தொடர்கள்
பொது
தேஜோவதியின் காவலர்கள் - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240410140518522.jpg

பக்தபரிபாலன் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா வீற்றிருக்கும் மாளிகையின் நாற்புறங்களிலும் வாயில்கள் உள்ளன.

அம்மாளிகையின் கீழ்புறவாயிலில் விஸ்வாங்கி என்ற சக்தியடன் சண்டன் என்பவனும், ஸ்வரூபி என்ற சக்தியுடன் ஆகமன் என்பவனும் காவல் புரிகின்றனர்.

தென்புற வாயிலை பத்திரை என்ற சக்தியுடன் சண்டாஷரன் என்பவனும் விஸ்வபதி என்ற சக்தியுடன் விமலன் என்பவனும் காவல் புரிகின்றனர்.

மேற்புர வாயிலை

விக்ருதி என்பவளுடன் ஷடத்வாரபாலன் என்பவனும், விஷதி என்பவளுடன் பிரதிஷ்டத்வாரபாலன் என்பவனும் காவல் புரிகின்றனர்.

வடபுற வாயிலை சங்கினி என்பவளுடன் சுவர்ஜிதன் என்பவனும், சண்டமாலை என்பவளுடன் ருத்திரப்பிரியன் என்பவனும் காவல் புரிகின்றனர்.

திருப்பாற்கடலில் இருந்து அமிர்தத்துடன் உத்திர நட்சத்திரத்திலுதித்த பூதேஸ்வரனோடு எட்டு வகையான பூதங்கள் தோன்றின. பரமேஸ்வரன் அவைகளை அழைத்து எட்டு திசைகளையும் காவல் புரியும் பொறுப்பை அளித்து அந்த எட்டு பூத் கணங்களுக்கும் அமிர்த பாலனான பூதத்தாரை தலைமை ஏற்கச் செய்து அவற்றை வழி நடத்தி செல்ல ஆணையிட்டார்.

அதன்படி பூதத்தாரின் கட்டளைக்குக் கீழ் படிந்து நடக்கும் அஷ்ட திக் காவலர்களாக

கிழக்கு திசையில் வெண்மை நிறம் கொண்ட சம்வர்த்தனன் என்ற வெண்சடை பூதமும்,

தென்கிழக்கு திசையில் பொன்னிறம் கொண்ட உத்தமன் என்ற பொற்சடை பூதமும்,

தெற்கு திசையில் கரிய நிறம் கொண்ட குண்டோதரன் என்ற கருஞ்சடை பூதமும்,

தென்மேற்கு திசையில் சிகப்பு நிறம் கொண்ட தீர்க்ககாயன் என்ற செஞ்சடை பூதமும்,

மேற்கு திசையில் பச்சை நிறம் கொண்ட ஹிரஸ்வபாதன் என்ற நெட்டை பூதமும்,

வடமேற்கு திசையில் சாம்பல் நிறம் கொண்ட சிங்க ரூபன் என்ற விரிசடை பூதமும்,

வடக்கு திசையில் மஞ்சள் நிறம் கொண்ட கஜமுகன் என்ற முடிசடைபூதமும்,

வடகிழக்கு திசையில் நீல நிற்ம் கொண்ட பிரியமுகன் என்ற குட்டை பூதமும் எட்டு திசைகளிலும், கைகளில் தண்டம் தாங்கி காவல் புரிகின்றனர்.

மாளிகையின் வெளியே எட்டு திசைகளிலும் காஸ்யபருக்கும் தக்ஷப்ரஜாபதியின் மகள் சுவேதைக்கும் பிறந்த எட்டு யானைகள் எட்டு திசைகளையும் காவல் புரிவதாக புராணங்கள் கூறுகின்றன.

