தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 68 - பரணீதரன்

20240410195743112.jpg

காளமேக புலவரின் கவித் திறன் பற்றி இந்த வாரமும் தொடர்கிறார் நமது பரணீதரன்.

இப்பொழுது ஒவ்வொரு புலவராக வித்தார கவிகளை பாடுவதற்கு ஏற்ப குறிப்புகளை காளமேகப் புலவரிடம் கொடுக்கிறார்கள். முதலில் ஒரு புலவர் பொன்னாவரை இலை காய் பூ ஆகிய அனைத்தும் ஒரு பாடலில் வருமாறு பாடச் சொல்கிறார். அதற்கு நமது புலவரும் :

உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்

எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்

அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்

பொன்னா வரையிலை காய் பூ

அதாவது, உடுத்தியதும், மேய்த்ததும், தேவர்களின் தலைவனால் எடுத்ததும், பள்ளி கொண்டதும், முற்காலத்தில் எறிந்ததும், அன்பினால் இரந்ததும் - பொன், ஆ, வரை, இலை, காய், பூ என்று கூறுகிறார்.

பொதுவாக வித்தார கவி பாடும் புலவரோ அல்லது அவரை எதிர்ப்பவரோ அந்த பாடலுக்கான பொருளை சொல்ல வேண்டும். இங்கே காளமேகப் புலவரே இதனுடைய விளக்கத்தை விஸ்தாரமாக கூறுகிறார்.

அதாவது திருமால் தன் உடலில் உடுத்தியது தங்கம் (பொன்). அவர் மேய்த்தது பசு மாடுகளை (ஆ), அவர் தேவர்களின் தலைவனான இந்திரன் கோபப்பட்டதால் தன்னுடைய ஊர் மக்களை காப்பதற்காக எடுத்தது கோவர்தன மலை (வரை), அவர் பிரளய காலத்தில் பள்ளி கொண்டிருப்பது ஆலிலை (இலை), அவர் இரண்டு அரக்கர்களை அழிப்பதற்காக கன்று உருவில் வந்த ஒரு அரக்கனை கவணிற்கு (கவட்டை) காயாக பயன்படுத்தினார், மகாபலியின் மேல் மற்றும் தேவர்களின் மேல் இருந்த அன்பினால் மகாபலி இடம் பூமியை (பூ) தானமாக பெற்றார்.

இவ்வாறு காளமேகப் புலவர் விளக்கத்தை கொடுத்த பொழுது அந்த அவையில் ஒரு புலவர் இதனை ஒத்துக் கொள்ளவில்லை. திருமால் பொன் மட்டும் அணிந்திருப்பார் என்று கூறுவது தவறு என்று கூறினார். அதனால் வேறு ஒரு பாட்டினை பாடுமாறு கூறுகிறார். அந்த பாடலில் இப்படி ஏற்றுக் கொள்ளாத புலவருடைய பெயர் சாமிநாதன் என்று தெரிகிறது. அந்த பாடலையும் கீழே பார்ப்போம் :

தோய்ந்தான் மேய்த் தான்குடையாய்த் தூக்கினான் மேன்மேலாச்

சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான்-ஆய்ந்துசொலும்

மன்னா வரத்தில் வரு மால்சாமி நாதாகேள்

பொன்னா வரையிலைகாய் பூ

அதாவது, தோய்ந்தான், மேய்த்தான், குடையாய் தூக்கினான், மென்மேலாக சாய்ந்தான், எறிந்தான், சாப்பிட்டான் - பொன், ஆ, வரை, இலை, காய், பூ என்று கூறுகிறார். அதோடு மட்டும் நிற்காமல் மன்னரையும் தன்னுடைய பாடலை ஆராயச் சொல்கிறார். இப்படி மறுத்து பேசிய சுவாமி நாதனையும் இந்த பாடலை ஆராயச் சொல்கிறார். அதாவது - திருமகளோடு அல்லது திருமகளின் நெஞ்சத்திற்குள் (பொன்) சேர்ந்து இருந்தான் (தோய்ந்தான்), அவர் மேய்த்தது பசு மாடுகளை (ஆ), அவர் தேவர்களின் தலைவனான இந்திரன் கோபப்பட்டதால் தன்னுடைய ஊர் மக்களை காப்பதற்காக குடை போல தூக்கியது கோவர்தன மலை (வரை), அவர் பிரளய காலத்தில் பள்ளி கொண்டிருப்பது அல்லது சாய்ந்து கொண்டிருப்பது ஆலிலை (இலை), அவர் இரண்டு அரக்கர்களை அழிப்பதற்காக கன்று உருவில் வந்த ஒரு அரக்கனை கவணிற்கு (கவட்டை) காயாக பயன்படுத்தினார், அவன் பழைய காலத்தில் இந்த பூமியை (பூ) சாப்பிட்டு விடுவான் என்று கூறுகிறார்.

இந்த பாடலில் பொருள் பிழை எதுவும் இல்லாமல் இருந்ததால் சாமிநாதன் என்கிற அந்த புலவரும் இதை ஏற்றுக் கொள்கிறார்.

அடுத்ததாக ஒரு புலவர் மும்மூர்த்திகளை பற்றி ஒரு வித்தாரக் கவியை பாடுமாறு கூறுகிறார். அதற்கு நமது புலவரும்,

20240410195847554.jpg

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகுபூ

மறிதிகிரி தண்டு மணி நூல்-பொறியவரம்

வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்

கற்றாழம் பூவே கறி

என்று பாடுகிறார். இதற்கான விளக்கத்தை புலவர்கள் கேட்க, அதற்கு பின்வருமாறு இவர் விளக்குகிறார்.

