தொடர்கள்
பொது
பல்ப் சீரீஸ் 8 “பங்கு போட்டுக்கொண்ட பல்பு” – மோஹன் ஜி


20240409175725295.jpg

[பீமாராவ்]

"ராஜன்! மோகன்! ரெண்டு பேரும் 'சய்ங்காளம்' ஃப்ரீயாப்பா?"

கேட்டவர்: பீமாராவ். எங்களோட கிளை மேளாளர். அப்பாவி cum அசட்டு மனுஷன்.

20240409175911543.jpg

[மோகனும் ராஜனும்]

கேட்கப்பட்டவர்கள்: மோகனும் ராஜனும் ( 22 வயசு கட்டிளங்காளைகள்)

இடம்: நாங்கள் பணிபுரிந்த வங்கிக் கிளை, பெங்களூரு

காலம்: வேறென்ன? போறாத காலம்தான்!

நாற்பத்தியிரண்டு வருடங்களுக்கு முன்,

ஒரு சனிக்கிழமை

திணை: பல்பு சீரிஸ்

"ஏதுக்கு சார்? சினிமா கூட்டிட்டுப் போகப் போறீங்களா?" இது ராஜன்.

பீமாராவின் கன்னடத்தில் பிசைந்த தமிழ் கதறியது.

"நம்மெ கௌடா இர்க்கறார் தானே?

அவர் வூட்டு மேரேஜ் பங்கஷன். சாய்ங்காளம் வீட்லயே ஃபங்க்‌ஷன். நமக்கட்ட நெரியா டிபாஸிட் இதேப்பா. நான் ஹெண்த்தியோட கோரமங்களா போணம்ப்பா. தயே மாடி ரண்டு பேரும் போங்கப்பா. இதோ கிப்ஃட் கூட ரெடி. சாயங்காலம் ஏளு மணிக்கு போய்ட்டு அப்டியே அங்க சாப்ட்டுட்டு வாங்க. எப்டியும் ஹோட்டல்ல தானே சாப்பிடணும்? ப்ளீஸ்"

கௌடா வீடு பக்கத்தாப்புல தான். "சரி சார். போறோம்!" என்று கிப்ஃட் பொதியை வாங்கினேன். மெத்தென்று இருந்தது. உள்ளே யார் ஸைசுக்கும் போதாமல் மிஸ்ஸ் பீமாராவ் பின்னிய ஸ்வெட்டராகத் தான் இருக்கும்.

"என்ன மச்சி? அவரு போங்கன்னு கேட்டவுடனே சரின்னு சொல்லிட்டே?" என்றான் ராஜன்.

"அவருக்கு ' நோ நோ'ன்னு சொல்லி அலுத்துப் போச்சுடா. ஒரு சேஞ்சுக்கு தான் 'சரி'ன்னேன்" என்றேன். சிரித்தான் ராஜன்.

மாலை ஏழுமணிக்கெல்லாம் பங்ஷன் வீட்டுக்குப் போய்விட்டோம். வசதியிருந்தும் சத்திரம் தேடாமல் வீட்டிலேயே திருமணம் நடத்தும் எளிமையை வியந்தபடி இடம் சேர்ந்தோம். வாசலில் நான்கு பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் புஸ்ஸென்று சீறிக் கொண்டிருந்தன. வாசலில் நான்கைந்து ஆண்கள். எங்களைக் கண்ட பெண்ணின் தகப்பனாரும் சில விநாடிகள் தயங்கி 'வாங்க' என்றார்.

"சௌக்கியமா?" என்ற குசலத்துடன் வீட்டினுள் புகுந்தோம். பேச நேரமில்லை. உள்ளே தலைகாட்டிவிட்டு, பரிசைக் கொடுத்துவிட்டு கிளம்பி விடலாம் என்பதே எங்கள் உத்தேசமும்.

பெரிய வீடு அது . ரேழியைத் தாண்டி முத்தம். ஸாரி.. முற்றம். அதைச்சுற்றி தாழ்வாரம். பெரிய தூண்களின் வரிசைத் தாண்டி இன்னும் அகலமான தாழ்வாரம்.

எங்கும் பளபளென பட்டுப்புடவை கட்டிய ஆண்ட்டிகள், அக்காக்கள், சில தங்கைகளும். சந்தண வத்தி நறுமணமும், சூடிய மல்லிகையின் மணமும் வியாபித்திருந்தது. சளசளவென்ற அந்தக் கூட்டத்தின் பேச்சொலி எங்களைக் கண்டவுடன் திடீரென நின்றது. அவர்களில் பலரும் எங்களின் அன்பான வாடிக்கையாளர்கள். அவர்களில் சிலரைப் பார்த்து உற்சாகமாய்க் கையை அசைத்தேன்.