கிழக்கு திசையை அப்ரமை என்ற பெண் யானையுடன் ஐராவதமும்,

தென்கிழக்கு திசையை கபிலை என்ற பெண் யானையுடன் புண்டரீகம் என்ற யானையும்,

தெற்கு திசையை பிகலை என்ற பெண் யானையுடன் வாமனம் என்ற யானையும்,

தென்மேற்கு திசையை அநுபமை என்ற பெண் யானையுடன் குமுதம் என்ற யானையும்,

மேற்கு திசையை தாம்ரபரணி என்ற பெண் யானையுடன் அஞ்சனம் என்ற யானையும்,

வடமேற்கு திசையை ஸுதந்தம் என்ற பெண் யானையுடன் புஷ்பதந்தம் என்ற யானயும்,

வடக்கு திசையை அஞ்சனை என்ற பெண் யனையுடன் ஸார்வபௌமம் என்ற யானையும்,

வட கிழக்கு திசையை அஞ்சனாவதி என்ற பெண் யானையுடன் ஸுப்ரதீபம் என்ற யானையும் காவல் புரிகின்றன.

அம்மாளிகையின் கிழக்கு திசையில் சந்திர காந்தக் கற்களாலும், சூரிய காந்தக் கற்களாலும், பொலிவு பெற்றுத் திகழும் பிரம்மாண்டமான பிறிதொரு மாளிகையில் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கும் லோகரக்ஷகியாகிய ஸ்ரீபிரபாதேவியாருக்கும் பிறந்த ஸ்ரீசத்யக மூர்த்தி என்பவர் அழகாய் வீற்றிருக்கிறார்.

பகவானின் மாளிகைக்கு தென்கிழக்கில் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் பிரதான சேவகரும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் பாலிக்கும் வள்ளலும், பெரும் பராக்கிரமசாலியான ஸ்ரீமதுரை வீரனார் தனது இரு மனைவியராகிய வீர சேனா, மதன சேனா (வெள்ளையம்மாள், பொம்மியம்மாள்) ஆகியவர்களுடன் எழுந்தருளியுள்ளார்.

தென்திசையில் பகவான் ஸ்ரீவேதமுனீஸ்வரர் தனது சீடர்களுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

தென்மேற்கு திசையில் ஸ்ரீமஹாசாஸ்தாவின் பரம பக்தரான ஸ்ரீலாடசுவாமி தனியொரு மாளிகையில் வசித்து வருகிறார்.

ஸ்ரீமஹாசாஸ்தா மாளிகைக்கு மேற்கு திசையில் மகாகாளர் தனது கணங்களோடு பிரம்மாண்டமான ஒரு மாளிகையில் வசிக்கிறார்.

வடமேற்கு திசையில் மஹாவீரம் பொருந்திய ஸ்ரீவீரசேனன் தனது கணங்களுடன் வாசம் செய்கிறார்.

வட திசையில் துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்வதில் வல்லவளான ஸ்ரீபெரியாச்சி அம்பிகை தனது பரிவாரங்களுடன் வசித்து வருகிறாள்.

வடகிழக்கான ஈசான திசையில் குபேர புத்திரரும், பகையழிப்பதில் வல்லவரும், பெரும் தீரருமான ஸ்ரீதூண்டிக்காரமூர்த்தி அமர்ந்து ஈரேழு உலகங்களுக்கும் அருள் பாலித்து வருகிறார்.

பகவான் கொலுவிருக்கும் சந்தனக்காவில் பத்து திசைகளிலும் அவரது மாளிகையைக் காவல் செய்யும் விந்தையான பல பரிவார மூர்த்திகள் உள்ளனர்.

ஈசனால் உருவாக்கப்பட்ட மஹாவீரரும் ம்ஹாகாளரும் ஸ்ரீமஹசாஸ்தாவின் சகோதரர்களைப் போல் இருந்துஅவரின் தலமை கணநாதர்களாகி அவரிடும் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

அய்யனார் ஆலயங்கள் அனைத்திலுமே அவரது கட்டளைக்காக காத்து நிற்பவர் கறுப்பன். இவர் சாஸ்தாவின் தலைமைத் தளபதி ஆவார்.

