தொடர்கள்
கவிதை
தாயின் மடியில் - மோகன் ஜி ஓவியம் : தேவா

20240412144202791.jpeg

இவ்விரவு நானிங்கே துயில வேண்டும் – என்தாயின்
செவ்விதழ்கள் தாலாட்ட மென்விரல்கள் உடல்வருட,
உலகத்தை நான்மறந்து உறங்கவேண்டும்: அவள்மடியில்
மலர்ச்செண்டாய் மாறிநான் மணக்க வேண்டும்.

போலிகளை நானிங்கே புகழ்ந்ததுபோதும் – இதயத்து
வேலிகளை தாண்டிமனம் களைத்தது போதும்: நிதமிங்கே
கூலிக்கு பொய்மூட்டை சுமந்தது போதும்: அன்னையவள்
காலிலென் தலைவைத்தே ஓய்தல் வேண்டும்.

வெண்ணிலவில் ஔவை வடைசுட்ட கதைகேட்டு,
கண்ணிரண்டில் துயில்பரவ, அவள்கரம் நான்பற்றி
மண்ணில்விரித்த அவள் முந்தானைமணம் முகர்ந்து,
விண்ணேறித் தாரகைத் திரள்களோடு மிதக்க வேண்டும்.

கயமையோடு நான்பழக நேர்ந்ததுபோதும் –இருள்நெஞ்ச
மையல்களில் என்மனது அலைந்ததுபோதும் : பாவத்தின்
செயல்களினை என்கண்கள் பார்த்ததுபோதும் – பாசத்தின்
உயர்வுகளைத் தாய்மடியில் உணரவேண்டும்.

அன்னையவள் மடிமீண்டு குழந்தையாகி- அவள்தம்
மென்விழிகள் சிந்தும் நீரென் சிரத்தில் ஏற்று – தெய்வ
சன்னதியின் சாந்தியவள் அருகாமை என்றுணர்ந்தே
என்னுயிரை அவளுக்கென இருத்தல் வேண்டும்.