தொடர்ந்து சில வாரங்களாக, பெண்கள் சுய நிர்ணய உரிமை எனும் தலைப்பின் கீழ், கட்டுரைகள் எழுதி வருகிறேன். கல்வி, தன்னை அறிதல், உணர்வு நுண்ணறிவு, பொருளாதாரம், தகவல் தொடர்பு, என முன்னேற்றத்திற்குத் தேவையானவற்றை, இக்கட்டுரைகளின் வாயிலாகத் தெரிந்துக் கொள்ளலாம். மக்களிடம் இச்சிந்தனைகளைக் கொண்டு சேர்க்க வாய்ப்பளித்த விகடகவி ஆசிரியர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடர் கட்டுரையின் இறுதியாக, இன்று, பெண்கள் கையாள வேண்டிய இரு முக்கிய அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. தோல்வியைக் கண்டு அஞ்சவேண்டாம்.
2. எக்காரணத்திற்காகவும் நற்பண்புகள் மற்றும் கண்ணியத்தைக் கைவிட வேண்டாம்.
தோல்வியைக் கண்டு அஞ்சவேண்டாம் : விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி.
மனிதர்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் மட்டுமே சாதனை படைப்பதில்லை. மாறாக, தோல்விதான் அவர்கள் அடையும் சாதனைக்கான படிக்கற்களாக மாறுகின்றன. எந்த ஒரு முன்ணறிவிப்போ, படிப்போ, அறிவுரையோ அல்லது உதாரணமோ, தோல்வியைப் போல நமக்கு ஒருபோதும் கற்பிக்க முடியாது.
நம் திட்டங்கள் தவறிவிட்டன என்பதற்காக, இந்த உலகம் முடிவுக்கு வந்துவிடாது, சமுதாயம் அழிவை நோக்கிச் செல்லாது. தற்போதைய தோல்வி, எதிர்காலத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க நமக்குக் கற்பிக்கும்.
ஜே.கே. ரவுலிங்கின் - ‘ஆரீ பாட்டர்’ தொடர் கதையின் எழுத்தாளர். தன் ஆரம்பக்காலங்களில், கணவன் கைவிட்ட நிலையில், போதிய வருமானம் இல்லாமல், மகளை வளர்க்கப் போராடினார். அவரது தாயின் இழப்பு ஒரு பேரிடியாக மாறியது. Severe Depression எனும் மன அழுத்தத்திற்கு ஆளானார். அரசாங்க சலுகைகள் பெற்று வாழ்ந்து வந்தார். ஒரு முறை மான்செஸ்டர் (Manchester) நகரத்திற்கு இரயிலில் பயணிக்கும் போது, ‘ஆரி பாட்டர்’ கதைக்கான கரு அவர் மனதில் உதித்தது. மறந்து விடக்கூடாது என்பதற்காக, தன் கைக் குட்டையில் குறிப்பெழுதி வைத்துக் கொண்டார்.
பின் கதைகளை எழுதி முடித்து அச்சிற்கு கொடுத்த போது, பல பதிப்பகங்கள் அவர் கதைகளை நிராகரித்தனர். இறுதியாக, 1996ல், அவருடையப் புத்தகத்தை ‘ப்ளூம்ஸ்பரி’ பதிப்பகம் வெளியிட்டது. அதன்பின் அவர் அடைந்த வெற்றிக்கு அளவே இல்லை. துவண்டுப் போகாத மனநிலையும், விடா முயற்சியும், அவருக்குப் பல கோடிகளைப் பெற்றுத் தந்தது.
“Life cannot be lived by avoiding failure.”
“தோல்வியைத் தவிர்த்து வாழ்க்கையை வாழ முடியாது”. இது தான் ரவுலிங் தன் நேர்காணலில் சொன்ன தாரக மந்திரம்.
நற்பண்புகள் மற்றும் கண்ணியம் :
நற்பண்புகள் (virtues) என்பது வேறு, கண்ணியம் (dignity) என்பது வேறு. இந்தக் குணங்களைக் கொண்ட ஒரு நபர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவார். உலகம் முழுவதிலும், விவேகம் உள்ளவர்கள், எல்லா இடங்களிலும் கண்ணியமானவர்களாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் அறியாமையில் இருப்பவர்கள், வீட்டில் மட்டுமே கண்ணியத்துடன் காணப்படுவார்கள்.
நல்ல பழக்கவழக்கங்கள் என்பது, வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாகும். நற்பண்புகள், வெறும் வெளிப்புறத் தோற்றம் அல்ல. அவை ஒரு உள்ளார்ந்த நல்லொழுக்கமாகும். மரியாதை என்பது, இதயத்திலிருந்து வெளிப்பட வேண்டும்.
கண்ணியம் மற்றும் நற்பண்புகள் உள்ளடக்கிய ஒரு பெண் மற்றவர்களால் மதிக்கப்படுவார். அவருடைய வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஒத்துழைப்பைப் பெற அனைவரும் விரும்புவார்கள். இக்குணங்கள் கொண்ட பெண்ணின் வார்த்தைகளும் செயல்களும், உண்மையானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கும். இதனால் அவருடைய செல்வாக்கு உயரும். கண்ணியம் மற்றும் நற்பண்புகளை உள்ளடக்கிய ஒரு பெண் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தன் சுயமதிப்பை உணர்ந்து, தனக்கான வாய்ப்பு மற்றும் வளங்களைப் பெற்று, உரிமையுடன் தனக்கானத் தீர்மானங்களை எடுத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதையை நோக்கிச் செல்லவேண்டும். பாலின வேறுபாட்டைக் களைப்போம், ஒன்றுப்பட்டு முன்னேறுவோம்.
என் கட்டுரைகள் அனைத்தும் வாசகர்களைச் சென்றடையும் வரை, பொறுமையுடன் காத்திருப்பேன். ஜே.கே. ரவுளிங்கைப் போல், விடா முயற்சியுடன் பல நற் சிந்தனைகளைத் தொடர்ந்துப் பகிர்வேன்.
நன்றி.
பத்மா அமர்நாத்
மீண்டும் சந்திப்போம்.
Leave a comment
Upload