடன் நோட்டீஸ் கொடுக்காமல் குடியேறியது.


'பிரசிடென்ஜீயாம்... பிரசிடென்ஜீ...? அறிவாளியாக இருந்து என்ன பிரயோஜனம்? நான் பா.மு.க. செகரெட்டரிதானே? அந்தப் பா.மு.க. என்னும் கழகக் கட்டிடத்தில் நானும் ஒரு செங்கல்தானே? என்னை எதற்கு விலக்கி வைக்க வேண்டும் அந்த சாகசக்காரி?'
சாத்தானின் ஆக்ரோஷம் எகிறியது.


'நானா திருந்த வேண்டும்? சக மனுஷியை மதிக்காத தலைமைக்கு நான் பணிந்துபோக வேண்டுமாக்கும்?'


யார் மடியிலாவது தலைவைத்து கோவென்று அழவேண்டும் போலிருந்தது.
சாத்தானுக்கு சாத்தானின் ஞாபகம்தான் வந்தது -


ஶ்ரீமதி கண்ணாம்பாள்!


'அவள் தங்கமடி தங்கம். பணக்காரியாக இருந்தாலும் பரந்த மனசு கொண்டவள். மரியாதையை தன்னுள்ளே வைத்திருந்து அதை தனக்குச் சாதகமானவர்களிடம் செலுத்தத் தெரிந்த குணவதி...!'


தான் பாட்டியுடன் 'வராமலே இருந்திருக்கலாம்' என்று தோன்றியது அகல்யாவுக்கு.
ஏறக்குறைய 10 நிமிடங்கள் கழிந்தன. பல யுகங்களைக் கடந்தது போல இருந்தது அவளுக்கு.


கதவு திறக்க, பாட்டியின் தலை.


"அகல்யா, ப்ளீஸ் கம் இன்...!"
இயந்திரமாய் எழுந்து உள்ளே சென்றாள்.


"வீ கேன் டேக் மெமரபிள் போட்டோ வித் மிஸ்டர் ரஹ்மான் சார் ...!"


"ஸ்மைல் ப்ளீஸ்...!" என்று போட்டோகிராபர் பலமுறை கூறியும் அகல்யாவுக்கு புன்னகை வரவில்லை.


'வெறும்... ஃபோட்டோ... சுவற்றில் ஆணி அடித்து மாட்டிக் கொள்ளவா?'


ஆயிரம் தீயணைப்பு வண்டிகள் தாமதமாக வந்து நீர் பாய்ச்சினாலும் வயிறு எரிவது அடங்காதுபோல இருந்தது அகல்யாவுக்கு.


அவளும் "என்ன பேசினீர்கள்?" என்று கேட்கவில்லை. கிழ போல்டு பிரசிடெண்டும் வாயைத் திறக்கவில்லை.


"தேங்க்யூ... அகல்! நாளை போர்டு மீட்டிங்கில் சந்திக்கலாம்...!"


பாட்டி வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டாள்.
கார் விர்ர்... என்று கோபத்துடன் கிளம்பியது.
*****
ஏ. ஆர். ஆர். பிரத்யேக அறையில் நடந்தது என்ன?


ரஹ்மானுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாது என்பது நான் கூறவும் வேண்டுமா?
இசை - தவம்தான். ஒத்துக் கொள்வோம்!


ஆனால் இசையை பைசாவாக ஆக்க சுற்றி நிற்கும் மனிதர்கள் ஆடும் ஆட்டத்தைத்தான் தாங்க முடியவில்லை. குடும்பத்திற்குச் செலவிடும் நேரம் ரொம்ப ரொம்பக் குறைவு. வீடு, சென்னை ரெகார்டிங் ஸ்டுடியோ, இசைப்பள்ளி, மும்பை, லண்டன் என்று சதா சர்வ காலமும் ஓடிக்கொண்டே இருப்பது அலுக்கத்தான் செய்தது.


இப்படி புதிய மனிதர்களைச் சந்தித்தால் சற்று விடுதலை கிடைத்த உணர்வு.