வேதன் (வேதத்தை வைத்து பிறப்பு தொழிலை செய்து கொண்டிருக்கும் பிரம்மதேவர்), அரன் (ஹரன் என்று கூறப்படும் சிவபெருமான்), மால் (திருமால் என்று கூறப்படும் பெருமாள்) ஆகிய மும்மூர்த்திகளுக்கும்

கறி என்ற வார்த்தையை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இலக்கணத்தில் பூட்டுவிற் பொருள்கோள் மற்றும் திருமொழி மாற்று அல்லது மொழி மாற்று என்று கூறுவர். கறியாக (தொட்டுக் கொள்ளும் காயாக) சிறுவன், அளை, பயிறு இவற்றை மும்மூர்த்திகள் கொள்வார்கள். அதாவது சிவபெருமான் பிள்ளைக்கறியை கேட்டதாக 63 நாயன்மார்களில் ஒருவரான சிறு தொண்டர் நாயனாரின் கதையில் வரும். அதனால் சிவனுக்கு பிடித்த கறியாக பிள்ளையை புலவர் கூறுகிறார். அடுத்ததாக அளைந்த (கையாலோ மத்தாலோ கடையப்பட்ட பொருள்) பொருள் அதாவது வெண்ணெய் திருமாலுக்குரிய பிடித்த கறியாக கூறுகிறார். அடுத்ததாக பயறு (பச்சைப் பயறு) பிரம்மதேவனுக்கு பிடித்த கறியாகக் கூறுகிறார்.

அடுத்ததாக செந்நெல், கடுகு, பூ ஆகிய மூன்றும் உணவுகள். கறி என்பது தொட்டுக் கொள்வது. உணவு என்பது நாம் தொட்டுக்கையுடன் சாப்பிடுவது. இதில் செந்நெல்லை உணவாக பிரம்மதேவர் கொள்கிறார். கடுகி (வேகமாக / விரைவாக) வந்த பொருளான விஷயத்தை உணவாக சிவபெருமான் சாப்பிட்டார். அதேபோல இந்த உலகம் முடியும் பொழுது (பிரளயம்) இந்த பூமியை உணவாக பெருமாள் சாப்பிடுவார் என்று காளமேகப் புலவர் கூறுகிறார்.

அடுத்ததாக அவர்கள் கையில் இருக்கும் பொருட்களைப் பற்றி கூறுகிறார். மறி, திகிரி, தண்டு ஆகியவை அவர்கள் கையில் இருக்கும் என்று கூறுகிறார். மறியை (மான்) கையில் வைத்திருப்பவர் சிவபெருமான். திகிரியை (வட்டச் சக்கரம் - சுதர்சன சக்கரம்) கையில் வைத்திருப்பவர் திருமால். தண்டினை ( பிரம்ம தண்டம்) கையில் வைத்திருப்பவர் பிரம்ம தேவர் என்று கூறுகிறார்.

அடுத்ததாக அவர்கள் உடலில் அணிந்திருக்கும் பொருட்களை பற்றி கூறுகிறார். மணி, நூல், அரவம் ஆகியவற்றை உடலில் அணிந்து இருக்கின்றனர். அதாவது கௌஸ்துப மணியை திருமால் தனது உடலில் அணிந்திருக்கிறார். பூணூல் என்று கூறப்படும் முப்புரி நூலை பிரம்ம தேவர் தன்னுடைய உடலில் அணிந்திருக்கிறார். பாம்பினை சிவபெருமான் தன்னுடைய உடலில் அணிந்து இருக்கிறார் என்று புலவர் கூறுகிறார்.

அடுத்ததாக அவர்களுடைய வாகனங்களை பற்றி கூறுகிறார். வெற்று ஏறு, புள், அன்னம் ஆகியவைகளை வாகனமாக மும்மூர்த்திகளும் கொண்டிருக்கின்றன. வெற்று ஏறை (வெள்ளை காளை - நந்தி தேவர்) வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான். புள்ளை (பறவை - கருடன்) வாகனமாகக் கொண்டவர் திருமால். அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டவர் பிரம்மதேவர் என்று புலவர் கூறுகிறார்.

அடுத்ததாக அவர்கள் இருக்கக்கூடிய இடங்களை பற்றி கூறுகிறார். கல், தாழம், பூ ஆகியவைகளை தங்களுடைய இடங்களாக மும்மூர்த்திகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல் என்பது மலையை குறிக்கக்கூடிய வேறு ஒரு சொல். கைலாய மலையில் இருப்பது சிவபெருமான். தாழம் என்பது அமைதியான கடலை குறிக்கும் ஒரு சொல்லாகும். திருப்பாற்கடலில் இருப்பது திருமால். பூ என்பது பொதுவாக தாமரைப் பூவை தான் குறிக்கும். தாமரை பூவில் வீற்றிருப்பவர் பிரம்மதேவர் ஆவார் என்று புலவர் கூறுகிறார்.

இவ்வாறு ஒரு சிறிய செய்யுளுக்கு இவ்வளவு விஸ்தாரமான விளக்கத்தை கொடுப்பதால் தான் இதற்கு வித்தார கவி என்று பெயர். மற்ற வித்தார கவிகளை வரும் வாரம் பார்க்கலாம் .