பகவானின் பூத்ப் பரிவாரங்களில் முதன்மையானவர் ஸ்ரீபூதநாதன் என்பவரே. இவர் பூதத்தான் என்றழைக்கப்படுகிறார். தேவர்களும் அசுரர்களும் இணைந்து அம்ருதமதனம் செய்யும் சமயம் ஈசனானவர் திருப்பாற்கடலிலிருந்து கைகளில் கதாயுதமும் கலீர் கலீரென ஒலிக்கும் சங்கிலியும் விளங்கத் தோன்றினார். சங்கிலி பூதத்தான் என்று அழைக்கப்பட்டு சகல சாஸ்த்ரு பரிவார கணங்களுக்கும் தலைவர் ஆனார்.

பகவானின் ஏவலுக்கு காத்து நிற்கும் நேரடியான கட்டுப்பாட்டில் அழைத்த குரலுக்கு உடன் வர மாடனும் கருப்பனும் முன்னடியான் ஸ்தானத்தில் விளங்குகின்றனர். பகவானின் சந்நிதியைக் காத்து நிற்கும்தலமை கணங்கள் செல்லப்பிள்ளயும் சாவலனும் ஆவர்.

கானகத்தைக் காக்கும் பொறுப்பு கட்டையன் வெள்ளயனுடையது.

கிழக்கு வாசலைக் காக்கும் பொறுப்பு நெட்டையன் மற்றும் பட்டாணி வீரன் வசம் உள்ளது.

சாமுண்டியும், வேதாள கணங்களும் சூழ சங்கிலி பூதத்தார் மேற்கு வாசலில் காவலுக்கு நிற்கிறார்.

குண்டாந்தடி பூதமும் கேரள யக்ஷிகளும் அய்யனது வடக்கு வாசலை காத்து நிற்கின்றனர்.

தக்ஷிண வாயிலை இடைமலையோன் மற்றும் தலை மலையோன் ஆகிய இருவரும் காவல் புரிகின்றனர்.

ஸ்மசானபைரவரும், மாமுக யக்ஷிகளும் ஈசான திசையில் காவல் காத்து வருகின்றனர்.

அக்னி திசையான தென்கிழக்கை வீரடியும், பாதாள முண்டனும் காவல் புரிந்து வருகின்றனர்.

வன்னிற முச்சடைச்சியும், பாதாள யக்ஷிகளும் இணைந்து கன்னிமூலையை காவல் புரிந்து வருகின்றனர்.

ஆய்யத்துறை மாடனும், ஆலடி வீரனும் வாயு திக்கை காவல் காப்பவர்கள் ஆவர்.

ஏகாந்த பூதங்களும், மூன்று கோடி யக்ஷிகளும் அக்னி மாடனுடன் சேர்ந்து ஆகாயத்தைக் காத்து வருகின்றனர்.

பன்றிச்சிங்கமுகி பூதமும், பாதாள பைரவனும் பாதாளத்தை காவல் புரியும் பொறுப்பு உள்ளவர்கள்.

வெள்ளைக்கல் பூதமும், வீரடி பூதமும் பகவானின் கோயில் விமானத்தைக் காத்து நிற்கிறார்கள்.

பகவானின் பூத சேனையின் நாயகர்களாக வாபரன், கடுசப்தன், வீரபத்திரன், கூபனேத்ரன், கூபகர்ணன், கண்டா கர்ணன், மற்றும் மஹாபலி ஆகிய எழுவர் ஆவர்.

முக்கிய பரிவரங்களாக வெள்ளைக்கல் பூதம், யக்ஷிமாடன், செல்லப்பிள்ளை இவர்களுடன் வீரபத்திரன், பைரவர் போன்றவர்கள் உடன் இருக்கிறார்கள்.

அங்கு பகவான் மஹாகாளர். மஹாவீரர், பூதநாதர் போன்ற சாஸ்த்ரு சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் உன்னதமான கணநாதர்களால் எப்பொழுதும் சரண கோஷங்களாலும், கானங்களாலும், நாட்டியங்களாலும் போற்றப்படுகிறார்.

புனிதமான செண்டு, திருச்சாட்டை ஆகிய திவ்ய ஆயுதங்களுடன் விதம் விதமான ஆடை ஆபரணங்கள் அணிந்து திவ்ய அலங்காரங்களுடன் அமர்ந்து இன்னருள் புரிகிறார் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா.

தொடரும்……….