ரஹ்மானுக்கு பாட்டியின் முதல் தோற்றமே அவள்மேல் பெரும் மரியாதையைக் கொடுத்து விட்டது.


தமிழ்நாட்டில் இப்படி ஒரு நேர்த்தியான அறிவுக்களை சொட்டும் பாட்டி. அதை நிரூபிப்பது போல் பாட்டியின் டம்பப்பையில் தலை நீட்டிக்கொண்டிருக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட்.


ஓல்டு, போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்!


கட்டியிருந்த மடிசார் பட்டுப் புடைவையை பாங்காய்ச் சரி செய்து கொண்டு அமர்ந்த தோரணை, நேர்கொண்ட பார்வை, மூக்கு கண்ணாடியை ஸ்டைலாய் தள்ளிவிட்டுக்கொண்டு உரையாடும் பாங்கு...


'நான் அகில உலகம் போற்றும் கலைஞன். ஆனால், அந்த ஒரு பினோமினான் அற்று ஒரு சராசரி மனிதனாய் என்னை பாவித்துப் பேசும் இந்த பெண்மணி எந்த தலைமைக்கும் பொருத்தமானவள்...!' வியந்து போனார் ரஹ்மான்.


கோமு நச்சென்று ரஹ்மானிடம் தெரிவித்த கருத்து யாதெனில்...


"ஐ அம் வெரி ஹேப்பி டு மீட் மிஸ்டர் ரஹ்மான். என் மகனைப் போன்றிருக்கிறீர்கள். உங்களை பார்த்ததுமே எனக்குள் ஒரு தாய்மை உணர்வு எழுகிறது. யூ சீ... பீத்தோவன் ரிடன் கான்வர்சேஷனில் நண்பர்களிடம் ஒருமுறை சொன்னார்: ஐ டோன்ட் நோ ஹூ அயாம். பட், மை சோல் நோஸ் வெரி வெல் ஹூ அயாம்..!"


மெல்லிய வெண்மையான கைக்குட்டையால் முகத்தை ஒற்றியபடி, "உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. நேராக விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் ஸ்ரீமதி கண்ணாம்பாள் ஆஃப் ஸ்டீல் அதாரிட்டி இந்தியா பற்றி தெரிந்திருக்கலாம்..."


"ஆமாம், சமீபத்தில்கூட என்னோடு பேசினார்கள். ஐ நோ ஹர் ஹஸ்பண்ட் வெரி வெல்...!"


"ஸ்ரீமதி தங்களை ஸ்பெஷல் கெஸ்ட்டாக எங்கள் கழக விழாவிற்கு அழைத்திருப்பார்கள் என்று தெரியும். தங்கள் பரந்த மனசுக்கு நன்றி. எனிவே மிஸ்டர் சித் ஸ்ரீராம் பாடப் போகிறார். ஆஸ் ஆஃப் நௌ ஹி ஈஸ் அ லெஜெண்ட் சிங்கர்! நீங்களோ கிங் ஆப் மியூசிக்! ஓர் உறையில் இரண்டு தங்கக் கத்திகள் வேண்டாமே?உங்களுடைய அக்செப்டென்ஸ் அப்படியே இருக்கட்டும். இதே பா.ம.க.வின்வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஒரு ஸ்பெஷல் ஷோ நடத்தக்கூடாது? எங்கள் கழகத்தில் 60 மூத்த குடிமகள் உள்ளார்கள். ஒவ்வொருவரும் தனித்திறமை வாய்ந்தவர்கள். சிலர் பாடுவார்கள், சிலர் ஆடுவார்கள், சிலர் மிமிக் செய்வார்கள், சிலர் குலவை இடுவதுண்டு, சிலர் ஒப்பாரி வைப்பதுண்டு. எனக்கும்கூட நாடோடி பீட்டில்ஸ் பாடல்கள் அத்துபடி...! இந்த பாட்டி கலைஞர்களை வைத்துக்கொண்டு தேசம் புகழும் ஓர் இசைக்கலைஞன் நிகழ்ச்சி நடத்தினால் புதுமையாகவே இருக்கும். ஏற்கனவே 'ருக்குமணி ருக்குமணி... அக்கம் பக்கம் என்ன சத்தம்...?' என்று ஒரு பாடல் போட்டு நீங்கள் கலக்கி உள்ளீர்கள்! குலவை இடுவது அவ்வளவு சுலபம் அல்ல; ஒப்பாரி பாடல்களில் வாழ்க்கையின் தத்துவம் இருக்கும். இவற்றை எல்லாவற்றையும் நீங்கள் ரெக்கார்ட் செய்து கொண்டு உங்கள் எதிர்கால சினிமாக்கள், ஆல்பங்கள், சிம்பொனிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கள் கழகத்திற்கும் ஒரு பெர்மனென்ட் இன்கம் வரும். திஸ் இன்கம் ஃபார் ஏழை பொது மக்களுக்கு சர்வீசாகப் போய்ச் சேரும்...!"

