தொடர்கள்
அழகு
செல்ல மகள் - மோகன் ஜி

20240410134643848.jpg

சித்திரம்: தேவா

செல்ல மகள்

வெள்ளைவெயில் காயுதடி

வெள்ளைக்கார சீமாட்டி!

வெள்ளாட்டுக் குட்டியின்னு

வெறும்பயலுவ சொல்வாங்க!

வெண்பட்டுப் பொதியடியோ நீ

வெள்ளி விளக்கடியோ!

வெண்கல மணியடியோ நீ!

வெண்ணெய்ப் பதுமையடி!

வெளிச்ச நிலவடியோ நீ

வெள்ளாம்பல் பூவடியோ!

உனக்கென்ன மகராசி!

உல்லாசத் தூக்கமடி!

என்பாடுதான் இப்போ

எசகேடா போச்சுதடி!

கண்முழிச்சா பசிச்சிருமே

கத்துவியே காலுதறி.

குழையொடிக்கப் போனவனை

குந்தியிங்கே பாத்திருக்கேன்.

துரட்டியோட போனவனோ

துடியான துஷ்டப்பள்ளை.

வேகாத வெய்யிலிலே

வேறெங்க போனானோ?

சகவாசம் சரியல்லே!

சலிப்பாக போச்சுதடி!

பொல்லாத புருஷனுக்கோ

பொழுதுக்கும் டாஸ்மாக்கு!

உப்புக்கண்டம் போட்டுத்தின்ன

உனக்கேதான் நாள்குறிப்பான்!

ஊர்கண்ணோ கேக்காதே.

ஊமைப்பேச்சு ஓடுதடி!

மாப்பிள்ளை பார்க்கலியோ

மாலினிக்கு என்கிறாங்க!

எகத்தாளம் ஏதுக்கடி?நான்

எட்டூருக்கு பார்ப்பேனே!

வளைஞ்சழகா கொம்புவச்ச

வலியகிடா பாத்திருக்கேன்.

காலநேரம் சேரும்வரை

காத்திரடி கண்மணியே!

காதலொண்ணும் பண்ணிடாத!

காலிப்பய ஊரிதடி!