ராஜன் தோளைப்பிடித்து உலுக்கியபடி

'அங்கப் பாருடா!' என்றான். அங்கே பார்க்கவும் செய்தேன். ஒரு மடக்கும் சேரில், புதிய பெட்ஷீட் கொண்டு போர்த்தி அதிலே ஒரு பதிமூணு பதினாலு வயசுப் பெண்ணை மாலைபோட்டு உட்கார வைத்திருந்தார்கள்.

அந்த மாநிற முகத்தில், கண்களைத் தவிர சந்தணத்தால் வரிவரியாய்ப் பூச்சு வேறு. மஞ்சள் நீராட்டுவிழா என்று உணர ஓரிரு நிமிடங்கள் பிடித்தது. அங்கே மருந்துக்குக் கூட ஒரு ஆம்பிளையாள் இல்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது. ராஜனின் கையைப்பிடித்துக் கொண்டு கொரோனா வார்டைக் கடப்பவன் போன்று வெளியேறினேன்.

ஒருவர் முகத்தை ஒருவர் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளாமல்தான் எங்கள் இருவருக்கும் பேச்சும் பெருமூச்சும் ஆனது.

"கிஃப்டை என்னடா செய்யிறது?" சுற்றிப் பார்த்தால் பெண்ணோட தகப்பனாரைக் காணவில்லை. வாசலில் நின்றிருந்த ஒருவரிடம், அவர் பெண்ணுக்கு மாமாவோ பெட்ரோமேக்ஸ்காரனோ தெரியாது.... கிஃப்டைக் கொடுத்தோம். ராஜன் தான் அந்தாளிடம் சொன்னான் . "ஒளகே கொட்பிடப்பா" (ஒ+ள+கே என வாசிக்கவும். கவனமா இருக்கணும் கேட்டீங்களா?)

சற்று நேர நடைக்குப் பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் அசடு வழியப் பார்த்துக் கொண்டோம். கொஞ்சமா சிரிச்சுகிட்டோம். கொஞ்சம் பலமா சிரிச்சுகிட்டோம். அப்புறமா அடங்காம எல்லோரும் திரும்பிப் பார்க்கிறமாதிரி சிரிச்சுகிட்டோம்.

"இந்தாளு கன்னடா இன்விடேஷனை சரியாப் பார்க்காம நம்மள இப்படி ஜோக்கரா ஆக்கிட்டாரு பாரேன்"

"மோகன்.. நாளேலருந்து கஸ்டமர் மாமிகள் நம்மள வச்சு கும்மியடிக்கப் போறாங்க பாரு!

ஒரு வாரம் லீவு போட்டுட்டு சென்னைக்கு ஓடிடலாமா?"

"திரும்பி வந்தப்புறம் அதுக்கடுத்த வாரம் கச்சேரியை வச்சுக்குவாங்க ராஜன்! கஷ்டத்தை ஃபேஸ் பண்ணிக்கலாம் மச்சி! எவ்ளோ பார்த்துட்டோம்... சியர் அப் மேன்"

" நீ எப்பவும்போல பீமராவ் சார்கிட்ட 'நோ' சொல்லித் தொலைச்சிருக்கலாம் மோகன்"

எங்கள் கிளை குடியிருப்புப் பகுதியில் இருந்தது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இல்லத்தரசிகள். பல மாலைவேளைகளில் வீட்டில் செய்த பக்கோடா, பிதிர்பேணி என டிபன்பாக்ஸில் கொண்டு தந்த அன்னபூரணிகள்!

அவ்ளோ தான்... போய் அடுத்த போஸ்ட்டைப் பாருங்க! அடுத்த நாள் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்கணும்... அவ்ளோ தானே?

என்னத்த சொல்றது? அடுத்த ஒரு வாரம் எங்களிருவரையும் கஸ்டமர் அக்காஸ், ஆண்ட்டீஸ்லாம் விசாரிச்சும் நமுட்டு சிரிப்பாலயும் சிறப்பு செஞ்சிட்டாங்கப்பு!

யாரும் சும்மா சிரிச்சா கூட எங்க மேட்டர் தெரிஞ்சி சிரிக்கிறாப்பலயே ஃபீலிங்க்கு!!