"வாவ், கிரேட் ஐடியா! நிச்சயமாக இணைந்து செயல்படுத்துவோம், மேடம்...!"


"தேங்க்யூ பார் தி லவ் யூ ஆர் ஹேவிங் ஃபார் மீ ரஹ்மான்! எனக்கு ஒரு வாய்ப்பு... தங்கள் பிரெஸ்டீஜியஸ் அகாடமி விருதைத் தொட்டுப் பார்க்க கிடைத்தது...!"


"நானும் மறக்க மாட்டேன். பெற்றதை... தொலைத்து அதை திரும்பப் பெறுவதற்கு இறைவனின் கருணை வேண்டும்! அது உங்கள் மூலம் கிடைத்தது..."


பாட்டி, ரஹ்மானின் கைகளைப் பிடித்து ஜென்டிலாகக் குலுக்கினாள்.


"ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோமே...!" என்றார் ரஹ்மான்.


"வித் பிளஷர். என் கலிக் அகல்யாவையும் அழைக்கிறேன்...!" என்றாள் கோமு.
*****
சுப்புசாமி காரிலிருந்து இறங்கியதை அண்டை பங்களாக்கள் பொறாமையோடு பார்த்தன.


'இந்த எண் கொண்ட கார் ஏ. ஆர். ரகுமான் உடையது அல்லவா?'


கார் கதவைத் திறந்து டிரைவர் சுப்புசாமியை மரியாதையாக இறக்கி விட்டார். உடன் பொக்கே, பழக்கூடையை அவரிடம் கொடுத்துவிட்டு, ஓங்கி ஒரு சல்யூட் வைத்து விட்டுக் கிளம்பினார். தாத்தாவுக்கு அந்த அனுபவம் பெரும் ஆனந்தமாக இருந்தது.


பங்களா மனிதர்களின் பார்வைகளோடு இன்னொரு பார்வையும் பார்த்தது எதிர்ப் பக்கத்திலிருந்து. அது -

குண்டுராஜாவின் அகண்ட பொறாமைப் பார்வை.
தனது புகழை யாராவது பார்க்க... பார்க்கமாட்டார்களா? ஆரத்தியெடுத்து பாடமாட்டார்களா? என்றிருந்த சுப்புசாமிக்கு குண்டுராஜாவின் தரிசனம் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.


"வாடா என் நண்பா...!" என்று அவனை அழைத்து, பழக் கூடையை கையில் திணித்தார். "எந்த பழத்தை வேண்டுமானாலும் புசி...!" என்றார்.


"என்ன தாத்தா, பெரீய பெரீய வண்டியில வந்து இறங்குறீங்க? ஏதாவது கேரளா லாட்டரி டிக்கெட்டில் படா, படா ப்ரைஸ் அடிச்சிட்டீங்களா...?" என்றான் குண்டுராஜா மோப்ப மூக்கைத் தடவிக்கொண்டு.


(அட்டகாசம் தொடரும்...)